இந்திய – சீன வல்லரசு போட்டிக்கு களமிடும் வடகடல் தீவுகள்!

0
642

  -அலசுவது இராஜதந்திரி-

உலகில் பல நாடுகள் போர்த்துக்கேயர், டச்சுக்காரர் மற்றும் ஆங்கிலேயர்களால் ஆளப்பட்டதென்பதே வரலாறு.

18ஆம் மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் தமது அரசியல் மற்றும் வர்த்தக நலன்களை முன்னிறுத்தி உலகின் அனைத்து கண்டங்களிலும் தமது  காலனித்துவ ஆட்சியின் கீழ் கொண்டுவந்திருந்தனர்.

ஐரோப்பிய நாடுகளின் காலனித்துவ ஆதிக்க விஸ்தரிப்பு பலநாடுகளை அவற்றின் தனித்துவங்களை பறிகொடுக்கவும் வைத்ததோடு, ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியாளர்களது சுரண்டல்களுக்கும் உள்ளாக்கிவிட்டிருந்தது.
இலங்கையும் ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியாளர்களின் பிடியில் அகப்பட்ட ஒரு நாடாக இருந்ததோடு, இறுதியாக 1815ஆம் ஆண்டு முதல் 1948ஆம் ஆண்டுவரை ஆங்கிலேயர் இலங்கையை ஆண்டிருந்தனர்.

ஐரோப்பியர்களது வருகைக்கு முன்னர், இலங்கை இந்திய படையெடுப்புக்கும் அடிக்கடி உள்ளாகியிருந்தது. தென்னிந்தியாவில் பலம்பெற்றிருந்த சோழ மன்னர்கள் இலங்கையின் வடக்கு-கிழக்கு பிரதேசங்களை ஆட்சி செய்தமைக்கான வரலாற்று தடயங்கள் இன்றுவரை காணப்படுகின்றன.

கிழக்கிலிருந்து ஆதிக்க விஸ்தரிப்பு  

ஆனால் தற்போது மேற்கிலிருந்தல்ல, கிழக்கிலிருந்தே ஆதிக்க விஸ்தரிப்பு உருவாகி வருவதை சீனாவினுடைய அரசியல், இராணுவ பொருளாதார கட்டமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்தியாவுக்கு வடக்கே திபெத்தை தனது ஆதிக்கத்தின்கீழ் வைத்திருக்கும் சீனா, தற்போது இந்தியாவுக்கு தெற்கே இலங்கையையும் தனது பிடியின்கீழ் முழுமையாக கொண்டுவரும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதை அவதானிக்கமுடிகிறது. 

சீனாவினுடைய பொருளாதார ரீதியான பலம் எவ்வளவு தூரம் உயர்வானது என்பதனை இலங்கையின் தலைநகர் கொழும்பை அண்டியதாக அமைக்கப்பட்டு வருகின்ற கொழும்பு துறைமுக நகர அபிவிருத்திதிட்டம் எடுத்துக்காட்டுகின்றது.

புவியியல் அமைப்பையே மாற்றும் சீனா

ஒரு நாட்டின் புவியியல் அமைப்பையே மாற்றிவிடும் வகையில், கொழும்பு துறைமுக நகர அபிவிருத்திதிட்டம் மிக பிரமாண்டமானதாக கடலுக்குள்ளேயே அமைக்கப்பட்டதாக விளங்குகின்றது.

இதுதவிர, இலங்கையின் தென் முனையில் மத்தள விமானநிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம் என்பவைகூட சீனாவின் வல்லரசு பலத்தை தென்னாசியாவில் பிரதிபலிக்க வைப்பவையாகவே இருக்கின்றன.

தென்னிலங்கையில் தனது கைவரிசையைக் காண்பித்த சீனா தற்போது தனது விஸ்தரிப்பு நடவடிக்கைகளை இலங்கையின் வடக்கு நோக்கியும் குறிவைத்துள்ளதையே அண்மைக்காலங்களில் நெடுந்தீவு, நயினாதீவு அனலைதீவு போன்ற தீவுப்பிரதேசங்களை கையேற்கவுள்ள செய்திகள் வெளிப்படுத்துபவையாக இருக்கின்றன.  

சீனா கையேற்கவுள்ள மூன்று வடபகுதி தீவுகளில் ஒன்றான நெடுந்தீவே வடக்கே காணப்படுகின்ற தீவுகளில் பெரிதானதும் டச்சுக்காரர்களால் நிர்வகிக்கப்பட்துமாக இருக்கின்றது. இதைவிட நயினாதீவு வரலாற்று ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் இந்தியாவுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டதாகவும் விளங்குகின்றது.

