இப்படியும் நடக்கிறது…!

0
133

மீண்டும் புதிய அரசமைப்பு சட்டம் குறித்தான பரபரப்பு தொடங்கியிருக்கின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஓர் ஆண் டுக்குள் புதிய அரசமைப்பு சட்டம் கொண்டுவரப்படும் என்று அறிவித்ததும் அது குறித்த எமது தலைவர்களின் அறிக்கைகளும் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.
‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் காலத்தில், முதல் நூறு நாட்கள் மிகச் சிறுபான்மை அரசாங்கமாக ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி இருந்தபோதிலும் கொண்டுவரப்பட்ட பத்தொன் பதாவது அரசமைப்பு திருத்தத்துக்கு அப்போது பாராளுமன்றத்தில் பெரும்பான்மையாக இருந்த மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எம். பிக்களும் ஆதரவு வழங்கினார்கள்.
ஜனாதிபதி தேர்தலில் நாட்டு மக்களின் முடிவுக்கு அப்போது அவர்கள் கட்டுப்பட வேண்டியதாக இருந்தது.
அந்த நூறு நாள் ஆட்சிக் காலத்திலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அணி மாறியிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினரும் ஐ. தே. கவின் எம். பிக்களும் தமிழ் எம். பிக்களும் சேர்ந்து இனப் பிரச்னைக்கு தீர்வுகாணக்கூடியதாக இல்லா விட்டாலும் தமிழ் மக்களுக்கு பயன்தரக்கூடிய சில முன்மொழிவுகளை முன்மொழிந்து பத்தொன்பதில் சேர்த்திருக்கலாம்.
ஆனால், அதனைச் செய்யாமல் புதிய அரசமைப்புப் பற்றி பேசத் தொடங்கினார்கள்.
நூறு நாள் ஆட்சியின் பின்னர்- பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் புதிய அரசமைப்பு சட்டத்தை தயாரிப்பதற்காகவே பாராளுமன்றத்தை அரசமைப்பு பேரவை ஆக்கி புதிய அரசமைப்பு என்ற முயற்சியை தொடங்கினார்கள்.
அநேகமாக அந்த பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து மைத்திரி – ரணில் தேனிலவு முடிவுக்கு வரத்தொடங்கியிருந்தது.
ஆனால், அந்த நேரத்திலேயே அவர்கள் அரசமைப்பு முயற்சியை ஆரம்பித்தனர்.
ரணில் தரப்பு அந்த அரசமைப்பு முயற்சிக்கு மனப்பூர்வமான ஆதரவு வழங்கியதா என்பது கேள்விக்குரியதாக இருந்தாலும் அதற்கு மைத்திரி தலைமையிலான அணியும் மகிந்த தலைமையில் பிரிந்து நின்ற அணியும் தமது ஒத்துழைப்பை வழங்கவில்லை என்பது எமது தலைவர்கள் அறியாததல்ல.
அவர்களின் ஆதரவு இல்லாமல் அதனை நிறைவேற்ற முடியாது என்பதும் நம்மவர்கள் அறியாததல்ல.
இருந்தாலும் தமது தலைவர்களையும் உள்ளடக்கிய குழு அரசமைப்பு சட்டத்துக்கான இடைக்கால வரைவை தயாரித்து வெளியிட்டது.
அந்த இடைக்கால வரைவை வெளியிட்ட பின்னர் தமிழ் அரசியல் உலகில் அதிலிருந்த ‘எக்க ராஜ்ய’ என்ற பதம் குறித்துத்தான் பட்டிமன்றமே நடந்துகொண்டிருந்தது.
அதன் தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்தவரான கூட்டமைப் பின் பேச்சாளராக இருந்த எம். ஏ. சுமந்திரன், அந்த இடைக்கால வரைவு குறித்து தனது திருப்தியை வெளியிட்டு வந்ததுடன் அதற்கான தெளிவுபடுத்தல் கூட்டங்களையும் தமிழ் மக்கள் மத்தியில் மாத்திரமன்றி சிங்கள மக்கள் மத்தியிலும் செய்யத் தொடங்கினார்.
