25.4 C
Colombo
Tuesday, November 26, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இன்றைய வானிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் தாழ்முக்கம் நேற்று திங்கட்கிழமை (25) இரவு சுமார் 11.30 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து தென்கிழக்காக சுமார் 290 கிலோமீற்றர், திருகோணமலையில் இருந்து சுமார் 410 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்தது.

இது அடுத்துவரும் 12 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்து மிக சக்தி வாய்ந்த தாழ் அமுக்கமாக மாற்றமடைந்து நாட்டின் கிழக்குக் கரையை அண்மித்ததாக வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

இந்த தாழ் அமுக்கத்தின் தாக்கத்தின் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் சூழ்ந்து காணப்படும். வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் காற்றுடன் கூடிய மிகப் பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் புத்தளம் மாவட்டத்தின் சில இடங்களிலும் 150 மில்லிமீற்றரிலும் கூடிய மிகப் பலத்த மழை பதிவாகலாம்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 40 – 50 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும்.

பலத்த காற்று, மின்னல் தாக்கங்கள் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட்டு  இழப்புகளை அல்லது சேதங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

வங்காள விரிகுடாவில் சக்தி மிக்க தாழ் அமுக்கம் காணப்படுவதனால் நாட்டை சூழ உள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 – 50 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும். இந்த காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 60 – 70 கிலோமீற்றராக அதிகரித்ததும் காணப்படும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் அடிக்கடி மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles