அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ!!

0
53

அவுஸ்திரேலியாவின் மேற்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் அப்பகுதி மக்களை  உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தின் தலைநகரான பெர்த் நகரத்தின் புறநகரின் வனப்பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தீயணைப்புப் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஃபெர்னாண்டெல் பகுதியில் உண்டான காட்டுத் தீயானது வடமேற்கு திசையில் நகர்ந்து அருகிலுள்ள கேனிங் ஆற்று பகுதியில் பரவியுள்ளது.

இதுகுறித்து தீயணைப்புப் படை வெளியிட்ட அறிக்கையில், காட்டுத் தீயினால் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், பாதைகள் தெளிவாகயிருந்தால் அப்பகுதி மக்கள்  உடனடியாக வெளியேறி மேற்கு திசையில் பாதுகாப்பான இடத்தை நோக்கிச் செல்ல வேண்டும் எனவும்  அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இருப்பினும், உடனடியாக வெளியேற முடியாத மக்கள் நீர் வசதியுள்ள அறையில் பாதுகாப்பாக தஞ்சமடையுமாறும் கூறப்பட்டிருந்தது.

பின்னர், காலை 8 மணியளவில் இந்தக் காட்டுத் தீயினால் மக்களின் வீடுகளுக்கோ அல்லது உயிர்களுக்கோ எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை எனக் கூறி தீயணைப்புப் படை தனது செயற்பாடுகளைக் குறைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.  

ஆனால், மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சரிந்துள்ளதால் பாதுகாப்பு கருதி அங்கிருந்து வெளியேறிய மக்கள் உடனடியாக திரும்ப வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.