தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வி. ஆனந்தசங்கரி ஐயாவை அண்மையில் சந்தித்த போது, ‘ஏனடா தம்பியவை ஈழநாடு பேப்பரிலை என்னைப் பற்றி நல்லாவும் எழுதுறியள் இல்லை, கூடாமலும் எழுதுறியள் இல்லையே’ என்று கூறினார்.
அவரைப் பற்றி இரண்டு விதமாக எழுதுவதென்றாலும் பல நாட்களுக்கு இந்தப் பத்தியை எழுதிக்கொண்டே இருக்கலாம்.
ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ நிறுவனத்தால் சகிப்புத்தன்மையை பேணுதல் மற்றும் வன்முறைக்கு
எதிரானவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதைப் பெற்ற ஒரேயோர் இலங்கையர் என்ற பெருமையைப் பெற்றவர்.
கிளிநொச்சி இன்று தனிமாவட்டமாக இருப்பதற்கு காரணமான ஒரோயொருவர்.
கிளிநொச்சி தொகுதியில் இரண்டு தடவைகள் எம். பியாக இருந்தவர்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக ஒரு தடவை பதவியில் இருந்தவர்.
தன்னுடைய இளமைக்காலத்தில் லங்கா சமசமாஜக் கட்சியில் இணைந்து அரசியல் நடவடிக்கையில் ஈடுப்பட்டு வந்த ஆனந்த சங்கரி பின்னர் ஜீ. ஜீ. பொன்னம்
பலத்தின் அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் கட்சியில் இணைந்து கிளிநொச்சி எம்.பியானார்.
பின்னர் காங்கிரஸ் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய போது, அதில் முக்கிய தலைவராக இருந்தவர்.
இன்றுவரை தனக்கு எது சரி என்று படுகின்றதோ அதனை எந்தக் கட்டத்திலும் விட்டுக்கொடுக்காமல் இருப்பவர்.
அதனால்தான் அவர் இன்றுவரை தனித்து நின்றுகொண்டிருக்கிறார்.
மற்றைய தலைவர்கள் போல ‘வளைந்து’ கொடுக்கத் தெரிந்திருந்தால் இன்றும் அவர் முன்னணி தலைவராக வலம் வந்திருப்பார்.
அவரைப் பற்றி எதற்காக இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றேன் என்று நீங்கள் நினைக்கலாம்.
சில வருடங்களுக்கு முன்னர், கிளிநொச்சியில் ஒரு விழாவுக்கு அவருக்கு அழைப்பு கிடைத்தது.
இராணுவத்தினர் வசமிருந்த காணிகளை விடுவித்து, அவற்றை அந்தக் காணிகளின் சொந்தக்காரர்களுக்கு கையளிப்பதற்கான வைபவம் அது.
கிளிநொச்சியின் மூத்த அரசியல் தலைவர் என்ற வகையில் ஆனந்தசங்கரியை அந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்ற அழைப்பு அது.
அந்த விழாவுக்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்த இராணுவத்தினரின் முக்கிய அதிகாரி ஒருவர் நேரில் சென்று அந்த அழைப்பிதழை வழங்கினார்.
ஆனந்தசங்கரி கேட்டார், ‘காணி இல்லாத மக்களுக்கு புதிதாகக் காணிகளை வழங்குகின்றீர்களா?’ என்று.
அதற்கு அந்த அதிகாரி, ‘இல்லை ஐயா, நாங்கள் இதுவரை பயன்படுத்தி வந்த காணிகளை விடுவிக்கிறோம்.
அவ்வாறு விடுவிக்கின்றபோது ஏற்கனவே அந்தக் காணிகளின் சொந்தக்காரர்களாக இருந்தவர்களிடம் அதனை கையளிக்கப்போகின்றோம்’ என்றிருக்கிறார்.
அதற்கு ஆனந்தசங்கரி சொன்னது: ‘அவர்களின் காணிகளை அவர்கள் உங்களுக்கு தந்தார்களா? நீங்கள் பாவியுங்கள் என்று.
இல்லையே.
யுத்தம் நடத்தி அவர்கள் இருந்த இடங்களை நோக்கி குண்டுத் தாக்குதல்களை நடத்தி அவர்களை அங்கிருந்து வெளியேற வைத்துவிட்டு, அவர்களின் காணிகளில் நீங்கள் இவ்வளவு காலமும் அடாத்தாக ஆக்கிரமித்து வைத்திருந்துவிட்டு, இப்போது அதிலிருந்து வெளியேறுகின்றபோது, அதற்காக பல இலட்சம் ரூபாய் செலவு செய்து விழா வைத்து அவர்களின் காணிகளை அவர்களிடமே கையளிப்பதற்கு எதற்கு இந்த விழா? நீங்கள் ஆக்கிரமித்தது போலவே அதிலிருந்து வெளியேற வேண்டியதுதானே.
காணி உரிமையாளர் கள் தமது காணியிலிருந்து வெளியேறியதுபோல மீண்டும் காணிகளுக்கு வருவார்கள்தானே?’ இராணுவ அதிகாரி மீண்டும் கைலாகு கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.
பலாலியில் நூற்று எட்டு ஏக்கர் காணியை விடுவிப்பதற்காக அண்மையில் நடந்த வைபவம் ஒன்றைப் பார்த்தபோது இந்தச் சம்பவம்தான் ஞாபகத்துக்கு
வந்தது.
அதிலும் கொடுமை, காணிகளை உத்தியோகபூர்வதாக யாழ். மாவட்ட இராணுவ தளபதி யாழ். மாவட்ட செயலாளரிடம் கையளிக்கின்றபோது, மேடையில்
ஆசனங்களில் அமர்ந்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தாங்கள் அமர்ந்திருந்த ஆசனங்களில் இருந்தவாறே கைகளை தட்டி அதனை வரவேற்க, சந்தோச மிகுதியில் தமிழ் தேசிய கட்சி ஒன்றின் பாராளுமன்ற உறுப்பினர் தனது ஆசனத்தில் இருந்து எழுந்து நின்று வரவேற்று கைகளைத் தட்டிக்கொண்டிருந்தார்.
இதிலும் சிறப்பு.
இது இராணுவம் உத்தியோகபூர்வமாக மாவட்ட செயலரிடம் கையளிக்கும் நிகழ்வுதான்.
விரைவில் மற்றுமொரு விழாவில் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவிருக்கின்றதாம்.
தொண்ணூறு வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் ஆனந்தசங்கரிக்கு இருக்கின்ற அரசியல் ‘செருக்கு’, ஐம்பதுகளின் பிற்பகுதியில் இருந்துகொண்டிருக்கும் மக்கள்
பிரதிநிதிகளுக்கு இல்லை என்று சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை.!
- ஊர்க்குருவி