இந்தியப் பிரதமருக்கு எதிராகக் கறுப்புக் கொடி காண்பித்தவர்கள், இப்போது டீசல் கப்பலுக்கு வரவேற்பு நடத்துகின்றனர் – என்று சஜித் பிரேமதாஸ தெரிவித்திருக்கின்றார். எதிரணி, ஆளும் தரப்பை நோக்கி இவ்வாறான கருத்துக்களை முன்வைப்பது ஆச்சரியம் தரும் ஒன்றல்ல. ஆனால், அண்மைக்காலமாக அரசாங்கம் இந்தியாவை நெருங்கிச் செல்லும் இராஜதந்திரத்தை முன்னெடுத்து வருவது வெளிப்படையான ஒன்று. முன்னைய கசப்பான விடயங்களை மெதுவாகப் போக்கும் காரியத்தை மொறகொட கச்சிதமாகச் செய்வதாகவே தெரிகின்றது. இந்தியாவிலிருந்து அதிகம் விலகினால், அது நீண்ட காலத்தில் ஆபத்தானது என்பதை அரசாங்கம் உணர்ந்திருப்பதுபோல் தெரிகின்றது. கொழும்பு இந்தியாவுடன் நெருங்கிச் செல்லும்போது, ஈழத் தமிழர்கள் விடயத்தில் இந்தியா அமைதியடைந்துவிடலாம் என்னும் அச்சம் ஒன்றும் தமிழ் சூழலில் உண்டு. இவ்வாறானதொரு சூழலில்தான் ஆறு கட்சிகள் ஒன்றிணைந்து, இந்திய பிரதமரின் தலையீட்டை கோரியிருந்தன.
ஈழத் தமிழர் அரசியலில் இந்தியா எக்காலத்திலும் தவிர்க்க முடியாத சக்தியென்பதை எவராலும் மறுதலிக்க முடியாது. இந்தியாவை தவிர்த்துச் செல்ல வேண்டுமென்று ஈழத் தமிழர்கள் விரும்பினால்கூட, அது முடியாது. ஏனெனில், இந்தியாவை விரோதித்துக் கொண்டு வேறு எந்தவொரு நாடும் ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்யப் போவதில்லை. எனவே, இந்தியாவை நோக்கிச் செல்வது விருப்பம் என்பதற்கு அப்பால், அது இந்தப் பிராந்தியத்தின், உலக அரசியலில் யதார்த்தம். 1987 இந்திய – இலங்கை ஒப்பந்தத்திற்கு பின்னர் தமிழர் பிரச்னை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் வெற்றியளிக்கவில்லை. இந்தியாவின் பங்களிப்பு இல்லாமலேயே, அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன.
தமிழர்கள் விடயத்தில் இந்தியாவின் முக்கியத்துவம் எப்படியானதோ – இதேபோன்றுதான், இலங்கை விடயத்திலும். இந்தியாவின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்படும் சந்தர்ப்பங்களில் சிங்கள ஆட்சியாளர்கள் நெருக்கடிகளை சந்திக்க நேரிடுகின்றது. 2015இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது, மஹிந்த ராஜபக்ஷ உடனடியாகவே இந்திய உளவுத் துறையான றோவின் மீதுதான் குற்றம் சாட்டியிருந்தார். அதன் பின்னர் அமெரிக்க, பிரித்தானிய உளவுத் துறைகள்மீதும் குற்றம் சாட்டியிருந்தார்.
இது பற்றி நேர்காணல் ஒன்றில் கேட்கப்பட்ட போது – அவர்கள் நினைத்தால் அதிகம் செய்யமுடியுமென்று, அப்போது – முன்னாள் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டபாய ராஜபக்ஷ பதிலளித்திருந்தார். அதிக சீன சார்பினால் வரக்கூடிய ஆபத்துக்களை ஆட்சியாளர்கள் உணர்த்திருக்கக்கூடும். இன்றைய உலகம் அதிகம் சீன எதிர்ப்பை மையப்படுத்தியே நகர்கின்றது. இந்த சிக்கலான அரசியல் ஆட்டத்துக்குள், இந்தியாவுடன் நல்லுறவை பேணிக்கொள்வதன் மூலம் உலகத்தை எதிர்கொள்ள முடியுமென்று அவர்கள் கணிக்கக்கூடும்.
சிங்கள ஆளும் வர்க்கத்திடம் பலமானதொரு இராஜதந்திர பாரம்பரியம் இருக்கின்றது. அதனோடு ஒப்பிட்டால் ஈழத் தமிழர் அரசியல் சமூகம் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றது. இதனைப் புரிந்து கொண்டே ஈழத் தமிழர் அரசியல் சமூகம் செயலாற்ற வேண்டும். மற்றவர்களின்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது மிகவும் இலகுவானது. ஆனால், குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதால், கடந்தகாலத்தை தோண்டியெடுத்து விவாதங்கள் செய்வதால் எதனையும் சாதிக்க முடியாது. அது மேலும், மேலும் நாம் உலகத்திலிருந்து தனிமைப்படவே வழிவகுக்கும். இந்தியாவை அதிகம், அதிகம் ஈழத் தமிழர்கள் நெருங்கிச் செல்வதன் மூலம்தான், ஈழத் தமிழர் சமூகம் தன்னையொரு பாதுகாப்பான சூழலுக்குள் தக்கவைத்துக் கொள்ள முடியும்.