இந்தியா, நியூஸிலாந்துக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவு

0
47

பெங்களூரு, எம். சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 46 ஓட்டங்களுக்கு சுருண்ட பின்னர் நியூஸிலாந்துக்கு 402 ஓட்டங்களைக் கொடுத்த, இந்தியா, 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவின்போது அதன் 2ஆவது இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 231 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் மேலும் 7 விக்கெட்கள் மீதம் இருக்க நியூஸிலாந்தைவிட 125 ஓட்டங்களால்  இந்தியா  பின்னிலையில் இருக்கிறது. இந்தியாவின் 2ஆவது இன்னிங்ஸில் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடினர்.

யஷஸ்வி ஜய்ஸ்வால், அணித் தலைவர் ரோஹித் ஷார்மா ஆகிய இருவரும் 72 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஜய்ஸ்வால் 35 ஓட்டங்களுடனும் ரோஹித் ஷர்மா 52 ஓட்டங்களுடனும் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.

தொடர்ந்து விராத் கோஹ்லி, சர்பராஸ் கான் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 136 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சற்று பலப்படுத்தினர். விராத் கோலி 70 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததும் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. சர்பராஸ் கான் 70 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அஜாஸ் பட்டேல் 70 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

போட்டியின் மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை (18) காலை தனது முதல் இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 180 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த நியூஸிலாந்து, சகல விக்கெட்களையும் இழந்து 402 ஓட்டங்களைக் குவித்தது.

ரச்சின் ரவிந்த்ரா மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 13 பவுண்ட்றிகள், 4 சிக்ஸ்களுடன் 134 ஓட்டங்களைக் குவித்தார். இது அவர் பெற்ற 2ஆவது டெஸ்ட் சதமாகும்.

மத்திய வரிசையில் டிம் சௌதீ 5 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 65 ஓட்டங்களைப் பெற்றார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சௌதீ பெற்ற 7ஆவது அரைச் சதம் இதுவாகும். டெவன் கொன்வே 91 ஓட்டங்களையும் வில் யங் 33 ஓட்டங்களையும் பெற்று ஆட்டம் இழந்தனர்.

பந்துவீச்சில் ரவிந்த்ர ஜடேஜா 72 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் குல்தீப் யாதவ் 99 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொஹம்மத் சிராஜ் 84 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.