இப்படியும் நடக்கிறது…!

0
228

உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு பலரும் விரும்பியதோடு யாரைப் பிடித்தால் வேட்பாளார் நியமனம் கிடைக்கும் என்பதைத் தேடி அறிந்து அவர்களின் தயவுக்காக காத்திருக்கத் தொடங்கினர்.
பலரதும் கவனம் தமிழரசு கட்சியில் நியமனம் பெறுவதிலேயே இருந்தது.
ஆனால், கூட்டமைப்பிலிருந்து வெளியேறும் முடிவைத் தமிழரசு கட்சி தன்னிச்சையாக எடுத்ததும் நிலைமை தலைகீழாக மாறிவிட்டிருந்தது.
இவ்வாறு அரசியலில் ஆர்வம் கொண்டிருந்த பலரும் இந்த ஊர்க்குருவியையும் தொடர்புகொண்டு, தமிழரசு கட்சியோடு இனியும் நிற்பது பயனற்றது என்றும் புளொட் மற்றும் ரெலோ ஏனைய கட்சிகளை சேர்த்து அமைக்கும் புதிய
கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு எவரின் மூலம் வாய்ப்பைப் பெறலாம் என்றும் ஆலோசனைகளை கேட்கத் தொடங்கியிருந்தனர்.
ஆனால், அப்படி கேட்டுவந்த சிலரும் கடந்த இரண்டு தினங்களாக வெளிவந்த செய்திகளைப் பார்த்து, சற்றுத் தயக்கமடைந்திருந்ததைக் காணமுடிந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் புதிதாக இணையும் கட்சிகளில் விக்னேஸ்வரனின் கட்சியும் ஒன்று என்பது எதிர்பார்க்கப்பட்டது மட்டும் அல்லாமல், அவரே கூட்டமைப்புக்குத் தலைமை தாங்கலாம் என்றும் வதந்திகள் உலாவவிடப்பட்டமையே, அவர்களின் இந்த பின்னடிப்புக்கு காரணமாகியிருந்தது.
விக்னேஸ்வரனின் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இயங்குமானால், அது ஒரு வெற்றிக் கூட்டணியாக அமையாது என்பது இவர்களின் கருத்தாக இருந்ததைக் காணமுடிந்தது.
இப்படி பலரும் தத்தமது கருத்துகளை பகிர்ந்து கொண்டிருந்தபோதுதான், கூட்டமைப்பில் புதிய கட்சிகளை சேர்த்துக்கொள்வது தொடர்பாக நேற்று நடந்த கூட்டத்தில் விக்னேஸ்வரன் நடந்துகொண்ட விதம் அவர்களின் கருத்தை
நியாயப்படுத்துவதாக அமைந்தது.
இதற்கு முன்னதாக – கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோவும் புளொட்டும் கூட்டமைப்பு பதிவுசெய்யப்பட வேண்டும் என்றும் – அவ்வாறு பதிவு செய்யப்படும் கூட்டமைப்பின் சின்னத்திலேயே இனிமேல் தேர்தல்களில் போட்டியிட வேண்டும் எனவும் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளையும் கூட்டமைப்புக்குள் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்றும் தமிழரசு கட்சிக்கு யோசனை முன்வைத்திருந்தனர்.
ஆனால், அதனை ஏற்றுக்கொள்ளாதது மட்டும் இல்லாமல், கூட்டமைப்பை விட்டுப் பிரிந்து தனித்துச் செல்லும் முடிவை தமிழரசு கட்சி எடுத்தது.
பின்னர், கூட்டமைப்பில் எஞ்சிய இந்த இரண்டு கட்சிகளும் வெளியே இருந்த ஏனைய கட்சிகளையும் கூட்டமைப்பில் உள்வாங்குவதற்கான பேச்சுகளை ஆரம்பித்திருந்தன.
அந்தப் பேச்சுக்கான கூட்டத்தில், கடந்த 2020 தேர்தலில், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்ற பெயரில் விக்னேஸ்வரன் தலைமையில் அணி சேர்ந்து இருந்தவர்களையும் இணைக்க பேச்சுகள் நடந்தன.
அந்தக் கூட்டணியில் – விக்னேஸ்வரனின் கட்சியான தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியுடன், ஈ. பி. ஆர். எல். எவ். மற்றும் சிவாஜிலிங்கம்- சிறீகாந்தாவின் பதிவுசெய்யப்படாத தமிழ் தேசியக் கட்சி ஆகிய கட்சிகளே அணிசேர்ந்து கடந்த
தேர்தலில் போட்டியிட்டன.
அந்த நேரத்தில், அந்தக் கூட்டணியிலிருந்த ஒரேயொரு பதிவுசெய்யப்பட்ட கட்சியான ஈ. பி. ஆர். எல். எவ். கட்சியின் பெயரை, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்று பெயர்மாற்றம் செய்துவிட்டு, அந்தக் கட்சியின் மீன் சின்னத்தில் போட்டியிட்டே விக்னேஸ்வரன் எம். பி. ஆகியிருந்தார்.