சப்த தீவுகள்

யாழ்ப்பாணக்குடாநாட்டை சூழவுள்ள வட கடலில் சப்த தீவுகள் என்று குறிப்பிடுமளவுக்கு ஏழு தீவுகள் காணப்படுகின்றன. இவற்றில் சிலதீவுப்பகுதிகள் தற்போது பண்ணைப்பாலத்தினால் யாழ்ப்பாண பெருநிலப்பகுதியோடு இணைக்கப்பட்டுள்ளன.

இலங்கை ஐரோப்பியர்களது படையெடுப்புகளுக்கு உட்பட்டிருந்தபோதிலும், சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் இந்திய அமைதிப்படை நிலைகொண்டிருந்தது.

திருகோணமலையை முதன்மை நகரமாகக்கொண்டு இணைந்த வடக்கு-கிழக்கு மாகாணங்களை இந்திய அமைதி காக்கும்படையினர் தமது கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருந்து, வடக்கு-கிழக்கு மாகாணங்களை தமிழருடைய தாயகப்பிரதேசமென்பதையும் உறுதி செய்திருந்தனர்.

இலங்கை 1815ஆம் ஆண்டு பிரிட்டிஷாரின் காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்ட சமயத்தில் திருகோணமலையிலுள்ள சீனன் குடா பிரதேசமே பிரிட்டிஷாரின் விமான, கடற்படை தளங்களோடு, சீனாவின் பெயரைத்தாங்கிய பிரதேசமாகவும் விளங்கியிருந்தது.

சீனன் குடா

இரண்டாம் உலக யுத்தத்தில் ஜெர்மனியோடு துணைநின்ற ஜப்பானைக் கையாளும் விதத்திலேயே திருகோணமலையின் சீனன் குடாவை கடற்படை மற்றும் விமானப்படை தளங்களை உள்ளடக்கிய ஒரு பிரதேசமாக ஆங்கிலேயர்கள் மாற்றிவிட்டிருந்தனர்.

திருகோணமலையின் சிறிய வளை குடாபிரதேசம் ஒர் இயற்கையான எழில்மிகு துறைமுகத்திற்குரிய அம்சங்கள் அனைத்தையும் கொண்டிருந்ததோடு, சீனாவை நோக்கி காணப்பட்டதால் சீனன்குடா என (ஊhiயெ டீயல) ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்டிருந்தது. இலங்கையின் முக்கிய கடற்படை, விமானப்படை தளங்களுக்குரிய பிரதேசமாகவும் சீனன்குடாவே விளங்குகின்றது.

இதுதவிர, வடக்கே பலாலி விமானநிலையம், மட்டக்களப்பு விமானநிலையம், அம்பாறை விமான நிலையம் என்பவைகூட, கிழக்கே ஜப்பான் மூலமாக இரண்டாம் உலக யுத்தகாலத்தில் இலங்கைக்கு ஏற்படக்கூடிய ஆபத்தை எதிர்கொள்ளவே அமைக்கப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆட்சிக்காலத்தில் பலாலி விமானநிலையம் சர்வதேச விமானநிலையமென்ற தரத்திற்கு உயர்த்தப்பட்டு, இந்தியாவுடனான சிவில் விமானப்போக்குவரத்து மீளவும் சர்வதேச தரத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது சீனாவினுடைய வளர்ச்சி அபரிமிதமாக தென்னாசியாவிலும், தென்கிழக்காசியாவிலும் பொருளாதார, இராணுவ பலத்தோடு விரிவடைந்து வருகின்ற நிலையிலேயே வடகடலிலுள்ள நெடுந்தீவு, நயினாதீவு, அனைலைதீவு ஆகியவை சீனாவுக்கு இலங்கையினால் வழங்கப்படவிருக்கின்றன என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை அரசு இவ்வாறு நெடுந்தீவு, அனைலைதீவு, நயினாதீவு என்பவற்றை சீனாவுக்கு மின்திட்டங்களை அமைப்பதற்கென வழங்குவதாககூறி கையளிக்கும் பட்சத்தில், சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் விரிவடைகின்றது எனக்குறிப்பிடுவதைவிட, இந்தியாவுடனான சீனாவின் வல்லரசுபோட்டிக்கு இலங்கை, குறிப்பாக வடக்கே இந்தியாவுக்கு அருகேயிருக்கின்ற நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு என்பவை களம் அமைக்கின்றன எனக்குறிப்பிடுவதே பொருத்தமானதாகும்.