அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் நலன்புரி நன்மைகள் சபையின் பெயர் பட்டியலில் பெயர் இடம்பெறாத மக்களின் மேன்முறையீட்டு விண்ணபங்களை
ஏற்றுக்கொண்டு அவர்களுக்கான மீள்பரிசீலனைகள் திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அரசினால் கடந்தவாரம் வெளியீடப்பட்டுள்ள நலன்புரி நன்மைகள் சபையின் கொடுப்பனவுகள் வழங்கும் பெயர்ப் பட்டியலில் தமது பெயர்கள் இடம்பெறாது
அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து திருக்கோவில் பிரதேச செயலகத்திற்கு வருகைதந்திருந்த மக்கள் அதற்கான காரணங்களை பிரதேச செயலாளரிடம் கோரி இருந்தனர்.
இது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் திருக்கோவில் பிரதேச செயலாளர் எடுத்துரைத்திருந்த நிலையில், மேன்முறையீட்டு விண்ணப்பங்களை பலரும் சமர்ப்பித்து வருகின்றனர்.
உதவி திட்டமிடல் பணிப்பாளர் அனோஜா உஷாந் அவர்களின் நேரடி கண்காணிப்பில், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய, குழுவொன்று, ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவுகளுக்கும் தனித் தனியாக அமைக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுகின்றன.
திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் கடந்த சனிக்கிழமை ஆரம்பமான மேன்முறையீட்ட விண்ணப்பங்களை பரிசீலிக்கும் வேலைத்திட்டமானது தொடர்ந்து எதிர்வரும் 30ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.