பரபரப்பான கட்டத்தில் நேர்த்தியாக பந்து வீசி மேக்ஸ்வெல்லை பும்ரா வெளியேற்ற, இறுதியில் இந்தியா வெற்றி பெற்றது.
அவுஸ்திரேலியா – இந்தியா மோதிய 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கான்பெராவிலுள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கப்டன் கோலி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 302 ரன்களை குவித்தது. கப்டன் விராட் கோலி 63 ரன்கள் விளாசினார். அதிரடியாக ஆடிய ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 76 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார். இதேபோன்று அவருக்கு இணையாக அதிரடி காட்டிய ஜடேஜா 50 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 66 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமலிருந்தார். இந்த ஜோடி 150 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு அவுஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அவுஸ்திரேலிய அணியின் ஆரோன் பிஞ்ச் – லாபஸ்சேன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். லாபஸ்சேன்-ஐ க்ளீன் போல்டாக்கி வெளியேற்றினார் டி நடராஜன். இதனால் 6 ஓவருக்குள் அவுஸ்திரேலியா முதல் விக்கெட்டை இழந்தது. அடுத்து வந்த நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்மித் ஷர்துல் தாகூர் பந்தில் வீழ்ந்தார்.
முன்னணி பேட்ஸ்மேன்கள் இருவர் வெளியேற அவுஸ்திரேலியா திணற ஆரம்பித்தது. கப்டன் ஆரோன் பிஞ்ச் ஒரு பக்கம் நிலைத்து நின்று ஆடினார். அவர் 75 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஹென்ரிக்ஸ் 22, க்ரீன் 21 ரன்னிலும் வெளியேறினர்.
இதனால் அவுஸ்திரேலியா தோல்வியை நோக்கிச் சென்றது. ஆனால் அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் களமிறங்கியதில் இருந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு துணையாக அலேக்ஸ் ஹேரியும் ரன்கள் அடிக்க அவுஸ்திரேலியா பக்கம் ஆட்டம் சென்றது. அலேக்ஸ் கேரி 38 ரன்னில் ரன்அவுட் ஆனார். இதனால் இந்தியா சற்று ஆறுதல் அடைந்தது.
43-வது ஓவர் முடிவில் அவுஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்திருந்தது, 42 பந்தில் 57 ரன்கள் தேவைப்பட்டது. 44-வது ஓவரை நடராஜன் வீசினார். முதல் பந்தை சிக்சருக்கு தூக்கி 33 பந்தில் அரைசதம் அடித்தார் மேக்ஸ்வெல். நடராஜன் இந்த ஓவரில மேலும் இரண்டு பவுண்டரிகள் கொடுக்க அவுஸ்திரேலியா 18 ரன்கள் சேர்த்தது.
இதனால் 36 பந்தில் 39 ரன்களே தேவைப்பட்டது. 45ஆவது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 4ஆவது பந்தை மேக்ஸ்வெல் சந்தித்தார். பும்ரா வீசிய பந்தை மேக்ஸ்வெல்லால் கணிக்க முடியவில்லை. இதனால் ஸ்டம்பை பறிகொடுத்தார். மேக்ஸ்வெல் 38 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 59 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அப்போது 33 பந்தில் 35 ரன்கள் தேவைப்பட்டது.
அதன்பின் ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது. முந்தைய ஓவரில் 18 ரன்கள் விட்டுக்கொடுத்த நடராஜன், 46ஆவது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 47ஆவது ஓவரை ஷர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் ஒரு விக்கெட் வீழ்த்தி 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
கடைசி 3 ஓவரில் 25 ரன்கள் தேவைப்பட்டது. 48ஆவது ஓவரை நடராஜன் வீசினார். இந்த ஓவரில் ஒரு விக்கெட் வீழ்த்தியதுடன் 4 ரன்களே விட்டுக்கொடுத்தார். ஷர்துல் தாகூர் 49ஆவது ஓவரில் 6 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
இதனால் கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது. 3-வது பந்தில் பும்ரா விக்கெட் வீழ்த்த அவுஸ்திரேலியா 49.3 ஓவரில் 289 ரன்கள் அடித்து ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் இரண்டு போட்டிகளில் ஏற்கனவே அவுஸ்திரேலியா வெற்றி பெற்றதால் தொடரை வென்றது. இந்தியா ஆறுதல் வெற்றி பெற்றது.
இந்திய அணி சார்பில் பும்ரா 43 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும், நடராஜன் 70 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும், ஷர்துல் தாகூர் 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.