இந்தியாவுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் இலங்கைக்கும் ஏற்படும் அச்சுறுத்தலே!

0
169

அரசியல் ரீதியாக இலங்கை நிலைமாறும் கட்டத்தில் இருக்கிறது. சமூக, அரசியல் ரீதியான ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. இலங்கை ஒரு சிக்கலான நாடு. பல மதங்கள், இனங்களுடன் 13ஆம் திருத்த சட்ட பிரச்சினையும் உள்ளது. நாம் ஒரு புதிய ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும் என இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவுக்கு ஏற்படும் எந்தவொரு பாதுகாப்பு அச்சுறுத்தலும் இலங்கைக்குமான பாதுகாப்பு அச்சுறுத்தல். இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எந்த ஒரு வெளிநாடும் இலங்கையின் துறைமுகங்களை பயன்படுத்த அனுமதிக்கப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை இந்திய நாடுகளின் உறவுகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். கடன் நெருக்கடியால் சிக்கியுள்ள இலங்கையின் நிலையான பொருளாதார மீட்சிக்கான திறவுகோல் இந்தியாவே. மூலோபாய ரீதியாக ஜப்பான், இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் மற்றும் இந்தியாவுடன் முத்தரப்பு ஒத்துழைப்பு வாய்ப்புகளை இலங்கை ஆராய்ந்து வருகிறது. இலங்கை இந்தியாவுடன் பொருளாதார ஒருங்கிணைப்பையே விரும்புகிறது. இது கடன் நெருக்கடியிலிருந்து விரைவாக மீள்வதை உறுதி செய்யும் என தெரிவித்தார். இதேநேரத்தில், அண்மையில் சீன இராணுவத்துக்கு சொந்தமான தொழில்நுட்ப கப்பலை இலங்கை அனுமதித்தது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், இது போன்ற பிரச்சினைகளுக்கு இரு நாடுகளும் தீர்வு காண அனுமதிக்கும் பொறிமுறையை இறுதி செய்ய இந்தியாவுடன் இலங்கை பேச்சு நடத்துகிறது. இந்தியாவுடனான பொருளாதார ஒருங்கிணைப்பு நடந்தவுடன் புவிசார் அரசியல் பிரச்சினைகள் தாமாகவே தீர்க்கப்படும். அதுவரை நாம் நிச்சயமாக பேச வேண்டும். நாம் அபாய எல்லைகளை தாண்டவில்லை. பாதுகாப்பு தொடர்பில் எமது அடிப்படை கொள்கை என்னவென்றால், இந்தியாவுக்கு ஏற்படும் எந்தவொரு பாதுகாப்பு அச்சுறுத்தலும் இலங்கைக்குமான பாதுகாப்பு அச்சுறுத்தலே. இந்தியாவும் இதையே நினைக்கும் என்று நம்புகிறோம் என குறிப்பிட்டார். 13ஆவது அரசமைப்பு திருத்தத்தின் கீழ் தமிழர் பிரச்சினையில் இலங்கை தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற போதுமான பங்களிப்பை செய்யவில்லை என மனித உரிமைகள் பேரவையில் இந்தியா கூறியமை தொடர்பில் கருத்து வெளியிட்ட மிலிந்த மொறகொட, ‘இந்திய அரசாங்கம் கூறியதில் புதிதாக எதுவுமும் இல்லை. ‘நுணுக்கம் மாறியிருக்கலாம்’ ஆனால், அரசியல் ரீதியாக இலங்கை நிலைமாறும் கட்டத்தில் இருக்கிறது. சமூக, அரசியல் ரீதியான ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. இலங்கை ஒரு சிக்கலான நாடு. பல மதங்கள், இனங்களுடன் 13ஆம் திருத்த சட்ட பிரச்சினையும் அதே வகையின் கீழ் வருகிறது. நாம் ஒரு புதிய ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.