
ஐ.பி.எல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்க அதன் புதிய தலைவர் ஹர்திக் பாண்டியாவே காரணம் என இரசிகர்கள் சமூக ஊடகங்களில் அவரை வறுத்தெடுத்து விட்டனர். ஆனால் இடம்பெற்று முடிந்த இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத் தொடரில் முக்கியமான போட்டிகளில் அவரின் சிறப்பான துடுப்பாட்டம் பந்து வீச்சே இந்திய அணி கிண்ணத்தை வெல்லக் காரணம் என இப்போது அவரை புகழ்ந்து பதிவுகள் வந்து கொண்டிருக்கின்றன.
ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிகரமான தலைவராக இருந்தவர் ரோஹித் சர்மா. பத்து ஆண்டுகள் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக இருந்தது மட்டுமல்லாது ஐந்து தடவைகள் வெற்றிக்கிண்ணத்தை பெற்றுக்கொடுத்தவர் அவர். ஆனால் 2024 ஆம் ஆண்டு பருவகாலத்தில் அணி நிர்வாகம் என்ன நினைத்ததோ பதவியை ஹர்திக் பாண்டியாவிடம் தூக்கி கொடுத்து விட்டது.
பாண்டியாவின் அலட்சியமான உடல்மொழிகள் மற்றும் தவறான முடிவுகளால் இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணி குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெறமுடியவில்லை. ரோஹித் சர்மாவின் இரசிகர்களோ பாண்டியாவை வறுத்தெடுத்து விட்டனர். ரோஹித்தை மைதானத்தில் வைத்து பாண்டியா அவமானப்படுத்துகிறார், தன்னிஷ்டப்படி நடந்து கொள்கிறார் , தலைக்கனம் பிடித்தவர் என்றெல்லாம் விமர்சனங்கள் வெளிக்கிளம்பின. மேலும் இருபதுக்கு இருபது உலகக்கிண்ணப்போட்டிகளின் இந்திய அணித்தலைவராக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டாலும் அணியில் பாண்டியா இடம்பெற்றிருந்தமை கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. எனினும் தன் மீது உள்ள விமர்சனங்களுக்கு இடம்பெற்று முடிந்த உலக்கிண்ணத் தொடரில் பதிலடி வழங்கியுள்ளார் பாண்டியா.
மட்டுமின்றி அணியின் சிரேஷ்ட வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் இருபதுக்கு இருபது சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளதால், இருபதுக்கு இருபது இந்திய அணி மாத்திரமல்லாது டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அணியின் தலைவராகவும் பாண்டியா நியமிக்கப்பட சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன. தற்போதைய அணித்தலைவர் ரோஹித் சர்மாவுக்கு 37 வயதாகின்றது. 2027 ஆம் ஆண்டு உலகக்கிண்ணப்போடிகளில் அவருக்கு 40 வயதாகி விடும். அதே போன்று முன்னாள் தலைவர் விராட் கோஹ்லிக்கு 35 வயதாகின்றது. அடுத்த உலகக்கிண்ணத் தொடரில் அவரும் 38 வயதை எட்டி விடுவார். மேலும் அணியின் தலைமை பொறுப்பை மீண்டும் கோஹ்லிக்கு வழங்க நிர்வாகம் விரும்பவில்லையென்றே தெரிகின்றது. எனினும் தற்போதைய அணியில் கே.எல். ராகுல், சப்மன் கில், ரிஷாப் பண்ட் போன்ற திறமையான வீரர்கள் இருக்கின்றார்கள், இவர்களும் ஐ.பி.எல் தொடரில் அணிகளின் தலைவர்களாக சோபித்தவர்கள்.
ஆனால் கோஹ்லி போன்று மைதானத்தில் ஆக்ரோஷமும் அதே வேளை பொறுமையும், நிதானமும் உள்ள ஒருவரே இந்திய அணியின் தலைமைத்துவத்தை அலங்கரிக்க முடியும் என்பது இரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. இந்திய அணியின் வெற்றிகரமான தலைவராக வர்ணிக்கப்படும் தோனி மிஸ்டர் கூல் என அழைக்கப்பட்டவர். மைதானத்தில் எச்சந்தர்ப்பத்திலும் தனது உணர்ச்சிகளை வெளிக்காட்டாதவர். ஆனால் தோனி போன்ற ஒரு வீரரின் காலம் முடிந்து விட்டது என்று இரசிகர்கள் கூறுகின்றனர். இந்திய அணிக்கு இவ்வாறு ஆக்ரோஷமான மற்றும் அமைதியான அணித்தலைவர்களே வந்து கொண்டிருக்கின்றனர். இது மொகமட் அஹாருதீன் காலத்திலிருந்து தொடர்கின்றது. அசார் மிகவும் அமைதியானவர். அவருக்கு பிறகு வந்த சச்சின் சொல்லவே தேவையில்லை. ஆனால் அதற்கடுத்த தலைவராக வந்த செளரவ் கங்குலி ஆக்ரோஷமானவர். அவருக்குப்பின்னர் தலைவரான ராகுல் ட்ராவிட் வாய் திறந்தே பேச மாட்டார். பின்னர் தலைவரான தோனி மிகவும் அமைதியானவர். தோனிக்குப்பிறகு கோஹ்லி எப்போதும் மைதானத்தில் துடிதுடிப்பாக இருப்பவர். இடையிடையே அணியின் தலைவர் பதவிகளை சுமந்த அஜன்கியா ரஹனே, கே.எல்.ராகுல் ஆகியோர் நிரந்தர தலைவர்களாக இல்லை.
