இப்படியும் நடக்கிறது…!

0
156

தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமை குறித்த செய்திகள் நமக்கு புதியவையல்ல.
இதுபோன்ற செய்திகள் நாம் பல தடவைகள் படித்தவைதான்.
இதுபோன்ற முயற்சிகளைச் செய்பவர்கள் அது நடைபெறக்கூடிய வகையில் அதற்கான முயற்சிகளைச் செய்யவேண்டும் என்பதே இந்த ஊர்க்குருவியின் விருப்பமாக இருந்தது.
அதனால்தான், இந்தக் கூட்டத்தைக் கூட்டிய விவகாரத்தையும் அதில் மாவையின் பங்களிப்பையும் இந்தப் பத்தியில் கேள்விக்கு உட்படுத்தியிருந்தோம்.
இதுபோன்ற முயற்சிகளை செய்பவர்கள் அதனை ஆரம்பத்திலேயே சரியான முறையில் திட்டமிடவில்லை என்றால், அது முதல்கோணல் முற்றிலும் கோணலாகிவிடும் என்பதை சுட்டிக்காட்டுவதற்காகவே அவ்வாறு குறிப்பிடவேண்டியதாயிற்று.
எமது சந்தேகம் அல்லது எதிர்பார்ப்பு சரியானதுதான் என்பதையே அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு கட்சித் தலைவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.
தற்போதைய நிலையில் மாவை சேனாதிராசாவை தலைவராகக் கொண்டு, தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் செயல்படவேண்டும் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க. வி. விக்னேஸ்வரன் அறிக்கை வெளியிட்டு எமது ஊகங்களுக்கு விடையளித்திருக்கின்றார்.
வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளருக்கு தகுதியில்லை என்பதால்தான் மாவை வேட்பாளராக்கப்படவில்லை என்று முன்னர் ஒரு தடவை தெரிவித்திருந்தவர் விக்னேஸ்வரன்.
அது மாத்திரமல்ல, வேலன் சுவாமிகள் முதலமைச்சர் வேட்பாளராகத் தகுதியான ஆள் என்று அதன்பின்னர் கூறியவர்.
அத்தகைய ஒருவரை இன்றைய நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு தலைமை தாங்க அழைப்பு விடுக்கிறார்.
இந்த இடைப்பட காலத்தில் மாவை தகுதியான ஆளாக மாறியிருக்கிறாரா அல்லது அந்த தேசியக் கட்சிகளுக்கு தலைமை தாங்குவதற்கு அவரின் தகுதியே போதுமானது என்கிறாரா என்பது தெரியவில்லை.
ஏற்கனவே, தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியிலேயே மாவை ஆளுமையோடு பணியாற்றினாரா என்பது விக்னேஸ்வரனுக்கு தெரியாததல்ல.
அவர் ஆளுமையுள்ள தலைவராக இருந்திருந்தால், இன்று விக்னேஸ்வரன் என்ற ஒருவரே தமிழ்த் தேசிய அரசியலில் இருந்திருப்பாரா என்பது அவருக்கு தெரியாததல்ல.
அண்மைக்காலமாக தமிழரசு, புதிய தலைவர் ஒருவரின் கீழ் செயல்பட்டால்தான் அந்தக் கட்சியையே காப்பாற்ற முடியும் என்ற குரல்கள் பலமாக கேட்கத்தொடங்கியிருக்கின்றன.
அந்தப் பதவியில் குறிவைத்திருக்கும் ஒரு முக்கிய தலைவருடன் தொலைபேசியில் காலை தொடர்புகொண்டு கேட்டேன், ‘உங்களுக்கு விக்னேஸ்வரன் வழிகாட்டுகிறார் போல் தெரிகின்றதே’ என்று.
அவருக்குப் புரியவில்லை.
நானே சொன்னேன், ‘இனி என்ன புதிய தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டணிக்கு மாவை தலைவராகிவிட்டால், நீங்கள் தமிழரசின் தலைவராகுவதில் இனி சிரமம் இருக்காதுதானே’ என்று.
அவர் மிகுந்த கோபத்துடன் சொன்னார், ‘கூட்டமைப்பை பலவீனப்படுத்தி முடிந்தது.
இப்போது சம்பந்தனையும் இல்லாமல் செய்ய முயற்சி நடக்கின்றது போல’ என்று.
சம்பந்தன் குறித்து எமக்கும் பல விமர்சனங்கள் உண்டு.
அவர் பல சந்தர்ப்பங்களில் தனது ஆளுமையை வெளிப்படுத்தவில்லை என்பதை ‘ஈழநாடு’ பல தடவை தனது ஆசிரியத் தலையங்கங்களிலும் சுட்டிக்காட்டியிருக்கின்றது.
ஆனால், அதேவேளையில் சம்பந்தன் என்ற ஒரு தனிமனிதனால் மாத்திரமே கூட்டமைப்பு என்ற அமைப்பு இன்றுவரை சிதைந்துவிடாமல் இருக்கின்றது.
அண்மையில், சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து திருகோணமலைக்கு ஒரு பிரதிநிதி தெரிவாகவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டபோது, அப்படி செய்தாலும் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிவிலகி சம்பந்தனை எம்.பி. ஆக்கவேண்டும் என்று சிறீகாந்தா அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ஆக, சம்பந்தனை ஓரம்கட்டி ஒரு கூட்டணியை ஆரம்பிக்க நினைப்பது உண்மையான ஒற்றுமைக்கான முயற்சியாக இருக்காது.
இதனால்தான் நேற்றைய இந்தப் பத்தியில் ஒற்றுமையை தமிழரசோ, அல்லது ரெலோவோ முன்னெடுக்கவேண்டும் என்று இந்தப் பத்தி சுட்டிக்காட்டியிருந்தது.
இந்த ஒற்றுமை முயற்சியில் இதுபோன்ற கருத்துக்களை தவிர்ப்பதுதான், அதன் நோக்கத்துக்கு உதவும் என்பதை அனைவரும் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.!

  • ஊர்க்குருவி