இன்று இலங்கைக்கு வருகின்றார் மோடி!

0
52

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை மாலை இலங்கைக்கு வருகின்றார்.

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், அவர் இந்த விஜயத்தை மேற்கொள்கின்றார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ‘நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்துக்கான உறுதிப்பாடு’ என்ற எண்ணக்கருவை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்த விஜயத்தில் இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட உயர்மட்ட இந்தியக் குழுவும் இணையவுள்ளது.

இந்தியப் பிரதமருக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு நாளை சனிக்கிழமை காலை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதோடு இரு தரப்பு பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பிலும் கலந்துகொள்ளத்  திட்டமிட்டுள்ளார்.

இதன்போது எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் இந்தியாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் ஆகியவை பரிமாறிக்கொள்ளப்படும்.

நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இலங்கைக்கான சுற்றுப் பயணத்தை நிறைவு செய்துகொண்டு இந்தியப் பிரதமர் நாட்டில் இருந்து புறப்பட்டுச் செல்வார்.