இப்படியும் நடக்கிறது…!

0
159

யாழ்ப்பாணத்தில் ஒருவர் அவ்வப்போது மக்களுக்கு உதவுவதில் முன்னுக்கு நிற்பார்.
அன்றாடம் அடுத்த வேளை உணவுக்காக அல்லல்படும் மக்களுக்கு உணவுப்பொதிகள் வழங்குவார்.
அவரின் உதவிகள் பலருக்கு பலவேளை உணவளித்திருக்கின்றது.
வீடற்றவர்கள் பலருக்கு வீடுகளை கட்டிக்கொடுத்தார்.
அவர் உதவுவது சமூக சேவைதான்.
ஆனால், அவர் மக்களுக்கு தான் செய்த உதவிகளை நம்பி தேர்தலில் போட்டியிட கட்டுப் பணம் செலுத்தினார்.
அதாவது, தான் செய்த உதவிகளை நம்பி தனக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்று நம்பினார்.
அதை ஏன் இங்கு எழுதுகிறேன் என்றால், எவர் ஒருவர் யாருக்கு உதவிசெய்தாலும் அதற்காக அவர்கள் தமக்கு சில நன்மைகளை எதிர்பார்ப்பது நியாயமானதுதான்.
இது நமக்கு கிடைக்கும் சர்வதேச உதவிகளுக்கும் பொருத்தமானதுதான்.
இலங்கைத் தமிழர் விடயத்தில் இந்தியா தமிழர்களுக்கு உதவவந்ததற்குப் பின்னாலும் இந்தியாவின் நலனும் இருக்கும் என்பது தெரிந்ததுதான்.
மத்தியில் ஆட்சிசெய்யும் அரசுகள், அல்லது கட்சிகள் ஈழத் தமிழர்களுக்கு உதவுவதன் மூலம் தமிழக தமிழர்களின் ஆதரவு தமக்கு கிடைக்கும் என்று நம்புவதும் ஒருவகையில் அவர்களின் தனிப்பட்ட நலன் சார்ந்ததுதான்.
இது இந்திய உதவிகளுக்கு மாத்திரமல்ல் கனடா, பிரிட்டன் நாடுகளின் உதவியின் பின்னாலும் இருக்கின்றது.
அதற்காக, தனது நலன்களுக்காக மட்டும்தான் இந்தியா நமக்கு உதவ வருகின்றது என்ற வாதம் அபத்தமானது.
அவர்களின் உதவியை இறுகப்பற்றிக்கொண்டு அதன்மூலம் நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளை பெற்றுக்கொள்ள முயற்சிப்பதுதான் சரியான இராஜதந்திரமாக இருக்கமுடியும்.
விடுதலைப் புலிகள் இருக்கும்வரை அவர்கள் தமது ஆயுத பலத்தின் மூலம் நமக்கென தனிநாடு ஒன்றை உருவாக்கலாம் என்று நம்பினார்கள்.
அப்படி அவர்கள் தனிநாடு ஒன்றை அமைப்பதை இந்தியா இரசிக்கவில்லை.
அது தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று இந்தியா அச்சமடைந்ததே அதற்குக் காரணம். அதனால் அப்படியொரு தீர்வு எமக்கு கிடைப்பது தமக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று இந்தியா நினைப்பதும் தவறில்லை.
அதனால்தான் புலிகள் இருக்கும்வரை இந்தியாவுடன் நெருங்கிச் செல்ல அவர்கள் தயக்கம் காட்டினார்கள்.
ஏனெனில், இந்தியா தமது தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவு வழங்காது என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்ததால்.
ஆனால், இன்று நிலைமை அப்படியல்ல.
சர்வதேசம் நமக்கு உதவும் என்ற ஒரே நம்பிக்கையிலேயே நாம் நமது அரசியலை நகர்த்திக் கொண்டிருக்கின்றோம்.
அவ்வாறு சர்வதேசத்தை நம்பியிருக்கின்ற நாங்கள், அவர்கள் தமது நலன்களை முன்நிறுத்தக்கூடாது என்று எதிர்பார்ப்பது புத்திசாதுரியமானதல்ல.
