இந்தியாவுடனான ஒப்பந்தங்களை வெளிப்படுத்தாதுவிட்டால் போராட்டம் – விமல் வீரவன்ச எச்சரிக்கை!

0
2

இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட 7 ஒப்பந்தங்களால் இலங்கைக்கு ஏதேனும் பாதிப்பு இல்லையாயின் ஏன் அவற்றை இரகசியமாக பேண வேண்டும். கைச்சாத்திட்ட ஒப்பந்தங்களை அரசாங்கம் உடன் வெளிப்படுத்த வேண்டும் இல்லையேல் அரசாங்கத்துக்கு எதிராக மக்களை ஒன்றுத்திரட்டுவோமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில்  நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

மக்களாணைக்கு முரணாக அரசாங்கம் திருட்டுத்தனமான முறையில் 2025.04.05 ஆம் திகதி 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுள்ளது. 

ஒப்பந்தங்கள் கைச்சாத்திட்டு 3 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் குறித்த ஒப்பந்தங்கள் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படவில்லை.

1987ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவுக்கு இந்தியா கடும் அழுத்தம் பிரயோகித்தது. இதன் விளைவாகவே இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதன் விளைவாகவே அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் கைச்சாத்திடப்பட்டது.

2008 ஆம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது சிபா ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடும் அழுத்தம் பிரயோகித்தார். அரசியல் தரப்பினர் மற்றும் சிவில் தரப்பினரின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை.

இலங்கைக்கு அழுத்தம் பிரயோகித்தே இந்தியா வரலாற்று காலம் முதல் பல ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுள்ளது.இந்திய பிரதமர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது 7 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

இந்த ஒப்பந்தங்கள் இதுவரையில் பாராளுமன்றத்துக்கும், நாட்டு மக்களுக்கும் இதுவரையில் வெளிப்படுத்தப்படவில்லை. இந்த ஒப்பந்தத்தால் இலங்கைக்கு ஏதேனும் பாதிப்பு இல்லையாயின் ஏன் ஒப்பந்தங்களை இரகசியமாக பேண வேண்டும். 

இந்தியாவுடன் கைச்சாத்திட்ட ஒப்பந்தங்களை அரசாங்கம் உடன் வெளிப்படுத்த வேண்டும் இல்லையேல் அரசாங்கத்துக்கு எதிராக மக்களை ஒன்றுத்திரட்டுவோம்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாட்டிலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுடன் நெருக்கமாகவுள்ளார். முன்வைக்கும் சகல ஒப்பந்தங்களுக்கும்  முழுமையாக இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.