சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாண வைத்தியசாலைப் பணிப்பாளர் ஒரு அறிவிப்பை விடுத்தார்.
வைத்தியசாலை மருத்துவக் கழிவுகளை வழக்கமாக எரியூட்டி அழிக்கும் தெல்லிப்பழை வைத்தியசாலை உபகரணம் பழுதடைந்துவிட்டதால் அதனை அழிப்பதற்கு வவுனியாவிற்கு அனுப்பவிருப்பதாக.
இவ்வாறு அறிவிப்பு வெளியிடப்பட்டதும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
எக்காரணம் கொண்டும் யாழ்.வைத்தியசாலை கழிவுகளை வவுனியாவில் எரியூட்டுவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என்று.
வைத்தியசாலை மருத்துவக் கழிவுகளை அழிப்பது என்பது விஞ்ஞானபூர்வமாக ஆராயப்யபட்டு செய்யப்படுகின்ற ஒரு விவகாரம்.
இது சர்வதேச அளவில் செய்யப்படுவதுதான்.
அதற்காக அமைக்கப்படுகின்ற இடங்கள் அந்த பகுதியில் வாழும் மக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படாதவாறு மிக கவனமாக மாத்திரமன்றி, விஞ்ஞானபூர்வமாக ஆராய்ச்சிகள் செய்யப்படுகின்றன.
யாழ்ப்பாண வைத்தியசாலையின் மருத்துவக்கழிவுகள் அழிக்கப்படுகின்ற தெல்லிப்பழை உபகரணம் பழுதடைந்துவிட்டதால் அது திருத்தப்படும்வரை வேறு ஒரு இடத்தில் அழிக்கப்படவேண்டியது அவசியமானது.
மருத்துவக்கழிவுகளை தேக்கி வைப்பது நல்லதல்ல என்பது புரிந்து கொள்ளக்கூடியதே.
வவுனியா வைத்தியசலையின் மருத்துவக்கழிவுகளை அழிப்பதற்கான இடம் ஓமந்தையில் அமைக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
அங்கே தற்காலிகமாக யாழ்ப்பாண வைத்தியசாலை கழிவுகளையும் எரியூட்டி அழிப்பதற்குத்தான் யாழ்ப்பாண வைத்தியசாலை நிர்வாகம் ஏற்பாடு செய்தது.
ஆனால் செல்வம் அடைக்கலநாதனின் எதிர்ப்பு காரணமாகவோ தெரியவில்லை, பின்னர் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் அவற்றை அழிப்பதற்கு தாங்கள் நடவடிக்கை எடுத்திருப்பதாக யாழ். வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி பின்னர் அறிவித்திருந்தார்.
அந்த சம்பவங்களுக்கு பின்னர் நடைபெற்ற சம்பவம் ஒன்றே இந்த ஊர்க்குருவியின் கவனத்திற்கு கிடைத்திருக்கின்றது.
யாழ்ப்பாண வைத்தியசாலை கழிவுகளை வவுனியாவில் அழிக்க ஏற்பாடு செய்வதாக அறிவிக்கப்பட்ட பின்னர் அதற்கு இடமளிக்கப்போவதில்லை என்று செல்வம் அடைக்கலநாதன் தெரித்திருந்ததுபற்றி மேலே குறிப்பிட்டிருந்தோம்.
அவ்வாறு அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர்தான், வவுனியா வைத்தியசாலை கழிவுகள் எங்கே அழிக்கப்படுகின்றன என்ற விபரம் அவர்களுக்கு தெரியவந்ததோ தெரியவில்லை.
திடீரென்று வவுனியா வைத்தியசலை கழிவுகள் எரித்து அழிக்கப்படும் இடத்திற்கு முன்னால் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு அவர்கள் ஏற்பாடு செய்தனர்.
அதாவது அது மக்களின் சுகாதாரத்திற்கு நல்லதல்ல என்பதுதான் அவர்களின் போராட்டத்திற்கான காரணம்.
ஓமந்தையிலுள்ள அந்த நிலையம் நீண்டகாலமாக இருந்துவருவது அவர்களுக்கு இப்போதுதான் தெரியுமோ என்பது தெரியவில்லை.
திட்டமிட்டவாறு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக ரெலோ கட்சியின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், மாகாணசபை உறுப்பினர்கள் என்று பலர் சென்று அந்த இடத்தில் இறங்கியிருக்கின்றனர்.
ஆனால் அந்த இடத்தில் ஒரு பொதுமகன்கூட காணப்படவில்லையாம்.
அந்த கிராமத்திலுள்ளவர்களுக்கு ஏற்கனவே அந்த நிலையம் அமைக்கப்பட்டபோதே, சுகாதார துறையினர் அதுகுறித்து விளக்கமளித்து, அதனால் அந்த பகுதியில் வாழும் மக்களுக்கு எந்த தீங்கும் இல்லை என்பது விளக்கமளிக்கப்பட்டே அது தொடங்கப்பட்டதால் மக்கள் தெளிவாக இருந்திருக்கின்றனர்.
இந்த இடத்திற்கு சென்ற தலைவர்கள் வாகனங்களிலிருந்து இறங்காமலே திரும்பி சென்றிருக்கின்றார்கள்.
எம்முடைய கேள்வி எல்லாம், வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டிக் கோரிக்கைக்காக போராடிக்கொண்டிருக்கின்ற இந்த தலைவர்கள், யாழ்ப்பாணத்து வைத்தியசாலை கழிவுகளை வவுனியாவில் எரிப்பதற்கு தயாராக இல்லை என்றால், தமிழ் மக்களின் எதிர்காலம் எப்படியிருக்கப்போகின்றதோ என்று கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை.!
- ஊர்க்குருவி