சில நேரங்களில் அடுத்த உலகக்கிண்ணத் தொடருக்கு முன்பதாக டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரோஹித் சர்மாவும் , கோஹ்லியும் விடைபெறக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஹர்திக் பாண்டியாவுக்கு தற்போது 30 வயதாகின்றது. எனவே அவருக்கு தலைமைப் பதவி கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாகவே உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதற்குப் பிரதான காரணம் இடம்பெற்று முடிந்த இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத்தின் முக்கிய போட்டிகளிலும் இறுதிப்போட்டியிலும் அவர் வெளிப்படுத்திய சிறப்பாட்டாம். இத்தொடரில் அவர் மொத்தமாக 151 ஓட்டங்களையும் 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். முக்கியமான போட்டிகளில் அவர் பெற்ற 20 மற்றும் 30 ஓட்டங்கள் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தன எனலாம். இறுதிப்போட்டியில் தென்னாபிரிக்க அணியை தனது அதிரடி துடுப்பாட்டத்தால் வெற்றியின் பக்கம் இழுத்துச்சென்று கொண்டிருந்தார் கிலாசன். அவரை தனது பந்து வீச்சில் வீழ்த்தினார் பாண்டியா. அதே வேளை டெத் ஓவர் என்று கூறப்படும் இறுதி ஓவரை வீசுவதற்கு அவரை தெரிவு செய்தார் அணித்தலைவர் ரோஹித் சர்மா. இறுதி ஓவரில் 16 ஓட்டங்கள் பெறப்பட வேண்டும். துடுப்பாட்ட முனையில் இருந்தவர் அதிரடி வீரரான மில்லர். அவரை தனது பந்து வீச்சில் வீழ்த்தினார் பாண்டியா. அவரின் பிடியை எல்லைக் கோட்டருகே இருந்து அபாரமாக பிடித்தார் சூரியகுமார் யாதவ். இதுவே போட்டியின் திருப்பு முனையாகியது. இந்திய இரசிகர்களின் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஏனென்றால் முக்கியமான துடுப்பாட்ட வீரர்களை இழந்தது அணி. துடுப்பெடுத்தாட வந்த பந்து வீச்சாளர் ரபடாவையும் வீழ்த்தினார். இறுதியில் 7ஓட்டங்களால் இந்திய அணி வெற்றி பெற்றது.
இறுதி பந்தை வீசியவுடன் களத்தில் அமைதியாக அமர்ந்து கண்ணீர் உகுத்தார் பாண்டியா. தன் மீது உள்ள விமர்சனங்களையெல்லாம் நினைத்து அழுதார் என்று தான் கூற வேண்டும். ரோஹித்துக்கும் ஹர்திக்கின் மீதும் அவரின் அனுபவம் மீதும் பெரிய நம்பிக்கை இருந்தது. கிலாசனின் விக்கெட் விழுந்தபோதே ஹர்திக்தான் கடைசி ஓவரை வீச வேண்டும் என்பதை ரோஹித் முடிவு செய்துவிட்டார். திட்டமிட்டபடியே மிகச்சிறப்பாக வீசினார்.
“பின்தங்கிய சூழலிலிருந்து வந்த எனக்கு இதெல்லாம் ஒரு கனவு. என்னுடைய உணர்வுகளை வார்த்தைகளில் விவரிக்க முடியவில்லை. நான் பண்பானவனாக இருக்க விரும்புகிறேன். என்னைப் பற்றி என்னவெல்லாமோ பேசினார்கள். ஒரு சதவிகிதம் கூட என்னைப் பற்றி தெரிந்துகொள்ளாமல் நான் இப்படித்தான் எனப் பேசினார்கள். பேசிக்கொள்ளட்டும், அதில் ஒன்றுமில்லை.
எப்போதுமே வார்த்தைகளின் வழி பதில் கொடுப்பதை விட செயல்களின் வழி பதில் கொடுப்பதே சிறந்தது என நினைக்கிறேன். கடினமான நாட்களை எதிர்கொள்ளும்போது இது நீண்ட காலத்துக்கு நிலைக்கப்போவதில்லை என்று எனக்கு நானே சொல்லிக்கொள்வேன்.’ என மென்மையாக பேசியிருக்கிறார் ஹர்திக். எது எப்படியானாலும் இந்திய அணியின் எதிர்காலத் தலைவராக பாண்டியா வர சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன. அடுத்தடுத்து வரும் போட்டிகளில் அவர் தனது திறமையை வெளிப்படுத்தும் விதத்தில் அது அமைந்துள்ளது எனலாம்.