25 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இப்படியும் நடக்கிறது…!

அவர் ஒரு சிங்களப் பெண் மணி.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் அவர் ஒரு புலம்பெயர் தமிழரை திருமணம் செய்தவர்.
மகிந்த ராஜபக்ஷ இரண்டாயிரத்து பதினைந்தாம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்து தங்காலையில் உள்ள தனது வீட்டில் ‘தஞ்சமடைந்த’ பின்னர் அவர் மீது இரக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சிங்களவர்கள் தங்காலையை நோக்கி படையெடுத்த போது, அதே கவலையில் பிரான்ஸிலிருந்து தங்காலை சென்றவர் என்றால் அவருக்கு மகிந்தர்மீது எப்படியொரு பிடிப்பு இருக்கும் என்பது நீங்கள் புரிந்து கொள்ளக்கூடியதுதான்.
பின்னர் நல்லாட்சி காலத்தில் மகிந்தர் மீண்டுஎழுந்தபோது அவரின் பிரசாரப் பணிகளில் ஈடுபடுவதற்காகவே பிரான்ஸிலிருந்து இலங்கை வந்து தங்கியிருந்தவர் இந்தப் பெண்மணி.
தனது கணவனின் தொடர்புகளாலோ என்னவோ, அவர் மகிந்த ஆதரவு பிரசாரங்களுக்காக அடிக்கடி யாழ்ப்பாணத்திற்கும் வந்து போனவர்.
ஒரு தடவை அவரை யாழ்ப்பாணத்தில் வைத்து இந்த ஊர்க் குருவி சந்தித்திருந்தார்.
அதன் பின்னர் யாழ்ப்பாணம் வருகின்றபோதெல்லாம் அவர், தனது வருகை பற்றியும் தன்னோடு கூடவே வந்திருக்கும் அரசியல் பிரமுகர்கள் பற்றிய செய்திகளையும் தவறாது இந்த ஊர்க்குருவியுடன் பகிர்ந்து செல்வார்.
கோட்டாபய ராஜபக்ஷஅறுபத்து ஒன்பது இலட்சம் மக்களின் அமோக ஆதரவுடன் ஜனாதிபதியானதைத் தொடர்ந்து மீண்டும் ராஜபக்ஷ யுகம் தொடங்கிய பின்னரே அவர் பிரான்ஸ் திரும்பியிருந்தார்.
கொழும்பில் வீதியில் நேற்று நடந்து சென்று கொண்டிருந்த போது எதிரே வந்தவர் அடையாளம் கண்டுகொண்டு பேசினார்.
பரஸ்பரம் நலம் விசாரிப்புக்கள் முடிவடைந்த பின்னர், தனது தந்தையின் இறுதிக்கிரியைகளுக்காக வந்ததாகவும், அவர் திடீரென்று மாரடைப்பால் இறந்து
போனது பற்றியும் கவலையோடு பகிர்ந்துகொண்டார்.
கவலையில் இருப்பவரிடம் அரசியல்பேசி, அதுவும் மகிந்தரின் தீவிர ரசிகை ஒருவருடன் அரசியல் பேசுவதை தவிர்க்க விரும்பினேன்.
ஆனால், அவரே தொடர்ந்தார்.
‘நமது நாட்டு அரசியலைப் பார்த்தீர்களா? இப்படிப் போயிருக்கிறதே?’, என்றார்.
நான் பதில்சொல்வதற்கு முன்னரே அவர் சொன்னார், ‘நமக்கு இப்போது நாம் இலங்கையர் என்று சொல்வதற்கே வெட்கமாகின்ற அளவுக்கு நமது
நாட்டைக் கொண்டுவந்து விட்டிருக்கின்றார்கள்.
நல்லவேளை உள்ளூராட்சி தேர்தல் தள்ளிப்போனது.
இல்லையென்றால், இவர்களுக்கு ஒரு சபையில்கூட ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போயிருக்கும்.
மிகவும் அவமானமான தோல்வியை சந்தித்திருப்பார்கள்’, என்றார்.
