இப்படியும் நடக்கிறது…! கனடாவிலிருந்து நண்பர் ஜெகதீசனிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது…

0
249

கனடாவிலிருந்து நண்பர் ஜெகதீசனிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது.
யாழ்ப்பாணம் ‘ஈழநாடு’வில் பணியாற்றிய காலத்திலும் பின்னர் கனடாவில் சஞ்சிகை நடத்திய காலத்திலும் அவர் எதை எழுதினாலும் இரண்டு தடவை வாசித்தால் தான் அவர் என்ன சொல்ல வருகின்றார் என்பதை புரிந்துகொள்ளலாம்.
அவரின் மின்னஞ்சல் இதுதான்: ‘எனக்கு முன்னால் இரண்டு கழுதைகள் எனின், எனக்குப் பின்னால் உள்ள தேசம் படுகொலை செய்யப்படும் என்பதைத்
தான் வெள்ளைக்காரன் அன்றே சொல்லிப் போட்டான்.
மாநாட்டை இழுத்தடிக்கும் மாவைக்கு மட்டும் ஆங்கில அறிவு கொஞ்சமாவது இருப்பின் ASSASSINATION இற்கு விளக்கம் இதுதான் என்பாரோ?’ – இவ்வளவுதான் அந்த மின்னஞ்சல்.
தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றபோது, தமிழரசின் அடுத்த பொதுச்சபை கூட்டம், அதாவது வருடாந்த மாநாடு எப்போது நடக்கும் என்பது முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், உள்ளூராட்சி தேர்தல் பற்றிய முடிவெடுப்பதில் உறுப்பினர்களிடையே நடந்த கடும் வாக்குவாதமும் தேர்தலில் தனித்து போட்டியிடுவது, கூட்டமைப்பில் மற்றவர்களை உள்வாங்குவதில்லை – பதிவுசெய்வதில்லை என்ற முடிவுகளால் மாநாட்டு விவகாரம் பின்னுக்குப் போய்விட்டது.
‘அசாசிநேஷன்’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தமிழ்: படுகொலை.
அந்த அசாசிநேஷனில் உள்ள ஏ எஸ் எஸ் என்றால் அதன் தமிழ் கழுதை.
முன்னால் உள்ள இரண்டு கழுதைகளை எடுத்துவிட்டால் பின்னாலுள்ளது நேஷன்: தேசம்.
அதாவது முன்னால் உள்ள இரண்டு கழுதைகளை எடுத்து விட்டால் பின்னால் உள்ள தேசம் படுகொலை செய்யப்படும் என்று அவர் சொல்கிறார்.
அதற்கும் மாவை தமிழரசின் மாநாட்டை இழுத்தடிப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று மீண்டும் தலையை சொறியத்தேவையில்லை என்று நினைக்கின்றேன்.
இப்போது, தமிழரசு எடுத்த முடிவுகள் குறித்து இன்று கூட்டமைப்பின் பங்காளிகளுடனான சந்திப்பில் இறுதி முடிவு எடுக்கப்படவிருக்கின்றது.
உள்ளூராட்சி தேர்தலில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுவது பற்றி தமிழரசு முடிவெடுத்தது பற்றி மற்றுமொரு பங்காளிக் கட்சித் தலைவருடன் பேசியபோது அவர் சொன்னார், அவர்கள் தாங்கள் தனியாக போட்டியிடுவது என்று முடிவெடுத்தது அவர்களின் உரிமை.
ஆனால், கூட்டமைப்பிலுள்ள மற்றைய இரண்டு கட்சிகளையும் தனித்தனியாகப் போட்டியிடுங்கள் என்று சொல்வதற்கு அவர்களுக்கு யார் அந்த உரிமையைக் கொடுத்தது என்பது தெரியவில்லை’, என்று.
உண்மைதான், அவர்கள் இருவரும், அதாவது கூட்டமைப்பிலுள்ள மற்றைய கட்சிகள் புளொட்டும், ரெலோவும் எப்படி தேர்தலில் போட்டியிடுவது என்று அவர்கள்தானே முடிவெடுக்கவேண்டும்? அது அவர்கள் இருவரும் சேர்ந்து கேட்பதாகவும் இருக்கலாம் அல்லது கூட்டமைப்புக்கு வெளியே இருக்கும் கட்சிகளுடன் இணைந்து கேட்பதென்று முடிவெடுப்பதாகவும் இருக்கலாம்.
அது அவர்களின் உரிமை.
அதில் வேறு ஒரு கட்சி தலையிட முடியாதுதான்.
இன்றைய கூட்டமைப்பின் தலைமைக்குழுக் கூட்டத்துக்கு பின்னர் அவர்கள் என்ன முடிவெடுக்கின்றார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
கூட்டமைப்பில் மற்றைய தமிழ் தேசியக் கட்சிகளை இணைத்துக்கொள்வது என்ற கோரிக்கை தொடர்பாக தமிழரசு எடுத்த முடிவு பற்றி நேற்று இந்தப் பத்தியில் குறிப்பிட்டிருந்தோம். விக்னேஸ்வரன் விரும்பினால் மீண்டும் வந்து தமிழரசில் இணைந்துகொள்ளலாம் என்று தமிழரசு கோரிக்கை விடுத்தது பற்றி நேற்றைய பத்தியில் எழுதியிருந்தோம்.
அது குறித்து குறிப்பிட்ட நண்பர் ஒருவர், விக்னேஸ்வரனை முதலமைச்சாராக களமிறக்க கோரிக்கை விடுக்கப்பட்டபோது, அவர் அனைத்துக் கட்சிகளும் கூட்டாக கோரிக்கை விடுத்தால் மாத்திரமே தான் போட்டியிடுவேன் என்று தெரிவித்திருந்தமை வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
அதன் அர்த்தம் தான் ஒரு கட்சியின் வேட்பாளர் அல்ல என்பதும், அவர் அனைத்துக் கட்சிகளின் பொது வேட்பாளராகவேகளம் இறங்குவேன் என்பதும்தான்.
ஆக, விக்னேஸ்வரன் தமிழரசு கட்சிக்கு மட்டும் சொந்தக்காரராக இருந்தவரல்ல.
அவர் பொது வேட்பாளர்.
இப்போது அவர் ஒரு கட்சியின் தலைவர்.
அவருக்கு முப்பத்தி ஐந்து ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வாக்களித்து அவரை பாராளுமன்றத்துக்கு அனுப்பியிருக்கின்றார்கள்.
அவரின் கட்சியை கூட்டமைப்பில் இணைத்துக்கொள்ள முடியாது என்றால் அதனை சொல்வதற்கு தமிழரசுக்கு உரிமையுண்டு.
ஆனால், அதனை வடிவேலுவின் நகைச்சுவை பாணியில் சொல்வதானால், ஒரு பொறுப்புள்ள கட்சிக்கு அழகல்ல.

  • ஊர்க்குருவி