28 C
Colombo
Sunday, September 8, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இந்தியாவை அச்சுறுத்தும் நிபா வைரஸ் தொற்று

உயிராபத்தை ஏற்படுத்தக் கூடிய நிபா வைரஸ் இந்தியாவில் சிலருக்குத் தொற்றியதையடுத்து மக்கள் மத்தியில் அச்சம் தோன்றியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் அருகே 14 வயது சிறுவனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அச்சிறுவனின் உமிழ்நீர் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சிறுவனுக்கு நிபா காய்ச்சல் அறிகுறி தெரியவந்தது. புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையிலும் இது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சிறுவன் தனிமைப்படுத்தப்பட்டான்.

பின்னர், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி வார்ட்டில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை தரப்பட்டு வந்தது. அச்சிறுவனுக்கு அவுஸ்திரேலியாவில் இருந்து மருந்து இறக்குமதி செய்ய மருத்துவர்கள் முடிவெடுத்தனர். ஆனால், மருந்து செலுத்துவதற்கு முன்பாகவே சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.

சிறுவனுக்கு தொடர் சிகிச்சை தரப்பட்ட நிலையில் காலை 10.50 அளவில் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் 11.30 மணியளவில் அச்சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாகவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ​ேஜார்ஜ் தெரிவித்துள்ளார். சிறுவனுடன் தொடர்பில் இருந்ததாக 246 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும் அதில் 63 பேர் தொற்றால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளவர்கள் என்றும் கேரள மருத்துவத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதிப்பின் அறிகுறிகள் உள்ள 3 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நிலைமையை கண்காணித்து வருவதாக கேரள மாநில அரசு தெரிவித்துள்து.

கடுமையான காய்ச்சல், வாந்தி மற்றும் சுவாச நோய்த்தொற்று ஆகியவை நிபா வைரஸின் அறிகுறிகளாக கூறப்படுகின்றன. நோய் தீவிரமடையும் போது, வலிப்பு ஏற்படலாம் என்றும் அது தொடரும் பட்சத்தில் மூளை வீக்கம் ஏற்பட்டு நோயாளி கோமா நிலைக்கு தள்ளப்படலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக இந்தவகை நோய் பன்றி, வௌவால் போன்றவற்றிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும். அதனாலேயே விலங்குகள், பறவைகள் பாதி உண்டு வீசப்பட்ட பழங்களை உட்கொள்ள வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நோயை கட்டுப்படுத்த தடுப்பூசி இதுவரை கண்டறியப்படவில்லை என்பதாலும், மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கும் பரவும் என்பதாலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கேரள எல்லையோரம் உள்ள தமிழக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தி உள்ள தமிழ்நாடு அரசு, நிபா வைரஸ் முன்னெச்சரிக்கை தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles