இப்படியும் நடக்கிறது…!

0
170

இலங்கையில் விரைவில் குட்டிப் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு மக்கள் ஆணை ஒன்றின் மூலம் ஆட்சியைக் கைப்பற்ற எதிரணிகள் விரும்புகின்றன.
ஆனால், உடனடித் தேர்தல் ஒன்று ஆளும் பொதுஜன பெரமுனவுக்கோ அல்லது ஜனாதிபதியின் ஐக்கிய தேசியக் கட்சிக்கோ விருப்பத்துக்குரியதல்ல.
உடனடித் தேர்தல் ஒன்று நடந்தால் தமது கட்சி பாரிய பின்னடைவைச் சந்திக்கும் என்பது இவர்களுக்குத் தெரிந்ததுதான்.
அதனால்தான் ஜனாதிபதி ரணில், தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாக வீழ்ந்து கிடக்கும் பொருளாதாரத்தை தூக்கி நிமிர்த்தி விட்டு தேர்தல் ஒன்றுக்கு செல்லவே விரும்புகின்றார்.
இதன் மூலம் வெற்றியை அடைய முடியும் என்று அவர் கணக்குப் போட்டு வருகின்றார்.
விரைவில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால், பொருளாதார நெருக்கடியை விரைவாகக் கடக்க ஆணை பெற்று இலங்கை சர்வதேச ஆதரவைப் பெற முடியும்.
இல்லாவிட்டால், எதிர்காலத்தில் நாட்டில் என்ன நிலைமை ஏற்படும் என்பதை கற்பனை செய்வது கடினம் என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன.
அரசமைப்பின் பிரகாரம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை இப்போதே நடத்தியிருக்க வேண்டும்.
ஆனால், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த ஜனவரி மாதம் அதனை ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்க தீர்மானித்தார்.
ஆனால், தற்போதுள்ள அரசமைப்பின் பிரகாரம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை இனியும் பிற்போட முடியாது.
தேர்தலை மார்ச் இருபதுக்கு முன்னர் நடத்தி முடித்து புதிய உறுப்பினர்களை நியமிக்க வேண்டும்.
அதற்கான ஆயத்தங்களை ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பித்துவிட்டது.
உள்ளூராட்சி தேர்தல் சடத்தின் பிரகாரம் அடுத்தமாதம் இருபதாம் திகதிக்கு பின்னர் தேர்தலுக்கான திகதியை அறிவிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உண்டு என்று அதன் தலைவர் திரும்பத் திரும்பக் கூறிவருகின்றார்.
ஆனால், நாட்டின் தற்போதைய நிலவரப்படி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் ஏற்படும் பயங்கரமான கதி என்ன என்பதை ஐக்கிய தேசியக் கட்சியினரும் பொதுஜன பெரமுனவினரும் நன்கு அறிவர்.
அப்படி ஒரு தேர்தல் நடைபெற்றால், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெறும் எதிர்க்கட்சியே அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்பதும் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்தில் உள்ள பொதுஜன பெரமுன கட்சியினருக்கும் நன்றாகவே தெரியும்.
நல்லாட்சிக் காலத்தில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட- அப்போது எதிரணியில் இருந்த மகிந்த தலைமையிலான பொதுஜன பெரமுன அமோக வெற்றிபெற்றது.
அந்த வெற்றியே அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் பிரதிபலித்தது.
இதனால்தான் உள்ளூராட்சி சபைத் தேர்தலை எப்படியாவது ஒத்திவைக்க ரணில் தற்போது விநோதமான இராகத்தில் துருப்புச் சீட்டு வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்.
நாட்டில் தேர்தல் முறையை மாற்றியமைக்க வேண்டும் என்ற அவரின் கருத்து, இந்தத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான அறிகுறி என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் அமைப்பு தெரிவித்திருந்தது ஞாபகமிருக்கலாம்.
கடந்த சில நாட்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் ஜனாதிபதி, கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர்களை தொலைபேசி ஊடாக தொடர்ந்து தொடர்புகொண்டு வருகிறார் எனவும் அவர்களுக்கும் தேர்தல் நடைபெறாது என்ற உறுதிமொழியே வழங்கப்பட்டு வருவதாகவும் கொழும்பில் ஐ.தே.கவுடன் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
தேர்தல் ஆணைக்குழுவுக்கும் ஜனாதிபதி – அரசாங்கத்துக்கும் எதிரான கயிறு இழுப்பு தொடங்கப்போவதையே நடக்கும் சம்பவங்கள் உணர்த்துகின்றன.!

  • ஊர்க்குருவி