இது யுக புராணம் பாடும் காலமல்ல?

0
203

இது முள்ளிவாய்க்காலை நினைவுகூரும் 14ஆவது வருடம்.
முள்ளிவாய்க்காலை நினைவு கொள்வது, யுத்தத்துக்குள் அகப்பட்டு மரணித்த மக்களின் உறவுகளுக்கு உணர்வூர்வமான நாட்கள்.
யுத்தத்துக்குள் அகப்பட்டு தப்பித்துக்கொண்ட மக்களுக்கோ தாங்கள் பிழைத்துக்கொள்வதற்காக அலைந்த நாட்களின் நினைவுகளை மீட்டுக்கொள்ளும் நாட்கள்.
ஆனால், அரசியல் சமூகத்தினருக்கும் புத்திபூர்வமான சமூகம் ஒன்றுக்கும் இது வெறும் உணர்வுபூர்வமான விடயம் மட்டுமல்ல, விடயங்களை அறிவுரீதியாக எண்ணிப் பார்ப்பதற்கான நாட்களாகும்.
யுத்தத்தில் ஈடுபட்ட இரண்டு தரப்புகளுமே யுத்தத்தின் மீதான பிடியை தாங்கள் இழந்துவிடக்கூடாதென்னும் இலக்கிலேயே இறுதிவரையில் செயல்பட்டனர்.
இது யுத்தத்தின்போதான பொதுப் போக்குத்தான்.
ஆனால், இரண்டு தரப்புகளுமே வெற்றிக்கான யுத்தத்ததை தெரிவுசெய்யும்போது, யுத்தத்ததை நிறுத்தும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன.
உலகத்தை பொறுத்தவரையில் இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை புரிகின்றது.
அது ஓர் இறைமையுள்ள நாட்டின் விவகாரம்.
அதற்குள் நாம் தலையிட முடியாது.
பலம்பொருந்திய நாடுகள் யுத்தங்களுக்குள் சிக்குண்டுபோகும் சிறிய நாடுகளை இவ்வாறுதான் சாதாரணமாகக் கைகழுவிச் சென்றுவிடுகின்றன.
ஆப்கானிஸ்தானில் 20 வருடங்கள் நிலைகொண்டிருந்த அமெரிக்க படைகள் எந்த தலிபான்களை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றியதோ அதே தலிபான்களிடம் நாட்டை விட்டுவிட்டு வெளியேறிவிட்டன.
அந்த சந்தர்ப்பத்தில் ஓர் ஊடகவியலாளர் அமெரிக்க ஜனாதிபதி பைடனிடம் கேட்கின்றார் – ‘ஆப்கானிஸ்தான் மக்களை கைவிட்டுவிட்டீர்களே…’ – அதற்கு பைடனின் பதில் – ‘ஆப்கானியர்களுக்கே ஆப்கானிஸ்தானில் அக்கறையில்லாவிட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும்? – அவர்களுக்காக அமெரிக்க படைகள் செத்துக்கொண்டிருக்க முடியாது.’, இதுதான் பலம்பொருந்திய சக்திகளின் பதில்.
இதில், நாம் அதிர்ச்சியடைய ஒன்றுமில்லை.
இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் வன்னியிலிருந்து ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளையும் அங்கிருந்த அரசுசாரா நிறுவனங்களையும் வெளியேறுமாறு கூறியதைத் தொடர்ந்து அனைவரும் உடனடியாக வெளியேறிவிட்டனர்.
அங்குள்ள மக்கள் தொடர்பில் எவரும் அக்கறை காண்பிக்கவில்லை – அவர்களால் காண்பிக்கவும் முடியாது.
ஏனெனில், ஓர் அரசாங்கம் உங்களின் உயிருக்கு உத்தரவாதமில்லை என்றால் அதன் பின்னர் எவரும் யுத்த வலயத்துக்குள் இருக்க முடியாது.
இதுதான் யதார்த்தம்.
இந்தப் பின்னணியில்தான் வெற்றிக்கான சண்டையில் இலங்கை இராணுவம் இறுதியில் அவர்களுக்கான வெற்றியை ஈட்டியது.
இறுதி யுத்தத்தின்போது, வெற்றிக்காகப் போரிட்ட இரண்டு தரப்புகளும் எவ்வாறு செயலாற்றின என்பது தொடர்பில், அந்த சமயம் ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளராக இருந்த கோடன் வைஸ் இறுதி யுத்த அனுபவங்களை தொகுத்து, ‘கூண்டு’ – என்னும் தலைப்பில் நூலொன்றை வெளியிட்டிருக்கின்றார்.
அதில், இரண்டு தரப்புகளின் குற்றங்கள் தொடர்பிலும் பேசியிருக்கின்றார் – இரண்டு தரப்புகளுமே எவ்வாறு மக்களை காப்பாற்றுவதில் அக்கறையற்றிருந்தனர் என்பதைப் பற்றி பேசியிருக்கின்றார்.
பின்னர் கோடன் வைஸ் அமெரிக்காவின் புகழ்பெற்ற வெளிவிவகார சஞ்சிகையான, ‘பொறின்பொலிசி’யில் ‘புலிகளின் இரத்தம்’ என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினார் – அதில், ‘புலிகள் இல்லாத உலகம் முன்னரைவிடவும் சிறப்பாக இருக்கின்றது’, என்று எழுதினார்.
இன்று, 14 வருடங்கள் கழித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முள்ளிவாய்க்கால் நிகழ்வில் அவர் பேருரை ஆற்றவுள்ளார்.
நாடுகடந்த அரசாங்கம் மாற்றங்களை புரிந்துகொண்டு விட்டதா? அறிவின் துணையுடன் உலகை புரிந்துகொள்ள வேண்டுமென்று எண்ணும் – முயற்சிக்கும் தமிழ் சமூகத்தின் முன்னேறிய பிரிவினருக்கு இந்த நாட்கள் ஒருபோதும் யுகபுராணம் பாடும் அல்லது கவிதைகள் எழுதி மனதைத் தேற்றும் நாட்களல்ல.
நாம் எங்கு வீழ்ந்து போனோம்? – ஏன் வீழ்ந்து போனோம்? – ஏன் நம்மை யாரும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை? இந்த 14 வருடங்களில் ஏன் நமது முயற்சிகள் எவையுமே குறிப்பிட்டு சொல்லக்கூடிய வெற்றியை பெறமுடியவில்லை? உண்மையில், நமது அரசியல் எங்கு சிக்குண்டு போயிருக்கின்றது? இவ்வாறான கேள்விகளின் வழியாக கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்வது பற்றியே சிந்திக்கவேண்டும்.