இப்படியும் நடக்கிறது…!

0
214

எந்தத் தேர்தல் வந்தாலும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக விமல் வீரவன்ஸ தெரிவித்திருந்தார்.
இதனையே பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் தெரிவித்திருந்தார்.
அரசியல் கட்சி ஒன்றின் பிரதிநிதி என்றால் இப்படித்தானே சொல்லவேண்டும் என்பது தெரிந்ததுதான்.
பொதுஜன பெரமுனவில் இருந்து விமல் வீரவன்ஸ கோஷ்டியினர் வெளியேறியதற்கு யார் காரணம் என்பது இரகசியமானதல்ல.
பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ஷவின் நடவடிக்கைகளுக்கு எதிராக விமல் அணியினர் பகிரங்கமாக கருத்துச் சொல்லப்போய் அதனாலேயே அவர்கள் கட்சியிலிருந்து வெளியேறவேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது.
தாம் தனித்து தேர்தலைச் சந்திக்க தயாராக இருப்பதாக அவர்கள் திரும்பத் திரும்பத் தெரிவித்துவந்தாலும் அப்படியொரு தேர்தல் நடந்தால் தமது நிலை என்ன என்பது அவர்கள் அறியாததல்ல.
அதனால், பலமான கூட்டணி ஒன்றுக்கு அவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனரென கொழும்புச் செய்திகள் தெரிவித்தன.
பொதுஜன பெரமுனவுக்குள் பஸில் ராஜபக்ஷ பலமடைவதனை தடுக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் தற்போதைய ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க இணைந்த கூட்டணியை உருவாக்குவதில் விமல் வீரவன்ஸ ஈடுபட்டு வருகிறார் என்று சிங்கள வார ஏடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுஜன பெரமுனவின் பக்கத்தில் பல்வேறு இடங்களில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வரும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை மலலசேகர மாவத்தையில் உள்ள அவரின் அதிகாரபூர்வ இல்லத்தில் அரசாங்கத்தில் இருந்து பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக சந்திப்புக்களை நடத்திவருவது குறித்து கடந்த வாரம் இந்தப் பத்தியில் குறிப்பிட்டிருந்தோம்.
இப்போது கோட்டாபயவுக்கும் விமல் வீரவன்ஸ பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பின் தலைவர் ஒருவருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் விபரங்கள் கிடைத்திருக்கின்றன.
விமலின் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தத் தலைவர் கடந்த வாரம் மிகவும் இரகசியமான கலந்துரையாடலில் கோட்டாவிடம் யோசனை ஒன்றைக் கொண்டு சென்றிருக்கிறார்.
கோட்டாவை மீண்டும் அரசியலுக்கு வரவழைத்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் கோட்டாவுக்கும் இடையில் புதிய கூட்டணியை உருவாக்குவதற்கான பிரேரணையே அது.
இது தொடர்பில் ஜனாதிபதி ரணிலுடன் இவர்கள் பல தடவைகள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டுள்ளனர் என்றும் அறிய முடிகின்றது.
பொதுஜன பெரமுனவுக்குள் பஸில் பலமடைவதைத் தடுத்து, பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்த அனைவரையும் கோட்டாவின் கீழ் இணைத்து, கோட்டாவை பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்து, ரணில் தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைப்பதே அவரின் திட்டம்.
இந்த நோக்கத்திற்காக மேலும் பல முக்கிய அரசியல்வாதிகள் இந்த தலைவருடன் இணைந்து செயற்படுகின்றனர் என்று அறியப்படுகின்றது.
இந்த முயற்சிக்கு ரணில் தரப்பில் இருந்தோ அல்லது கோட்டா தரப்பில் இருந்தோ இதுவரை எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கப்படவில்லை என்றும் அந்த கொழும்புச் செய்திகள் தெரிவித்தன.
பொதுஜன பெரமுன, அமைச்சரவையை விஸ்தரிக்க அழுத்தம் கொடுத்து வருகின்றபோதிலும், அதனை தனது ஜப்பான் பயணம் வரை ஒத்திவைத்திருக்கும் ஜனாதிபதி ரணில், அதற்கிடையே முக்கிய முடிவுகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்.
அது எத்தகைய முடிவாக இருக்கும் என்பதில்தான் பல்வேறு குழப்பங்கள் நீடிக்கின்றன.!

  • ஊர்க்குருவி