இப்படியும் நடக்கிறது…!

0
236

மீண்டும் ஒரு தடவை உள்ளூராட்சி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
தேர்தலுக்காக இந்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை வழங்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தேர்தலை நடத்துவதற்கான வேலைகளை தேர்தல்கள் ஆணைக்குழு மீண்டும் தொடக்கியது.
கடந்த ஏழாம் திகதி நிதி அமைச்சின் செயலாளரை தேர்தல் ஆணைக்குழு அழைத்திருந்தபோதிலும் அவர் அன்றைய சந்திப்புக்கு செல்லவில்லை.
ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பாக ஏதேனும் உறுதிமொழியை அவர் வழங்கினாரெனவும் செய்திகள் எதுவும் வெளிவந்ததாகவும் தெரியவில்லை.
ஆனாலும் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் இருபத்தி ஐந்தாம் திகதி நடைபெறும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்திருக்கிறார்.
ஏற்கனவே, தேர்தல் ஆணைக்குழு தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்ச்சியாக ஒரு குற்றச்சாட்டைத் தெரிவித்து வருகின்றார்.
தேர்தல் நடத்தும் முடிவை தேர்தல் ஆணைக்குழு ஒருமித்து எடுக்கவில்லை என்றும் ஆணைக்குழு உறுப்பினர்கள் சிலர் தேர்தல் நடத்தும் முடிவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கின்றனர் எனவும் ஜனாதிபதி தொடர்ந்து கருத்துத் தெரிவித்து வருகின்றபோதிலும் தேர்தல் ஆணைக்குழு அதனை நிராகரிக்கின்ற வகையில் அனைத்து உறுப்பினர்களுடன் ஊடகங்களை சந்தித்ததாகவோ அல்லது அனைவரும் இணைந்து அறிவிப்பு வெளியிட்டதாகவோ தெரியவில்லை.
தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விடுவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியபோதிலும் அதுகுறித்த காலக்கெடு எதனையும் விடுத்ததாகவும் தெரியவில்லை.
இந்நிலையில், நிதி அமைச்சின் செயலாளர் அது குறித்து உத்தரவாதம் எதனையும் வழங்காத நிலையிலேயே ஆணையாளர் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னரும் ஓர் ஆண்டுக்கு பின்னரே நாட்டில் தேர்தல் நடத்தப்படும் என்று ஜனாதிபதி மீண்டும் அறிவிப்பை செய்திருப்பதையும் கவனிக்கவேண்டும்.
தேர்தல்கள் ஆணைக்குழு இவ்வாறு தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டு தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கின்ற அதேவேளையில், அரச தரப்போ தேர்தல் நடக்காது என்ற தோரணையில் காரியங்களை செய்துவருவதையும் கவனிக்கமுடிகின்றது.
தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த செவ்வாயன்று நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட அரச அச்சகத்தின் பிரதானியோ, வாக்குச்சீட்டுக்களை அச்சிட தேவையான நிதியைக் கோரி திறைசேரிக்கு தன்னை தொடர்புகொள்ளுமாறு தேர்தல்கள் ஆணையாளர் கேட்டுக்கொண்டாரெனவும் தெரிவித்திருப்பதும் கவனிக்கத்தக்கது.
அதாவது, அச்சிடுவதற்கு தேவையான நிதியை திறைசேரியிடமிருந்து தாம் பெற்று அச்சகத்துக்குக் கொடுக்காமல், அவர்களையே திறைசேரியிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்கப்பட்டிருக்கின்றது.
இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சம்பளமற்ற விடுமுறையை எடுத்துக்கொண்டு தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ள அரச
உத்தியோகத்தர்கள் தேர்தல் ஒத்திவைக்கப்படுமானால், தமது சம்பளத்தை பெறுவதற்கோ அல்லது மீண்டும் கடமைக்கு செல்வதற்கோ முடியாத நிலைமை மற்றுமொரு சிக்கலை ஏற்படுத்தியிருக்கின்றது.
இதனால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு தேர்தல் ஒத்திவைக்கப்படும் பட்சத்தில் அநீதி இழைக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை சரியான நேரத்தில் நடத்த முடியாவிட்டால், உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் எந்தவோர் அரசாங்க ஊழியர்களுக்கும் அசௌகரியம் ஏற்படாத வகையில், நிறுவனங்களின் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் துறைக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.
அதாவது ஜனாதிபதியும் அமைச்சர்களும் தேர்தல் நடைபெறாது என்று கூறிக்கொண்டிருக்க, தேர்தல்கள் ஆணைக் குழு தலைவரோ தேர்தலுக்கான அறிவிப்பை செய்துவிட்டு தேர்தல் வேலைகளை கவனிக்கத் தொடங்கிவிட்டார்.
தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டபோதிலும் இன்னமும் வேட்பாளர்களுக்கு அந்த நம்பிக்கை ஏற்படவில்லை என்றே தெரிகின்றது.
அதனால் தான் அவர்கள் யாரும் தேர்தல் பரப்புரைக்கு தயாராகவில்லையோ?

  • ஊர்க்குருவி