நீச்சல் குளத்தில் தண்ணீர் அடிக்கடி கெட்டுவிடுவதை அறிந்தார் ஹோட்டல் முதலாளி.
காவல்காரனை அழைத்து ஒரு வாரத்துக்கு யாரையும் நீச்சல் குளத்தில் குளிக்க அனுமதிக்காதே, என்றார்.
அன்று மாலையே இளம் பெண் ஒருத்தி குளிப்பதற்காக அங்கு வந்தாள்.
தான் அணிந்திருந்த ஆடையை ஒவ்வொன்றாகக் கழற்றிப் போட்டாள்.
நீச்சல் குளத்தில் இறங்கத் தயாரானாள்.
எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த காவல்காரன் ‘இங்கு யாரும் குளிக்கக்கூடாது’ என்றான்.
‘நான் உடைகளைக் கழற்றுவதற்கு முன்னரே ஏன் இதைச் சொல்லி இருக்கக்கூடாது’ என்று கோபத்துடன் கேட்டாள்.
அதற்கு அவன், ‘இங்கு யாரும் குளிப்பதைத் தடுப்பதுதான் என் வேலையே தவிர, உடைகளைக் கழற்றும்போது தடுப்பது என் வேலை அல்ல’ என்றான்.
நமது அரசியல்வாதிகள் இப்போதெல்லாம் எல்லாவற்றையும் எதிர்ப்பதுதான் தங்கள் வேலை என்று முடிவெடுத்துவிட்டார்களோ தெரியவில்லை.
அதனால்தான் தமது வேலையை மாத்திரம் செய்கின்றனரோ!
நாவலர் கலாசார மண்டபத்தை இந்து கலாசாரத் திணைக்களம் மீளக் கையேற்க எடுக்கும் முயற்சிக்கு எதிராக போட்டிபோட்டு எதிர்ப்பு நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றனர்.
முதலில், யாழ். மாநகர சபையின் முன்னாள் மேயர் வி. மணிவண்ணன் தலைமையிலான அணியின் முக்கியஸ்தரான முன்னாள் மாநகர சபை உறுப்பினர்
வரதராஜா பார்த்தீபன், ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார்.
ஆனால், அவர் போராட்டத்துக்கு செல்வதற்கு முன்னதாகவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் அங்கே போராட்டத்தைத் தொடக்கிவிட்டனர்.
அதற்கு தலைமை தாங்கிய முன்னணியின் தேசியப்பட்டியல் எம்.பியான கஜேந்திரன், ஒலிபெருக்கியை வைத்திருந்தவாறு கோஷமிட்டுக் கொண்டிருந்தமையைக் காணமுடிந்தது.
நாவலர் கலாசார மண்டபம் என்பது தமிழர்களின் கலாசார அடையாளம் என்றும் அதனை மத்திய அரசாங்கம் அபகரிக்க நினைப்பதாகவும் அந்த கலாசார
மண்டபத்தை புத்தசாசன அமைச்சின்கீழ் கொண்டுவர முயற்சிப்பது படிப்படியாக பௌத்த மேலாதிக்கத்தை திணிக்கும் முயற்சி எனவும் வழக்கம்போல அவர் முழக்கமிட்டதைக் காணமுடிந்தது.
நாவலர் கலாசார மண்டபம் இந்து கலாசார திணைக்களத்தால் கட்டப்பட்ட ஒன்று.
அதனை நிர்வகிப்பதற்காக அது பல ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணம் மாநகர சபையின் பராமரிப்பில் கொடுக்கப்பட்டிருந்தது.
குறிப்பிட்ட காலத்துக்கு அந்த நாவலர் மண்டபம் மாநகர சபையிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
அந்த காலம், அதாவது குத்தகைக்கு வழங்கப்பட்ட ஒரு சொத்தை குறிப்பிட்ட குத்தகைக் காலம் முடிந்ததும் தாம் பொறுப்பேற்பதுபோல, இந்து கலாசார திணைக்களம் அந்த நிலையத்தை மீளவும் தம்மிடம் கையளிக்குமாறு கோரிக்கை விடுத்தபோது, அதனை ஏற்க மறுத்த மாநகர சபை, அது தொடர்பாக சபையில் தீர்மானங்களையும் நிறைவேற்றியது.
பின்னர் இரு தரப்பினரும் இணைந்து ஒரு பொது உடன்பாட்டுக்கு வந்திருந்தன என்று கூறப்படுகின்றது.
அதாவது, இரண்டு தரப்பினரும் இணைந்து அதனை நிர்வகிப்பது என்பதே அந்த முடிவு.
ஆனால், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நிர்வாகம் தனது பதவிக்காலத்தை முடித்ததும், மாநகர நிர்வாகம் ஆணையாளரின் நிர்வாகத்தின்கீழ் வந்ததும் அதனை முழுமையாக இந்து கலாசாரத் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவிட்டார்.
அவர் அவ்வாறு உத்தரவிட்டது சரியானதுதான் என்று நாம் வாதிடப்போவதில்லை.
ஆனால், இரு தரப்பினரும் இணைந்து அதனை நிர்வகிப்பது என்ற முடிவை மாற்றக் கூடாது என்று கோரிக்கையை விடுப்பதற்கு பதிலாக, நமது தலைவர்கள் அந்த விவகாரத்தை வைத்து மக்களை உசுப்பேற்றும் வேலையையே செய்துகொண்டிருப்பதை அவதானிக்க முடிந்தது.
யாழ்ப்பாண மக்களுக்காக என்றே பல கோடி ரூபாய் செலவில் இந்தியா கட்டிக்கொடுத்த யாழ்ப்பாண கலாசார நிலையத்தை பொறுப்பெடுத்து நிர்வகிக்க முடியாத யாழ்ப்பாணம் மாநகர சபையின் கையாலாகாத் தனத்தாலேயே அந்த நிலையம் இன்று மத்திய அரசாங்கத்தின் நிர்வாகத்தின்கீழ் கொண்டுவரப்பட்டது.
நாவலர் மண்டபம் என்பது எமது கலாசாரத்தின் அடையாளம் என்று முன்னணியினர் சொல்கின்றார்கள்.
அப்படியெனில், அந்த மண்டபத்தை சென்று பார்த்தால் தமிழரின் கலாசாரத்தை கண்டுகொள்ளலாம் என்கின்றார்களா? ஒருதடவை சென்று பார்த்து, அது எவ்வளவு ‘சுத்தமாக’ இருக்கின்றது என்பதையும் கவனித்தால் நல்லது!
- ஊர்க்குருவி