ஆனால், அதனை நல்லாட்சி காலத்தில் நிறைவேற்ற முடியவில்லை.
நிறைவேற்ற முடியாது என்பதை அவர்கள் அறியாதவர்களாக இருந்திருக்க முடியாது.
ஆனாலும் தமிழ் மக்கள் மத்தியில் தொடர்ந்து நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலேயே கூட்டமைப்பு நடந்துகொண்டது.
அத்தகைய புதிய அரசமைப்பு முயற்சியில் ஈடுபட்டதற்கு பதிலாக அந்த நூறு நாள் தேனிலவு காலத்திலேயே தமிழ் மக்களின் பல பிரச்னைகளுக்கு முடிந்தளவு தீர்வைக் கண்டிருக்கலாம்.
அவை எல்லாம் முடிந்த கதை.
ஆனால், இப்போது ரணில் விக்கிரமசிங்க ஒரு வருடத்தில் புதிய அரசமைப்பு சட்டத்தை கொண்டுவருவேன் என்று சொன்னதும், விழுந்தடித்துக் கொண்டு தாங்கள் அதற்கு ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அறிக்கை வெளியிடுகின்றார்.
‘புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஜனாதிபதி சட்டத் தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையிலான குழுவினர் சமர்ப்பித்துள்ள அறிக்கை குறித்து விசேட கவனம் செலுத்தி, ஒரு வருட காலத்துக்குள் புதிய அரசமைப்பை உருவாக்க ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாக்குறுதி வழங்கியுள்ளார்’ என இலங்கை கம்யூனிஸக் கட்சியின் பதில் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வீரசிங்க வீரசுமணவே தெரிவித்திருந்தார்.
இதனையடுத்தே பிரதமர் தினேஸ் குணவர்த்தன, ஜனாதி பதியின் இந்த முயற்சிக்கு தமிழ் தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையிலேயே சம்பந்தனும் அவரைத் தொடந்து சுமந்திரனும் இந்த புதிய அரசமைப்பு தொடர்பாக கதைக்கத் தொடங்கியிருக்கின்றனர்.
இவர்களின் அந்த அறிவிப்பு இந்த ஊர்க்குருவிக்கு ஆச்சரியத்தை தந்தது.
ரணில் பிரதமராக இருந்தபோது, ஐந்து ஆண்டுகள் செல விட்டு தயாரிக்கப்பட்ட அரசமைப்புக்கான வரைவு ரணிலிடம் தயாராக இருக்கும்போது எதற்காக அவர் கோட்டாபய ஆட்சியில் தயாரிக் கப்பட்ட வரைவை கையில் எடுக்கிறார் என்பது புரிந்துகொள்ளக் கூடியதே.
ஆனால், ஐந்து ஆண்டுகள் ஒவ்வொரு தீபாவளிக்கும் தீர்வு கிடைத்துவிடும் என்று நம்பிக்கை கொடுத்துக்கொண்டிருந்த தலைவர், அந்த ஐந்து ஆண்டுகளில் செய்ததை தொடர்ந்து செய்து முடியுங்கள் என்று ஏன் கோரிக்கை விடுக்கவில்லை என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.! அதைவிட முக்கியமானது, அடுத்த இரண்டு ஆண்டுகளில் எந்தவொரு தேர்தலையும் நடத்தக்கூடிய நிலையில் நாட்டின் பொருளாதாரம் இல்லை என்று ஜனாபதி ரணில் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.
ஓர் ஆண்டில் புதிய அரசமைப்பு திட்டத்தைக் கொண்டுவருவதெனில் அதற்காக ஒரு சர்வஜன வாக்கெடுப்பை – அதாவது ஒரு நாடளாவிய தேர்தலை நடத்தியே ஆகவேண்டும்.
அப்படியெனில், இரண்டு ஆண்டுகளில் அப்படியொரு தேர்தல் நடக்க வாய்ப்பில்லை என்றும் ஜனாதிபதி சொல்லிவிட்ட பின்னர் யாருக்காக அவர் இப்படி சொல்கிறார் என்பது அவருக்கு மாத்திரமே தெரிந்தது.!

  • ஊர்க்குருவி