“அசிங்கமான அமெரிக்கரை வைத்துக்கொண்டு இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது. எனவே, அரசின் சாதாரண பெரும்பான்மை பலத்தையும் விரைவில் இல்லாமல் செய்வோம்.” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.
11 கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று கண்டிக்கு சென்று வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டனர். இதன்பின்னர் மகாநாயக்க தேரர்களை சந்தித்து, தமது வேலைத்திட்டத்தை கையளித்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களுக்குக் கருத்து வெளியிட்ட விமல் வீரவன்ஸ,
“நாட்டை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்தை நாம் முன்வைத்தோம். அமைச்சரவையில் இருந்து எம்மை நீக்கினர். ஆனால், நாம் வேலைத்திட்டத்தை கைவிடமாட்டோம். அதனை தொடர்ந்து முன்னெடுப்போம்.
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ மிக மோசமானவர், அவருக்கு எப்படி கதைப்பதென்றுகூட தெரியாது. அது நேற்றைய சர்வகட்சி மாநாட்டில் புலனானது. எனவே, இந்த அசிங்கமான அமெரிக்கரை வைத்துக்கொண்டு பயணிக்க முடியாது. எனவே, விரைவில் அரசின் சாதாரண பெரும்பான்மையையும் இல்லாமல் செய்வோம்.” – என்றார்.
இதன்போது, பஸில் ராஜபக்ஷவின் அரசியல் வாழ்வுக்கு முடிவு கட்டிவிட்டு நாமல் ராஜபக்ஷவை பதவிக்கு கொண்டு வரும் நாடகத்தையே 11 கட்சிகளும் முன்னெடுக்கின்றன என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மறுத்த அவர், “எந்த ராஜபக்ஷர்களுக்காகவும் சோரம் போகத் தயாரில்லை”, என்று கூறினார்.