இந்தியா விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசவுள்ளதான செய்தியொன்று சில ஊடகங்களில் வெளியாகியிருந்தன. ஆனால் அந்தச் செய்தி இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.விவிக்கினேஸ்வரன் இந்திய – இலங்கை உடன்பாட்டை முழுமையாக அமுல்படுத்துவதற்கு உதவுமாறு கூறி, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமொன்றை அனுப்பியிருக்கின்றார். அதே வேளை, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் முக்கியஸ்தரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், இந்தியா தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது, ஏனைய தமிழ் தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். அவர் தமிழர் தரப்பென்று யாரை குறிப்பிடுகின்றார் – விக்கினேஸ்வரனையும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தையுமா? சித்தார்த்தன், ஆனந்தசங்கரி, சுகு சிறிதரன் ஆகியோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிர்த்து செயற்பட்ட காலத்திலும், இது போன்றதொரு கோரிக்கையை இந்தியாவிடம் முன்வைத்திருந்தனர். அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இந்தியா, அவர்களுக்கு தனியாக நேரத்தை ஒதுக்கியிருந்தது.
இதற்கிடையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன், இந்தியா அதன் மென்போக்கை கைவிட்டு, 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு அழுத்தங்களை வழங்க வேண்டுமென்று வலியுறுத்தி அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றார். அதே வேளை இந்தியா இனியும் தமிழ் மக்களை பகடை காய்களாக பயன்படுத்தக் கூடாதென்றும் ஆனந்தன் வலியுறுத்தியிருக்கின்றார். அவ்வாறாயின் இந்தியா முன்னர் தமிழர்களை பகடை காய்களாக பயன்படுத்தியிருந்ததா? இந்தியா தமிழர்களை பகடை காய்களாக பயன்படுத்திய போது எதற்காக ஆனந்தனின் ஈ.பி.ஆர்.எல்.எப் இந்தியாவுடன் கைகோர்த்திருந்தது, அறிக்கைகளை வெளியிடும் போது நிதானம் அவசியம்.
இன்று பாரபட்சமில்லாமல் அனைத்து தமிழ்த் தேசிய தரப்பினரும் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை அமுல்படுத்துமாறு கோருகின்றனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மட்டும் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்கின்றோம் ஆனால் அதில் உள்ளடங்கியுள்ள 13வது திருத்தச்சட்டத்தை நிராகரிக்கின்றோம் என்கின்றார். தேர்தல் மேடைகளில் 13வது திருத்தச்சட்டத்தை நாங்கள் தொட்டும் பார்;க்க மாட்டோம் என்று கூறியவர்கள், 13இல் ஒன்றுமில்லை என்று கூறியவர்கள், 13, தொடர்பில் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்றவர்கள் அனைவருமே இப்போது இந்திய – இலங்கை ஒப்பந்தம் தொடர்பில் பேசுகின்றனர். 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துமாறு கூறுவதற்கான கடப்பாடு இந்தியாவிற்கு இருப்பதாக பேசிவருகின்றனர். அவ்வாறாயின் ஏன் இவர்கள் அனைவரும் இணைந்து கூட்டாக 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதை ஒரு அரசியல் நிலைப்பாடாக ஏற்றுக் கொள்ளக் கூடாது? அதனை இந்தியாவிடம் எழுத்து மூலமாக முன்வைக்க முடியாது?
இந்திய – இலங்கை ஒப்பந்தம் உருவாகிய காலத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. விடுதலைப் புலிகளுக்கு பயந்து அப்போதிருந்த மிதவாத தலைவர்களான அமிர்தலிங்கம் சம்பந்தன் போன்றவர்களும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, மற்றும் பரந்தன் ராஜன் தலைமையிலான ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி ஆகிய இயக்கங்கள் மட்டுமே ஒப்பந்தததை ஏற்றுக்கொண்டிருந்தன. இந்த அடிப்படையில்தான் இணைந்த வடக்கு கிழக்கிற்கான மாகாண சபைத் தேர்தலும் இடம்பெற்றது. காலம் பல பாடங்களை தமிழர்களுக்கு வழங்கியிருக்கின்ற நிலையில் மீண்டும் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை நோக்கி திரும்ப வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. ஒரு காலத்தில் நிராகரிக்கப்பட்ட ஒன்றை இப்போது நேசிக்க வேண்டியிருக்கின்றது.
-ஆசிரியர்