இந்தியாவை அழைப்பதற்கு முன்னர்!

0
94

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மூன்றாவது தடவையாக பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி அவர்களுக்கான வாழ்த்துச் செய்தியில், ஈழத் தமிழ் மக்களுக்கான சமஷ்டித்தீர்வுக்கு இந்தியா அரணாக வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார். இந்திய பிரதமர் மோடியின் அழைப்பையே உதாசீனம் செய்த சம்பந்தனின் தலைமையின் கீழ் செயல்பட்ட சிறீதரன், இந்திய பிரதமருக்கு வாழ்த்துச் செய்தியை அனுப்பியது வரவேற்கப்பட வேண்டிய விடயம்தான் – எனினும், இந்தியாவை நோக்கி அழைப்பு விடுவதற்கு முன்னர், தமிழ் கட்சிகளின் இன்றைய நிலையை சரிசெய்ய வேண்டியதே முதன்மையானதாகும்.


இலங்கை தமிழ் அரசுக் கட்சியை முதலில் சரி செய்ய வேண்டியிருக்கின்றது அத்தோடு, ஏனைய கட்சிகளையும் உள்வாங்கி ஜக்கிய முன்னணி ஒன்றை ஏற்படுத்த வேண்டியிருக்கின்றது. அதன் பின்னர்தான் இந்தியாவை நோக்கிச் செல்ல வேண்டும். தமிழ் அரசு கட்சிக்கான தலைவர் தெரிவில் வெற்றிபெற்றவர் சிறீதரன் ஆனாலும் அவரால் தலைவராக செயல்பட முடியவில்லை அந்தளவுக்கு கட்சி, உள் முரண்பாடுகளுக்குள் சிக்குண்டு, சீரழிந்து கொண்டிருக்கின்றது. தான் தலைவரானால், இந்திவுடனான உறவுகளை கட்டியெழுப்பும் நோக்கில் புதுடில்லியில் அலுவலகம் ஒன்றை ஏற்படுத்தப்போவதாகவும் சிறீதரன் அறிவித்திருந்தார்.


சிறீதரனின் தலைமைத்துவ ஆற்றலை இப்போதைக்கு எவரும் மதிப்பிட முடியாது. ஏனெனில், அவர் தலைவராக அமரவில்லை. அதற்கான வாய்ப்பு அவருக்கு இதுவரையில் கிட்டவில்லை. ஆனால், சம்பந்தனது தலைமைத்துவம் தோல்வியடைந்துவிட்டது. சம்பந்தன் ஒரு தோல்வியடைந்த அரசியல்வாதி. அதேபோன்று, அரசியல் தீர்வு விடயங்களை கையாள்வதில் சுமந்திரனும் தோல்வியடைந்த ஒருவர்தான். இதற்கு அடிப்படையான காரணம் என்ன? காரணம் ஒன்றுதான் – அதாவது, சூழ்நிலைகளில் ஆற்ற வேண்டிய காரியங்களை ஆற்றாமல், சாத்தியமற்ற விடயங்களை கையாள முற்பட்டதாகும்.


அரசியல் என்பது அடிப்படையில் சாத்தியங்களை கையாளும் கலையாகும். ஒவ்வொரு காலகட்டங்களில் ஒவ்வொரு விடயம் சாத்தியமாகலாம். அதனை சரியாக புரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு அரசியல் தந்திரோபாயங்களையும் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க வேண்டியதே ஒரு தலைமையின் பணியாகும்.
அரசியலை கையாளுதல் என்பது இதுதான். ஆனால், சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரின் அணுகுமுறை அவ்வாறு அமைந்திருக்கவில்லை. அதேவேளை தமிழ் அரசுக் கட்சிக்குள் அவர்களின் அணுகுமுறைகள் தவறானவை என்பதை சுடடிக்காட்டும் வல்லமையுடன் எவரும் இருந்திருக்கவில்லை அத்துடன், பங்காளிக் கட்சிகளிலுள்ள ஆற்றலுள்ள வர்களை இணைத்துக் கொண்டு பயணிக்கும் துணிச்சலும் தமிழ் அரசுக் கட்சியிலிருந்தவர்களிடம் இருந்திருக்கவில்லை. இவ்வாறான காரணங்களால்தான், 2015 இன் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து, கிடைக்கப்பெற்ற வாய்ப்புகளை சம்பந்தன் வீணாக்கியபோது, அதற்கு ஏனையவர்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பக்கபலமாக செயல்பட்டிருந்தனர்.


சிறீதரனும் இந்த விடயத்தில் விமர்சனத்துக்கு அப்பால்பட்டவர் அல்லர். சிறீதரன் போன்றவர்கள் தலைவர்களாக வேண்டுமென்றால் அனைத்து தரப்புக்களையும் அரவணைத்துச் செயல்படுவதற்கு ஏற்றவாறு தன்னை தயார் செய்ய வேண்டும். ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்தியா எக்காலத்திற்குமான நிர்ணயகரமான சக்தி. இதனை புரிந்து கொண்டு, அதேவேளை, சூழ்நிலைகளை கையாளும் திறனுள்ள தலைவர்கள் தமிழர் அரசியலை கட்டுப்படுத்தும் போது மட்டுமே விடயங்கள் முன்னோக்கி நகரும். இந்தியாவை நோக்கி பிரத்தியேகமாக செல்வதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் இந்தியா அதன் நிலைப்பாட்டை தெளிவாக முன்வைத்திருக்கின்றது – முன்வைத்து வரு கின்றது – எனவே, இப்போது, தமிழ் மக்கள் மத்தியிலிருந்துதான் விட யங்கள் நகர்த்தப்பட வேண்டும்.