இப்படியும் நடக்கிறது…!

0
186

நேற்று இந்தப் பந்தியைப் படித்துவிட்டு ஒருவர் சொன்னார், என்ன கத்தியில் நடப்பது போல நடந்திருக்கிறீர்கள்.
ஆனால் சில விடயங்களை நேரடியாக சொல்ல என்ன தயக்கம்? என்று.
அவர் எதைச் சொல்ல வருகிறார் என்பதை உடனடியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.
தியாகி திலீபனின் நினைவு தினத்தைக் கூட ஒழுங்காக செய்து முடிக்கக்கூடிய நிலையில் நாம் இல்லை என்ற வருத்தத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று மாத்திரமே நினைத்தேன்.
ஆனால் எழுதத் தொடங்கியதும் எல்லாவற்றையும் குறித்துச் சொல்ல வேண்டும் போல இருந்தது என்றேன்.
அதைச் சொல்லவில்லை.
சுகாஷ், திலீபன் எதற்காக உண்ணா விரதமிருந்தார் என்பதை அவர் தவறாக சொன்னது மாத்திரமல்ல, வரலாற்றையே அறியாமல் அவர் இருக்கிறார் என்பதை இன்னமும் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம் என்றார் அவர்.
நமது வரலாறுகள் எல்லாம் எப்படி எழுதப்படுகின்றது என்பதை பற்றி இந்தப் பந்தியில் ஏற்கனவே ஒருதடவை எழுதியிருந்தது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கலாம்.
நமது – அதாவது ஈழத்தமிழரின் அரசியல் போராட்டத்தில் மிகவும் துயர் படிந்த நாள் என்றால் – அப்படி பல நாட்கள் இருந்தாலும், நம் கண்முன்னே எரிந்து சாம்பல் மேடான யாழ்ப்பாண பொது நூலக எரிப்பு மிக முக்கியமானது.
ஆனால் அது கூட எப்போது எரிந்தது என்று பலரும் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருப்பது குறித்து முன்னரும் எழுதியிருந்தேன்.
எமது வரலாறுகள் எல்லாமே இப்படித்தான் எழுதப்படுகின்றன.
போதாக் குறைக்கு நமக்கு தலைவர்களாக விரும்புகின்றவர்களும் தத்தமக்கு வாயில் வந்தவாறு வரலாறுகளை எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்.
நேற்றைய பந்தியில் ‘ஒற்றையாட்சிக்கும் 13ஆம் திருத்தத்திற்கும் எதிராக உண்ணாநோன்பிருந்து வீரச்சாவைத் தழுவிக் கொண்ட தியாகதீபம் அண்ணன் திலீபன் அவர்களின் வழியில் பயணிக்க அவரின் நினைவு நாளில் சபதமெடுப்போம்’ என்று சுகாஷ் உரையாற்றியமை பற்றி குறிப்பிட்டிருந்தேன்.
திலீபன் உண்ணாநோன்பிருந்தது செப்ரெம்பரில் ஆனால் பதின்மூன்றாவது திருத்தம் கொண்டுவரப்பட்டது அதே ஆண்டு நவம்பரில்.
இந்த வரலாறு சுகாஷூக்கு தெரியாமல் இருக்கலாம்.
அப்போது சுகாஷூக்கு ஐந்தோ ஆறோ வயது தான் இருக்கும்.
ஆனால் அரசியலுக்கு வந்துவிட்ட பின்னராவது விடயங்களை அறிந்து கொண்டு, தெரிந்து கொண்டு பேச வேண்டும் என்பதை அரசியல்வாதியான பின்னராவது தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமானது.
இப்போது திலீபனின் நினைவு நிகழ்வை அனுஷ்டிக்க பொதுக்கட்டமைப்பு ஒன்று பற்றி பேசப்படுகின்றது.
எமது முக்கிய பிரச்சினையே இதுதான்.
எப்போதும் எதைப்பற்றியும் கடைசி நேரத்தில் தான் யோசிக்கத் தொடங்குவோம்.
திலீபன் நம்மவர்களுக்கு நினைவுக்கு வருவது செப்ரெம்பரில் மட்டும் தான்.
பிறகு அதனை இலகுவாக மறந்துவிடுவார்கள், அடுத்த செப்ரெம்பர் வரை.
அறிஞர் அண்ணா காலமான போது தி.மு.க. ஆட்சியில் இருந்தது.
அவர் இறந்ததும் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது சென்னை மெரினா கடற்கரையில்.
இவ்வாறு அமைக்கப்படும் நினைவிடம் உடனே தமிழக பொதுப்பணித்துறையின் நிர்வாகத்திற்கு வந்துவிடும்.
இன்று கூட அவரது நினைவு தினங்களில் தி.மு.கவும் அங்கே சென்று அஞ்சலி செலுத்தும், அ.தி.மு.கவும் அதே இடத்தில் அஞ்சலி செலுத்துவார்கள்.
அதற்காக இருவரும் அடித்துக் கொண்டதில்லை.
பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஒவ்வொரு கட்சிக்கும் நேரத்தை ஒதுக்கி கொடுப்பார்கள்.
அந்தந்த நேரத்தில் கட்சியினர் வந்து அஞ்சலி செலுத்துவார்கள்.
நாங்கள் தான் இதனை கட்டினோம் என்று தி.மு.கவோ அல்லது, அண்ணாவின் பெயரில் கட்சி நடத்தும் எங்களுக்குத் தான் அண்ணா சொந்தம் என்று அ.தி.மு.கவோ உரிமை கொண்டாடியதில்லை.
இது போலத்தான், திலீபனும்.
அவர் தியாகத்தை மதிக்கின்ற எவரும் அவருக்கு அஞ்சலி செலுத்துவதை கேள்விக்கு உட்படுத்த எவருக்கும் உரிமையோ அருகதையோ கிடையாது.
எவர் வேண்டுமானாலும் திலீபனின் நினைவாக ஒரு மண்டபத்திலோ அல்லது பொது மைதானத்திலோ தத்தமக்கு விருப்பமானவாறு நினைவு நிகழ்வுகளை நடத்தலாம்.
அங்கே தமக்கு வேண்டிய அரசியலை பேசலாம்.
அதைவிட்டுவிட்டு இப்படித்தான் செய்ய வேண்டும் என்றோ அல்லது அவர்தான் செய்யவேண்டும் என்றோ முட்டி மோதுவதை இனியாவது நிறுத்திக்கொள்ள வேண்டும்.
மாகாணசபையில் தமிழர் ஆட்சி நடந்த போது, நினைவிடங்களை நிர்வகிக்க என்று ஒரு தனியான அலுவலகத்தை அமைக்க வேண்டும் என்று மறவன்புலவு சச்சிதானந்தம் ஒரு தடவை பொதுவெளியில் தெரிவித்திருந்தமை ஞாபகம்.
அப்போதே அவர்கள் அதற்காக ஒரு நியதிச்சட்டத்தை அமைத்து இவற்றை நிறுவனமயப்படுத்தியிருக்கலாம்.
இதைப்பற்றி எழுதுவது என்றால் இன்னுமொரு பந்தி போதுமானதாக இருக்காது.
அடுத்த மாகாணசபை வரும்வரை பொறுத்திருப்போம்.!

  • ஊர்க்குருவி