அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம்

0
11

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நாளை புதன்கிழமை (12) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகளைக் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை முன்னிட்டு 16 வீரர்களைக் கொண்ட இலங்கை குழாம் பெயரிடப்பட்டுள்ளது.  நியூஸிலாந்துக்கு எதிராக இவ் வருட முற்பகுதியில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாத்தில் இடம்பெற்றவர்களில்  சகலதுறை வீரர் சமிந்து விக்ரமசிங்க மாத்திரமே நீக்கப்பட்டுள்ளார்.

இலங்கையைப் பொறுத்த மட்டில் இந்தத் தொடர் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால், பாகிஸ்தானிலும் துபாயிலும் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலியா பங்குபற்றவுள்ளதால் இந்தத் தொடர் அதன் பலத்தைப் பரீட்சிக்கும் போட்டியாக அமையவுள்ளது.

சரித் அசலன்க தலைமையிலான இலங்கை குழாத்தில் துடுப்பாட்ட வீரர்கள் ஐவர், சகலதுறை வீரர்கள் நால்வர், பந்துவீச்சாளர்கள் எழுவர் இடம்பெறுகின்றனர். இதற்கு அமைய இலங்கையின் துடுப்பாட்டவரிசை 7 அல்லது 8ஆம் இலக்கம் வரை நீண்டுக்கொண்டு போகிறது.

பெத்தும் நிஸ்ஸன்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ் ஆகிய மூவரும் பிரதான துடுப்பாட்ட வீரர்களாக குழாத்தில் இடம்பெறுகின்றனர். அவர்களுடன் நிஷான் மதுஷ்க, நுவனிது பெர்னாண்டோ ஆகியோரும் துடுப்பாட்ட வீரர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

சகலதுறை வீரர்களான சரித் அசலன்க, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, வனிந்து ஹசரங்க ஆகிய நால்வரும் துடுப்பாட்டத்தைப் பலப்படுத்தவுள்ளனர். பந்துவீச்சாளர்களாக துனித் வெல்லாலகே,  மஹீஷ் தீக்ஷன,  அசித்த பெர்னாண்டோ, ஈஷான் மாலிங்க ஆகியோர் இறுதி அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.

இவர்களைவிட லஹிரு குமார, மொஹமத் ஷிராஸ், ஜெவ்றி வெண்டசே ஆகியோரும் குழாத்தில் இடம்பெறுகின்றனர்.