இந்தியா – கொழும்பு – ஈழத்தமிழர்கள்!

0
173

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளுதல் – என்றொரு கூற்றுண்டு. அதாவது,
சந்தர்ப்பங்கள் வாய்க்கின்றபோதே, அதனை கெட்டியாகப் பற்றிக்கொள்ள
வேண்டும். ஏனெனில், ஒரு முறை கிடைத்த சந்தர்ப்பங்கள் மீண்டுமொரு
முறை கிடைப்பது மிகவும் அரிதானது. இலங்கையின் அரசியல் வரலாற்றில்,
சிங்கள ஆட்சியாளர்கள் நெருக்கடிகளை எதிர்கொள்ளும்போது மட்டுமே,
கீழிறங்கி வருவதற்கு முயற்சிப்பதுண்டு. இந்த சந்தர்ப்பம்தான், தமிழர்கள்
தங்களின் எதிர்பார்ப்புக்களை வெற்றிகொள்வதற்கான சந்தர்ப்பமாகும். நாடு
மோசமானதொரு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கின்றது. கொழும்பு, இதிலிருந்து மீள்வதற்கு இந்தியாவின் உதவியை நாடியிருக்கின்றது. இலங் கைத் தீவில் ஆர்வம் காண்பிக்கும் நாடுகளிலேயே – இந்தியா ஒன்றுதான்,
ஈழத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் வலியுறுத்திவரும் ஒரேயொரு
நாடாகும்.
ஆரம்பத்தில் இந்தியாவுடன் முரண்டுபிடிக்கும் போக்கைக் கடைப்பிடித்துவந்த
ராஜபக்ஷ அரசாங்கம் தற்போது, தலைகீழாக செயல்பட்டு வருகின்றது.
ஏனெனில், நெருக்கடி நிலைமையானது, அந்தளவுக்கு பாரதூரமானது. இந்த
நெருக்கடிநிலையிலிருந்து மீள்வதற்கு இந்தியாவின் உதவி கட்டாயமானது.
இந்தியாவின் ஆதரவு இல்லாவிட்டால், சர்வதேச நாணய நிதியத்தின் உதவி
யையும் பெற முடியாது. 2009இல், சர்வதேச நாணய நிதியம், இலங்கையின்
மேலதிக கடன் கோரிக்கை விண்ணப்பத்துக்குப் பதிலளிப்பதை தாமதித்தது.
மத்திய வங்கியின் இப்போதைய ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்தான்,
அப்போதும் ஆளுநராக இருந்தார்.
அவர், அப்போது இந்தியாவின் நிதியமைச்சராக இருந்த பிரணாப்
முகர்ஜியை நாடி உதவி கோரினார். முகர்ஜி, சர்வதேச நாணய நிதியத்திற்கு
ஒரு தகவலை அனுப்பினார். அதாவது, நீங்கள் இலங்கைக்கு கடன் வழங்க
வில்லையாயின், இந்தியா அதனை செய்யும். இந்தியா போன்றதொரு சக்தி
வாய்ந்த உறுப்பு நாடொன்றின் கோரிக்கையை சர்வதேச நாணய நிதியத்தால்
நிராகரிக்க முடியாது. இதனை விளங்கிக் கொண்டே, இந்தியா அவ்வாறான
தொரு கோரிக்கையை முன்வைத்திருந்தது. இலங்கை நெருக்கடியை சந்திக்
கும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்தியா, கொழும்புக்கு கைகொடுத்திருக்கின்றது. இப்போதும் கைகொடுக்கின்றது. ஆனாலும் சிங்கள தேசியவாதிகள் மத்தியில், இந்தியா தொடர்பிலும் காதலும் வெறுப்பும் என்னும் அடிப்படையிலான புரிதலே இருக்கின்றது. இந்தியா கொழும்புக்கு பக்கபலமாக செயல்பட்டுவரும் நிலையில், சில
விடயங்களில், கொழும்பு விட்டுக்கொடுக்க வேண்டிய தேவையிருக்கின்றது.
எல்லா விடயங்களிலும் கொழும்பால் அடம்பிடிக்க முடியாது. இந்த வாய்ப்பை
பயன்படுத்திக் கொண்டு, இந்தியாவின் உதவியுடன், 13ஆவது திருத்தச்
சட்டத்திலுள்ள குறைபாடுகளை நீக்கி, அதனை பலப்படுத்துவதற்கான
உதவியை தமிழர் தரப்பு கோரலாம். ‘இறைமை பகிரப்பட்ட அதிகாரப்பகிர்வு’ – என்றெல்லாம் நிலைமை தெரியாமல் வாய்புசத்திக் கொண்டிருப்பதால்
எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை. இதேவேளை, ஐ. நா. மனித உரிமை
கள் பேரவையின் ஆணையாளருக்கு சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பில்
பரிந்துரைப்பதாலும், எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை. ஐ. நாவின்
இயலாமையை, மீண்டுமொரு முறை, உலகம் பார்த்துக் கொண்டிருக்கின்றது.
உக்ரைன் விடயத்தில் வெறும் பார்வையாளர் வரிசையில் ஐ. நாவின் செய
லாளர் அமர்ந்து கொண்டிருக்கின்றார்.
உலக அரசியலில் பலமான பிராந்திய நாடுகளின் முக்கியத்துவம்
முன்னரைவிடவும், வலுவாக எழுச்சியடைந்து வருகின்றது. இந்த நிலையில்
பிராந்தியத்திலுள்ள பலமான நாடுகளின் தயவு அனைவருக்கும் தேவையானது.
பிராந்திய சக்திகளின் தீர்மானங்கள் மற்றும் முடிவுகளுக்கு அமைவாகவே
மேற்குலக நாடுகள் தீர்மானங்களை நிறைவேற்றும். ஏனெனில், மேற்குலக
நாடுகள் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிய பின்னர் – அதற்கு மாறாக பிராந்திய
சக்திகள் முடிவுகளை மேற்கொள்ளுமாயின், நிலைமைகள் குழப்பமடையும்.
இந்த நிலைமைகளை விளங்கிக் கொண்டுதான், ஈழத் தமிழ் தேசிய கட்சிகள்
என்போர் தீர்மானங்களை எடுக்க வேண்டும். அவ்வாறில்லாது தங்களின்
விருப்பங்களை கூறிக் கொண்டிருப்பதால் எவ்வித பயனும் ஏற்படப் போவ
தில்லை. அரசியலமைப்பில் இருக்கின்ற, 13ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள
குறைபாடுகளை, நீக்கி, ஆளுநரின் அதிகாரங்களை குறைப்பதற்கு
இந்தியாவின் உதவியை தமிழர் தரப்பு நாடுவதன் மூலம், இந்தியா- இலங்கை – ஈழத் தமிழர்கள் என்னுமடிப்படையில், ஒரு நேர் கோட்டில் விடயங்களை
சந்திக்கச் செய்தால், அது தமிழர்களுக்கான வெற்றியாகும்.