சனல் – 4 தொலைக்காட்சியின் காணொலி தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் ஓயவில்லை.
ஒருவேளை இதுதான் சனல் – 4 காணொலியின் உண்மையான நோக்கமா – ஏனெனில் ஒரு விடயம் பேசு பொருளாகும்போது ஏனைய அனைத்து விடயங்களும் கிடப்புக்கு சென்றுவிடுவதுண்டு.
அனைவருக்கும் மெல்லுவதற்கு கிடைத்த அவல் போன்றே குறித்த காணொலி விவகாரம் அமைந்திருக்கின்றது.
தமிழ் இணைய ஊடகங்களை நோக்கினால் அவர்களின் கதைகளோ துப்பறியும் தொடர் போன்றிருக்கின்றது.
இது ராஜபக்ஷக்களை இலக்கு வைத்தே வெளியிடப்பட்டிருக்கின்றது.
அதில் சந்தேகமில்லை.
இதன் உள்ளடக்கத்தை நோக்குபவர்கள் எவராலும் இதனை இலகுவாக புரிந்துகொள்ள முடியும்.
இது எதிர்பார்ப்பது போன்று ராஜபக்ஷக்களின் அரசியல் எதிர்காலத்தில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை இப்போதைக்கு ஊகிப்பது சிரமம்.
ஏனெனில், இலங்கைத் தீவின் அரசியலில் ஆச்சரியங்கள் ஏராளம்.
ஓர் ஆசனத்தோடு அரசியல் வாழ்வின் நாட்களை எண்ணிக்கொண்டிருப்பதாக கருதப்பட்ட ரணில் விக்கிரமசிங்க நாட்டின் ஜனாதிபதியாக முடியுமென்றால் வீழ்ந்து கிடப்பதாகக் கருதப்படும் ராஜபக்ஷக்கள் எழமாட்டார்களென்று கூறுவது மிகவும் கடினமானது.
அவர்களின் செல்வாக்கு மோசமாக வீழ்ச்சியுற்றிருக்கின்றது என்பது உண்மைதான்.
ஆனால், அடித்தள சிங்கள மக்கள் எவ்வாறான புரிதலுடன் இருக்கின்றனர் என்பதை ஒரு தேர்தல் மட்டுமே வெளிப்படுத்த முடியும்.
இந்த நிலையில் சனல்- 4இன் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான காணொலியானது எதிர்பார்ப்பது போன்று தாக்கங்களை ஏற்படுத்துமா அல்லது இஸ்லாமிய சதியென்னும் பிரசாரமொன்றின் மூலம் அவர்கள் தங்களை மீண்டும் ஒழுங்குபடுத்திக் கொள்ள உதவுமா – என்பதை பொறுத்திருந்துதான் நோக்க வேண்டும்.
ஆனால், இந்த விடயத்தில் கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் கருத்துகளோ மிகவும் சுவாரசியமாக இருக்கின்றது.
குற்றவாளிகள் குற்றத்தை ஒப்புக் கொண்டால் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படுமாம்.
மன்னிப்பு வழங்குவதற்கு இது மாதா கோவில் விவகாரமல்ல.
எல்லை தாண்டிய இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல்.
இந்தத் தாக்குதலுக்கு உள்ளூர் மட்டத்தில் உதவியவர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படவேண்டும்.
அவர்களை அடையாளம் காணுவதன் ஊடாகத்தான் இது போன்ற எல்லைதாண்டிய பயங்கரவாத தாக்குதலிலிருந்து நாடு தப்பிக்கொள்ள முடியும்.
ஆனால், மல்கம் ரஞ்சித்தோ பாவமன்னிப்பு தொடர்பில் பேசிக் கொண்டிருக்கின்றார்.
இந்தத் தாக்குதல் இடம்பெற்ற காலத்திலிருந்து – தாக்குதல் தொடர்பில் முன்னுக்குப் பின்னான கருத்துகளையே ரஞ்சித் கூறி வருகின்றார்.
முதலில் இதற்கு பின்னால் ஒரு சக்திவாய்ந்த நாடு இருப்பதாகக்கூறினார்.
ஆனால், அந்த நாடு தொடர்பில் இன்றுவரையில் மல்கம் பேசியதில்லை.
பின்னர் மைத்திரிபால சிறிசேனதான் இதற்கு பின்னால் இருந்ததாகக் கூறினார்.
அவர் தண்டிக்கப்பட வேண்டுமென்று தொடர்ச்சியாகப் பேசிவந்தார்.
சில விடயங்களில் மைத்திரிபால குற்றவாளியென்றும் நீதிமன்றம் கூறியது.
ஆனால் தற்போது, சனல்- 4 காணொலியை தொடர்ந்து குற்றங்களை ஒப்புக்கொண்டால் மன்னிப்பு வழங்கத் தயாரென்று கூறுகின்றார்.
எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கை ஒன்றுக்கு மன்னிப்பு வழங்குவதற்கு ரஞ்சித் யார்? உண்மையில், எல்லைதாண்டிய இஸ்லாமிய பயங்கரவாத
பிரச்னை ஒன்று இலங்கையில் நகைச்சுவைக்குரிய விடயமாகிக்கொண்டிருக்கின்றது.