இப்படியும் நடக்கிறது…!

0
119

அடுத்து நடக்கவிருப்பது ஜனாதிபதித் தேர்தல் என்று தான் எல்லோரும் நம்பிக்கொண்டிருக்கின்றார்கள்.
நாமும் இந்தப் பத்தியில் அதனையே எழுதியும் வருகின்றோம்.
ஆனால், இடையில் ஒரு தேர்தல் நடக்கவிருப்பது குறித்து ஜனாதிபதி தனக்கு நெருக்கமான தமிழ் தலைவர்களுக்கு தெரிவித்திருப்பதாக அறிய முடிந்தது.
நீண்ட காலமாகவே மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடாத்தவேண்டும் என்றும் பதின்மூன்றாவது அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்றும் சர்வதேச சமூகம் குறிப்பாக இந்தியா தொடர்ந்து தெரிவித்து வருகின்றது.
வழக்கமாக இலங்கையில் ஒருவர் புதிதாக ஆட்சிக்கு வந்தால் அவர் முதலில் பயணம் செய்வது இந்தியாவுக்குத்தான்.
ஆனால், இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று எட்டு மாதங்களாகியும் இன்னமும் இந்தியாவிற்கு பயணம் செய்ய அவரால் முடியவில்லை.
ஏதோ அவருக்கு நேரம் கிடைக்கவில்லை என்று அல்ல.
அவருக்கு புதுடில்லியிலிருந்து அழைப்பு கிடைக்காததாலேயே அவரால் பயணம் செய்ய முடியவில்லை.
கடந்த பல மாதங்களாக அவர் பல்வேறு வழிகளில் முயற்சி செய்தும் அழைப்பு கிடைத்தபாடில்லை.
புதுடில்லியிலுள்ள இலங்கைக்கான தூதுவர் மிலிந்த மொறகொட தன்னாலான முயற்சிகளை எடுத்துப்பார்த்தார்.
போதாக்குறைக்கு கோட்டாபயவும் தனது பாதுகாப்பு தரப்பு நண்பர்கள் மூலம் முயன்று பார்த்தும் இதுவரை பயன்கிடைக்கவில்லை.
கடைசியாக இலங்கை வந்து சென்ற இந்திய வெளியுறவு அமைச்சரின் விஜயத்தின்பின்னர், அவர் புதுடில்லி செல்வதற்கான பாதை திறக்கப்பட்டதாக
கூறப்பட்டது.
ஆனாலும் அவர் அங்கு ஏன் இதுவரை செல்லவில்லை என்று அறிய முற்பட்டபோதுதான் அந்த விசயம் தெரியவந்தது.
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பயனாக உருவான பதின்மூன்றாவது அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது என்ற ரணிலின் வாக்குறுதியை நிறைவேற்றுவது தொடர்பான ஏற்பாடுகளை பூர்த்தி செய்யாவிட்டாலும், மாகாண சபைகளுக்கான தேர்தலையாவது நடாத்துவதற்கான ஏற்பாடுகளை செய்த பின்னரே அதாவது ஆகக் குறைந்தது மாகாண சபைக்கான தேர்தலை நடாத்துவதற்கான திகதியையாவது உறுதிசெய்து கொண்டே அவர் புதுடில்லி செல்லவிருக்கிறார் என்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.
புதுடில்லி வருவதற்கு முன்னர் அப்படி மாகாணசபை தேர்தலுக்கான முடிவை எடுத்து விட்டு வாருங்கள் என்று இந்தியா நிபந்தனை விதித்ததா என்பது தெரியவில்லை.
ஆனால், அந்த ஏற்பாடுகளை செய்த பின்னரே அவர் புதுடில்லி செல்ல விருக்கிறாராம்.
மாகாணசபைகளுக்கு தேர்தல் நடாத்தவேண்டும் என்றால், பழைய தேர்தல் முறையில் நடாத்துவதற்கான திருத்தம் ஒன்றை பாராளுமன்றில் நிறைவேற்றவேண்டும்.
அதுகுறித்து தனிநபர் பிரேரணையாக தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எற்கனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார்.
அவரது பிரேரணையை பாராளுமன்றில் நிறைவேற்றுவதற்குப் பதிலாக அரச சார்பிலேயே ஒரு பிரேரணையை கொண்டுவந்தால் அதனை ஒரு சில நாட்களில் நிறைவேற்றி விடலாம்.
அப்படி நிறைவேற்றப்படும் பட்சத்தில், மாகாண சபைகளுக்கான தேர்தலை உடனே நடாத்தலாம்.
பழைய மாகாணசபை தேர்தல் முறையில் மாகாணங்கள் ஒன்பதுக்கும் ஒன்றாக தேர்தல் நடாத்த வேண்டும் என்பதும் அல்ல.
தனித்தனியாகவும் நடாத்தலாம்.
அல்லது இரண்டு மாகாணங்களுக்கு ஒன்றாகவும் நடாத்தலாம்.
அப்படியெனில் எதற்காக அரச தரப்பாக அந்த பிரேரணையை நிறைவேற்றவில்லை என்று கேட்டபோது அவர்கள் தரப்பில் சொல்லப்பட்ட பதில் ஆச்சரியமானது.
இன்றைய தேர்தல் ஆணைக்குழு எந்த நேரத்திலும் கலைக்கப்பட்டு புதிய தேர்தல் ஆணைக்குழு நியமிக்கப்படவிருக்கின்றது.
புதிய ஆணைக்குழுவின் தலைவராக ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரான மகிந்த தேசப்பிரியவே நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அவர் மாகாணசபைகளுக்கான தேர்தலை ஒவ்வொரு மாகாணங்களுக்கும் தனித்தனியாக நடாத்தலாம் என்ற கருத்தில் உடன்பட்டவராக இருப்பதால் அவர் பதவியேற்ற பின்னரே அந்த பிரேரணையை நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருக்கின்றதாம்.
அடுத்த ஆண்டு இந்தியாவில் பொதுத்தேர்தல் நடக்க விருக்கின்றது.
இலங்கைத் தமிழர்களின் பிரச்னைக்கு இந்தியா தீர்வாக கருதும் பதின்மூன்றை அமுல்படுத்துவதில், அல்லது ஆகக்குறைந்தது மாகாண சபைக்கான தேர்தலை நடாத்தி முடித்தாலாவது தமிழகத்தில் தமக்கு பிரச்சாரத்திற்கு உதவும் என்று இந்திய ஆளும் கட்சியான பாரதீய ஜனதாகட்சி கருதுவதால், இந்த ஆண்டு
இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் மாகாண சபைக்கு, முதலாவதாக வடக்கு மாகாணசபைக்காவது தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

  • ஊர்க்குருவி