இடதுசாரிகளின் பௌத்த மறுமலச்சியா?

0
17

இலங்கையின் அரசியல் வரலாற்றைப் பொறுத்தவரையில் அநுர குமார திஸநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை முதலாவது இடதுசாரி அரசாங்கம் என்று நோக்குபவர்கள் உண்டு. அநுர குமார திஸநாயக்க ஒரு மார்க்சிஸ்டாக இப்போது இல்லை. அவர் ஒரு யதார்த்தவாதியாகவே இருக்கிறார் என்று நோக்குபவர்களும் உண்டு.

அவர் எவ்வாறு நோக்கப்பட்டாலும்கூட, வரலாற்றில் இடதுசாரி கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு, அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் இரண்டு முறை ஆயுதப் புரட்சியில் ஈடுபட்டுத் தோல்வியுற்ற ஓர் அமைப்பான ஜே. வி. பி. முதன்முறையாக ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறது. சிவப்பு நிறத்தைத் தங்களின் கட்சியின் நிறமாகவும் தங்களின் பணிமனைகளில் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் ஆகியோரின் புகைப்படங்களை காட்சிப்படுத்தியிருக்கும் ஓர் அரசியல் இயக்கம் வரலாற்றில் முதல் முறையாக கொழும்பின் அதிகாரத்தைத் தங்கள் வசப்படுத்தியிருக்கிறது.

இன்றைய சூழலில் தூய இடதுசாரிகளாக அதிகாரத்தில் இருப்பது என்பது ஓர் அழகிய பகல் கனவு மட்டுமேயாகும். இன்றைய உலக அரசியல் ஒழுங்கில் அவ்வாறு இருக்கவும் முடியாது. ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தங்களை ஒப்பீட்டடிப்படையில் வித்தியாசமானவர்களாக முன்னிறுத்தியவர்கள். அதிகாரத்தைக் கையாள்வதிலும் – மக்கள் நலனுக்கான கோரிக்கைகளிலும் தங்களை ஏனைய எந்தவொரு கட்சிகளை விடவும் வித்தியாசமானவர்களாகக் காட்டிக் கொண்டவர்கள் – இப்போதும் தங்களை அவ்வாறே சித்தரித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், நடைமுறையில் இடதுசாரித்துவத்துக்கு நெருக்கமாக இருப்பதை விடவும் சிங்கள பெரும்பான்மையை கட்டிப்போடுவதற்கு பயன்படும் ஜனரஞ்சக வாதத்துக்கே ஜே. வி. பியும் – அதன் தலைமையில் முகங்காட்டும், தேசிய மக்கள் சக்தியும் இயங்கிவருகின்றன – என்று கூறக் கூடியளவுக்கே அவர்களின் அணுகுமுறைகள் வெளித்தெரிகின்றன. இலங்கையில் பௌத்த மறுமலர்ச்சியை ஏற்படுத்தப் போவதாக அநுர குமார திஸநாயக்க பௌத்த மதபீடாதிபதிகளின் முன்னிலையில் கூறுகின்றார்.

பௌத்த மறுமலர்ச்சி என்பதால் சுட்டிக்காட்டப்படுவது என்ன? ஏனைய அரசாங்கங்களுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் பௌத்தத்தை நோக்குவதிலுள்ள வேறுபாடு என்ன? அப்படியொரு வேறுபாடு உண்மையிலேயே இருக்கிறதா? இலங்கையின் இன அரசியல் வரலாற்றைப் பொறுத்தவரையில் பௌத்தம் ஓர் இன ஐக்கியத்துக்கான, பரஸ்பர கௌரவத்துக்கான ஒரு கருவியாகத் தொழிற்படவில்லை. மாறாக, இனங்களுக்கிடையில் குரோதங்களையும் வெறுப்புணர்வையும் விதைப்பதற்கே பயன்பட்டிருக்கிறது.

உண்மையில் இது புத்தரின் போதனைகளுக்கு எதிரானது. புத்தரின் போதனையான தம்மபதமானது அன்பு அன்பை விதைக்கும், வெறுப்பு வெறுப்பை விதைக்கும் என்று போதிக்கிறது. ஆனால், நடைமுறையில் புத்தரின் உண்மையான போதனைகளுக்கு மாறாகவே, இலங்கையின் பௌத்தம் கையாளப்பட்டிருக்கிறது. இந்தப் பின்புலத்தில் அநுர குமார திஸநாயக்க தலைமையிலான அரசாங்கம் எவ்வாறானதொரு பௌத்த மறுமலர்ச்சியை முன்கொண்டுவர முயற்சிக்கிறது. முன்னைய வெறுப்புவாதத்தின் ஊற்றாக இருந்த அந்த பௌத்தத்தையா அல்லது புத்தரின் போதனைகளுக்கு அமைவான பௌத்தத்தை – அதன் உண்மையான அர்த்தத்தில் மீடடெடுக்கும் மறுமலர்ச்சியா?