நான் அவர் வாயாலேயே எல்லாவற்றையும் எடுத்துவிடுவோம் என்ற எதிர்பார்ப்பில் அமைதியாக இருந்தேன்.
‘முதல் பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது அவர்களின் பிள்ளைகள் நடத்திய மன்னராட்சி நடைமுறைகளே அவர்கள் தோல்வியடையக் காரணம்.
அதன் பின்னராவது அவர்கள் திருந்தியிருக்க வேண்டாமா.
மீண்டும் அவர்களாலேயே மகிந்தர் குடும்பம் ஆட்சியை இழந்திருக்கின்றது’, என்றார்.
இருவரும் விடைபெற்றுக் கொண்டு அவரவர் திசையில் நடக்கத் தொடங்கினோம்.
தொலைபேசியில், வட்ஸ் அப்பில் குறுந்தகவல் வந்த சத்தம்.
திறந்து பார்த்தால், ஒரு முகநூல் பதிவின் இணைப்பை நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார்.
தமிழரசுக் கட்சி கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிடம் முல்லைத்தீவில் அடகுவைத்துவிட்டது என்ற செய்தியை ஒருவர் முகநூலில்
பகிர்ந்துள்ளார்.
முல்லைத்தீவில் கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸூடன் தமிழரசு கட்சி செய்து கொண்ட உடன்பாடு தொடர்பாக ஏற்கனவே இந்தப் பத்தியில் எழுதியிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
அந்த இரு தரப்பு உடன்பாடுக்காக தமிழரசு என்னென்ன விடயங்களை செய்வதாக ஒப்புக்கொண்டிருக்கின்றது என்பதை ஒருவர் தனது முகநூலில்
பட்டியிலிட்டிருந்தார்.
அது உண்மையாக இருக்குமா என்பதையெல்லாம் நாம் ஆராய வேண்டியதில்லை.
அது அவரின் கற்பனையாகக் கூட இருக்கலாம்.
ஏனெனில், அதில் உள்ள நிபந்தனைகளில் சில ஏற்கனவே முஸ்லிம் காங்கிரஸூக்கு தமிழரசு செய்கின்ற உதவிகள்தான்.
உதாரணத்துக்கு ஏறாவூர் நகர சபை, கல்முனை மாநகர சபை போன்றவற்றில் முஸ்லிம் காங்கிரஸூக்கு நிபந்தனையற்ற ஆதரவை தமிழரசு வழங்கும் என்று உறுதியளிக்கப்பட்டிருக்கின்ற ஸ்ரீதாம்.
இவை தற்போதும் நடந்து கொண்டிருக்கின்ற சமாசாரம் தானே.
ஆனால், நாம் இங்கே சொல்ல வருவது இப்படியெல்லாம் ஒப்பந்தம் நடந்ததா என்பது பற்றியல்ல.
தமிழரசு இதுபோன்று பல தடவைகள் பல ஒப்பந்தங்களை செய்ததாக கூறியிருக்கின்றது.
அதற்காக பல தடவைகள் பல அரசியல் முடிவுகளையும் எடுத்திருக்கின்றது.
ஆனால், அவை எல்லாமே தமிழரசில் ஒருசிலரே தன்னிச்சையாக எடுத்தவைதான்.
அவ்வாறான முடிவுகள்தான் இருபத்தியிரண்டாக இருந்த எண்ணிக்கையை பத்தாக மாற்றியது.
அதற்கு பின்னரும் அவர்கள் திருந்தவில்லை என்பதையே இந்தச் சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன.
மேலே மகிந்தரின் ரசிகை சொன்னதுபோல அவர்களும் திருந்தவில்லை.
இவர்களும் திருந்தவில்லை.
அவ்வளவுதான்.!

  • ஊர்க்குருவி

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles