இணையவழி ஊடாக ஆசன ஒதுக்கீடு செய்யும் முறைமையில் சிக்கல்!

0
124

நீண்டதூர தொடருந்து சேவையின் தொடருந்துகளில் இணையவழி ஊடாக ஆசன ஒதுக்கீடு செய்யும் முறைமையில் தொழில்நுட்ப சிக்கல்கள் காணப்படுமாயின், அடுத்த சில நாட்களில் அந்த சிக்கல்களை நிவர்த்தி செய்து, உரிய முறையில் அந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், இணையவழி ஊடாக ஆசன ஒதுக்கீடு செய்யும் முறைமையில் சிக்கல்கள் உள்ளதாக சில பயணிகள் முறைப்பாடளித்துள்ளனர்.

தொடருந்து திணைக்களம் முதல் முறையாக இணையவழி ஊடாக ஆசனத்தை பதிவு செய்வதற்கான முறைமையை அண்மையில் அறிமுகப்படுத்தியது.

அதன்படி, இணையத்தின் ஊடாக தொடருந்து ஆசனத்தை முன்பதிவு செய்திருந்தாலும் சில பயணிகளுக்கான ஆசனம் அவர்கள் தொடருந்து நிலையத்திற்கு பிரவேசித்த பின்னரும் ஒதுக்கப்படவில்லை என குறிப்பிடுகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில், எமது செய்தி சேவை தொடருந்து திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் எம்.ஜி.இந்திபொலவிடம் வினவியது.

இதற்கு பதிலளித்த அவர், தொடருந்துகளில் ஆசனங்களை ஒதுக்கும் முறைமையில் ஏற்பட்டுள்ள தொழிநுட்ப சிக்கல்களை நீக்கி தொடர்ந்தும் அந்த முறைமை முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டார்.

இந்த முறைமை நாடளாவிய ரீதியில் முதன்முறையாக அமுல்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் என்பதனால் தொழில்நுட்பச் சிக்கல்கள் இருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.