முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்ரன், பௌத்த மேலாதிக்கம் தொடர்ந்தால், இந்தியாவிலுள்ள இந்து அமைப்புக்களின் உதவியை கோரவுள்ளதாக தெரிவித்திருக்கின்றார்.
இது தொடர்பில் பலரும் அவ்வப்போது பேசியிருக்கின்றனர்.
ஆனால் எவரும் இதுவரையில் அதற்கான காத்திரமான முயற்சிகளை முன்னெடுக்கவில்லை.
ஆனால் இதில் ஒரு சிக்கலுமுண்டு.
இந்தியாவிலுள்ள இந்து மத அமைப்புக்கள் ஈழத் தமிழர்களை எவ்வாறு நோக்குகின்றன? ஒரு மத அடிப்படையான சமூகமாக நோக்குகின்றனவா அல்லது, இன – அடிப்படையில் தமிழ் நாட்டோடு இணைத்து நோக்குகின்றனவா – ஏனெனில் ஈழத் தமிழர் அரசியல் தரப்புக்கள் இதுவரையில் தமிழ் நாட்டை தாண்டி, இந்தியாவில் செல்வாக்குமிக்க அரசியல் ஊடாட்டங்களை மேற்கொள்ளவில்லை.
அத்துடன், ஈழத் தமிழ் மக்களின் பிரச்னையை ஒரு பெரும்பான்மை இந்து தமிழர்களின் பிரச்னையாக இந்தியாவில் முன்னிறுத்தியதும் இல்லை.
இதற்கான துணிவுள்ள அரசியல் தலைமைகளை இதுவரையில் ஈழத் தமிழ் சமூகம் சந்திக்கவுமில்லை.
இலங்கை தமிழரசு கட்சியை உருவாக்கிய எஸ்.ஜே.வி.செல்வநாயகம் ஒரு கிறிஸ்தவர்.
ஆனால் அவர் ஓர் அடிப்படைவாதியல்ல.
அவரது காலத்தில் தமிழ் நாட்டை அணுகுவதன் மூலம் புதுடில்லியின் ஆதரவை பெறும் முயற்சிகளை அவர் மேற்கொண்டிருந்தார்.
ஆனால் அன்றைய சூழலில் அது பெரியளவில் வெற்றியளிக்கவில்லை.
நாங்களே பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டிருக்கும்போது, உங்களுக்கு எங்களால் எவ்வாறு உதவ முடியுமென்றே அன்றைய தமிழ் நாட்டு தலைவர்கள் பதிலளித்தனர்.
ஆனால் பிற்காலங்களில் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், தமிழ் நாட்டுத் தலைவர்களோடு நல்லுறவை பேணிக்கொண்டு, சமவேளையில், புதுடில்லியுடன் நெருக்கமான உறவிலிருந்தார்.
குறிப்பாக இந்திரா காந்தியுடன் அமிர்தலிங்கம் மதிப்புமிக்க நட்பை கொண்டிருந்தார்.
அமிர்தலிங்கத்திற்கு பின்னர் அவ்வாறானதொரு தகுதி நிலையுள்ள தமிழ் தலைவரை இதுவரையில் ஈழத் தமிழ் சமூகம் சந்திக்கவில்லை.
மேலும் அமிர்தலிங்கம் இந்தியாவின் உதவியின்றி, ஈழத் தமிழர் அரசியல்ரீதியில் முன்னோக்கிப் பயணிக்க முடியாதென்பதிலும் தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருந்தார்.
மோடி தலைமையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்த பின்புலத்தில்தான், இந்து அமைப்புக்களை அணுகவேண்டுமென்னும் சிந்தனை துளிர்விட்டது.
அது தற்போது முன்னர் எப்போதுமில்லாதளவுக்கு ஒரு குறிப்பிட்ட தரப்பினர் மத்தியில், ஒருசிந்தனைப் போக்காகவும் மாறியிருப்பது போல் தெரிகின்றது.
ஆனால் இதற்கு தலைமையேற்கக் கூடிய வலுவான அளுமைகள் எவரும் தமிழ் சமூகத்தில் இல்லை.
விக்னேஸ்வரனுக்கு அவ்வாறான தகுதிநிலைகள் இருக்கின்றன.
அவரது தோற்றம், இந்துமதத்தின் மீதான ஈடுபாடு, அவரது நீதிபதி அடையாளம் – இவ்வாறான விடயங்களை ஒரு மூலதனமாகக் கொண்டு அவரால் இந்து அமைப்புக்களை இலகுவாக நெருங்க முடியும்.
விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்தவேளையில், புதுடில்லியில் இடம்பெற்ற சர்வதேச இந்து மகாநாட்டுக்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
அங்கு விக்கினேஸ்வரனுக்கு உயர்ந்த மதிப்பளிக்கப்பட்டிருந்தது.
குறித்த நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா ஆகியோருக்கு அருகில் விக்னேஸ்வரன் அமர்ந்திருந்தார்.
ஆனாலும் விக்னேஸ்வரனுக்கு அந்தச் சூழலை கையாளத் தெரிந்திருக்கவில்லை.
அந்தத் தொடர்புகளை முன்கொண்டு செல்வதற்கு அவர் முயற்சிக்கவும் இல்லை – அவருக்கு அதனை முன்கொண்டு செல்லத் தெரியவுமில்லை.
ஆகக் குறைந்தது இப்போது அவர் பேசுவதையாவது, நிரூபிப்பதற்கான செயலில் இறங்குவாரா? தமிழ் அரசியல் தலைவர்களின் பிரச்னையே, ‘பேச்சுப் பல்லக்கு தம்பி பொடிநடை’.
முதலில் பேசுவதற்கு உண்மையாக இருக்க முயற்சிக்க வேண்டும்.
கடந்த 14 வருடங்களின் பலரும் பல விடயங்களை பேசியிருக்கின்றனர் – ஆனால் தாங்கள் பேசுவதற்கு ஆகக் குறைந்தளவு அர்ப்பணிப்பைக் கூட, எவருமே நிரூபிக்கவில்லை.