ஆனால், அவர் எம். பி. ஆகிய பின்னர் அவரின் சொந்த கட்சியான தமிழ் மக்கள் கூட்டணி தேர்தல் ஆணைக்குழுவால் பதிவுசெய்யப்பட்ட கட்சியாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது.
இந்தப் பின்னணியிலேயே – அந்தக் கூட்டணியிலுள்ள கட்சிகளோடு ஜனநாயகப் போராளிகள் கட்சியையும் சேர்த்துக்கொண்டு பாரிய கூட்டமைப்பை உருவாக்கும் பேச்சுகள் புளொட் மற்றும் ரெலோவால் முன்னெடுக்கப்பட்டன.
அதற்கான பேச்சுகள் நேற்று தொடர்ந்து இரண்டாவது நாளாக நடந்துகொண்டிருந்தபோது – முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளின் – ஜனநாயகப் போராளிகள் கட்சியை கூட்டமைப்புக்குள் சேர்க்க விக்னேஸ்வரன் கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.
தொடர்ந்து, தனது புதிய சொந்தக் கட்சியான தமிழ் மக்கள் கூட்டணியின் பெயரிலேயே போட்டியிடவேண்டும் என்ற நிபந்தனையையும் விக்னேஸ்வரன் முன்வைத்தார்.
பல தசாப்த தேர்தல் அனுபவங்களையும் மக்களின் அறிமுகத்தையும் கொண்டிருந்த தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்தில் கூட இனி போட்டியிடுவதில்லை என்று முடிவுக்கு வந்து, பொதுச் சின்னம் ஒன்றை கோரி நின்ற புளொட் மற்றும் ரெலொ
கட்சிகளை அவமரியாதை செய்வதாக அமைந்தது விக்னேஸ்வரனின் நிபந்தனை.
விடுதலைப் புலிகளே ஒரு தடவை ஈரோஸ் இயக்கத்தினரை ரெலோவின் கலங்கரை விளக்கம் சின்னத்தில் போட்டியிட வைத்து எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களை வெல்ல வைத்தார்கள்.
அதாவது ரெலோவிடம் மிகப்பழைய – மக்கள் மத்தியில் அறிமுகமான – கலங்கரை விளக்கம் சின்னம் இருக்கின்றது.
புளொட் அமைப்பு தமது நங்கூரம் சின்னத்தில் போட்டியிட்டு வன்னியில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை வென்றதுடன், யாழ்ப்பாணத்தில் நான்கு உள்ளூராட்சி சபைகளையும் ஆட்சி செய்தது.
இந்த இரு கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் முதல் தடவை பாராளுமன்றம் சென்றதே புளொட்டின் நங்கூரம் சின்னத்தில் போட்டியிட்டே.
இதேபோல, ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் சுரேஷ் பிறேமச் சந்திரன் முதலில் பாராளுமன்ற உறுப்பினரானது தனது கட்சியின் செவ்விரத்தம் பூ சின்னத்தில் போட்டியிட்டே.
இவ்வாறான வரலாற்றை கொண்ட சின்னங்களை உடையவர்களே, ஒரு பொது நோக்கத்துக்காக, புதிய சின்னம் ஒன்றின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்தி போட்டியிடத் தயாராக இருந்தபோது – ‘நேற்று பெய்த மழைக்கு இன்று
முளைத்த காளான்’ போன்ற தனது புதிய கட்சியின் யாருக்கும் தெரியாத சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று நிபந்தனை போட்டார் விக்னேஸ்வரன்.
ஏனையோர் அதனை ஏற்க மறுத்துவிட, கூட்டத்திலிருந்து வெளியேறியிருக்கின்றார் விக்கியர்.
இந்த சம்பவங்களைக் கேள்விப்பட்ட நண்பர் ஒருவர் சொன்னார், ‘நல்ல காலம் கூட்டமைப்பு தப்பித்து விட்டது.
விக்கியர் உள்ளே இருந்திருந்தால் என்றோ ஒரு நாள் அது மிக மோசமான கட்டம் ஒன்றை சந்தித்திருக்கும்’ என்று.
தன்னை நம்பி அரசியலுக்கு கொண்டு வந்த சம்பந்தனையே அவமதித்த அவர், தன்னை மக்களிடத்தில் பிரபல்யப்படுத்திய கஜேந்திரகுமார் மீதே பகிரங்க குறைகளை அடுக்கிய அவர், பின்னர் தன்னோடு இருந்து தனது வெற்றிக்கு உழைத்த சாவகச்சேரி அருந்தவபாலன் போன்றவர்களையே ஒதுக்கித்தள்ளிய அவர் – இப்போதே கூட்டமைப்புக்குள் உள்வாங்கப்படாதது அதன் ஓர் ஆரோக்கியமான மீளெழுச்சியாகவும், அதன் எதிர்காலத்துக்குப் பிரகாசமாகவும் இருக்கப்போகின்றது என்பதையே வெளிச்சம் போட்டிருக்கின்றது.!

  • ஊர்க்குருவி