இந்தப் பின்னணியில்தான், இந்தியாவின் இலங்கைத் தமிழர்களுக்கான உதவியையும் நோக்கவேண்டியிருக்கின்றது.
ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்டம் எழுபது ஆண்டுகள் பழமையானது.
முதலில் சாத்வீக வழிகளில் போராட்டங்களை நடத்தி அது பயனற்றது என்ற முடிவுக்கு வந்த பின்னர், மூன்று தசாப்தங்கள் ஆயுதப்போராட்டம் நடத்தி இறுதியில் தமிழ் மக்களுக்கு கிடைத்தது இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பயனாக கிடைத்த மாகாண சபைகள்தான்.
அது நிரந்தரமான தீர்வு என்று யாரும் வாதிடப்போவதில்லை.
அதில் இருக்கும் குறைபாடுகளை எடுத்துச் சொல்லி அது தீர்வு அல்ல என்பதை ஆதாரங்களுடன் நிறுவுவதற்கு காரணம், அதற்கு மேலே செல்வதற்கு அது ஓர் ஆரம்பப்புள்ளி என்பதால்தான்.
அதிகம் ஏன், மாகாண சபைகளுக்கான தேர்தல்களை மத்திய அரசு தான் நினைத்தால் மாத்திரமே நடத்த முடியும் என்ற நிலையே அதன் மிகப்பெரிய பலவீனம்தான்.
ஆனால், அதுபோன்ற குறைகளை நிவர்த்தி செய்வதற்காக முதலில் போராடி, அது சாத்தியமாகாதபோது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தால், அந்த நகர்வுக்கு சர்வதேச உதவியை பெறுவதும் சுலபமானது.
அதைவிடுத்து, மாகாண சபைகளையே தீண்டத்தகாததாகப் பார்ப்பதும் எந்த வகையிலும் நமக்கு உதவாது.
இன்று இலங்கைத் தமிழர் விடயத்தில் இந்தியா அக்கறை காட்டிநிற்பது அதன் நலன்சார்ந்தது என்றாலும் அதனை தட்டிக் கழிப்பது நமக்குப் பயன்தரப்போவதில்லை.
தமிழ் மக்களின் அரசியல் தலைமை தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் இருப்பதனால், கூட்டமைப்பின் தலைமை தமக்கு ஏற்றதாக இருக்கவேண்டும் என்பதில் இந்தியா எப்போதுமே அக்கறை காட்டி வந்திருக்கின்றது.
அதனால்தான், சம்பந்தனுக்கு அடுத்து தலைமையில் குறிவைப்பவர்கள்கூட இந்தியாவின் ஆதரவை நோக்கி நகர்வதைக் காணமுடிந்தது.
மேலே சொன்னதுபோல, தமிழர்கள் ஒற்றுமையாக பலமான ஓர் அரசியல் சக்தியாக இருந்தால்தான் அவர்களின் பலத்தின் ஊடாக இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கலாம் என்பதிலும் இந்தியா அக்கறைகாட்டி வந்திருக்கின்றது.
தமிழ் மக்களின் மாபெரும் அரசியல் தலைமையாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமிழரசுக்கட்சி வெளியேறி தனித்துப் போட்டியிடுவது என்ற முடிவை எடுத்த பின்னர், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் இரண்டும் சேர்ந்து கூட்டமைப்பை பலப்படுத்த முயற்சி எடுத்தபோது அவர்களின் முயற்சிக்கு இந்தியா மறைமுகமாக ஆதரவு வழங்கியிருக்கின்ற செய்திகள் இராஜதந்திர வட்டாரங்களில் தற்போது பேசப்பட்டு வருகின்றது.
அதனால்தான் தமிழரசு தனித்துப் போட்டியிட முடிவெடுத்த பின்னர் தமிழரசு தலைவர் மாவை சேனாதிராசாவை தொடர்புகொண்ட இந்தியத் தரப்பு அவரது கட்சிக்கு உறைக்கின்ற மாதிரி சில செய்திகளைச் சொன்னதாக தெரியவந்தது.
அது பற்றியும் நாளை பேசுவோம்.!

  • ஊர்க்குருவி