இப்படியும் நடக்கிறது…!

0
174

பிரபல நடிகர் விஜய் நடித்த படம் ஒன்றில் வரும் காட்சி ஒன்று இப்போது ஞாபகத்துக்கு வருகின்றது.
அமெரிக்காவில் பிரபல தொழில் அதிபரான அவர் தமிழ்நாட்டில் நடக்கும் சட்ட சபைக்கான தேர்தலில் தனது வாக்கைச் செலுத்துவதற்காக தமிழகம் வந்திருப்பார்.
வாக்களிப்பு நிலையத்திற்கு வாக்களிக்க அவர் சென்றபோது அவரது வாக்கை யாரோ அவருக்கு முதலே செலுத்திவிட்டிருப்பார்கள்.
அவர் கோபத்துடன் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக ஒரு காரில் போய்க்கொண்டிருப்பார்.
அப்போது அந்த கார் சாரதி ஒரு கட்டிடத்தைக் கடந்து செல்லும்போது சொல்லுவார், ‘இங்கதான் சேர், போன வாரம் ஒரு குடும்பத்தினர் ஒரு கோரிக்கையை முன்வைத்து மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்யமுயன்றனர்’ என்று நடந்த கொடுமையான சம்பவம் ஒன்றை விவரிப்பார்.
அப்போது விஜய், ‘அப்ப நீங்களெல்லாம் என்ன செய்தீர்கள்.
பார்த்துக் கொண்டிருந்தீர்களா?’ என்று ஆச்சரியமாகக் கேட்பார்.
அதற்கு அந்த சாரதி சொல்லுவார், ‘இல்லை சேர், நாங்கள் எல்லோரும் சமூக வலைத்தளங்களில் அதுபற்றியே பேசினோம்.
அது பற்றித்தான் தமிழகம் முழுவதும் உள்ளவர்கள் தமது சமூக வலைத்தளங்களில் கண்டித்துக் கொண்டிருந்தார்கள்..’ என்பார்.
‘அப்புறம்…’ என்று விஜய் கேட்பார்.
அதற்கு அந்த சாரதி சொல்லுவார், ‘அப்புறம் என்ன சேர்… புதுசா ஒரு பிரச்சினை வரும் நாங்கள் எல்லாம் அதைப் பற்றி பேசத் தொடங்கிவிடுவோம்…’
கன்னியா வெந்நீருற்று பகுதியிலிருந்த இந்து ஆலயத்தை மீளக்கட்டுவதற்காக அதன் உரிமையாளர்கள் முயன்றபோது தொல்லியல் திணைக்களம் தடையாக
நின்றது.
அது அங்கே மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.
விசயம் திருமலை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அத்தோடு அதன் கதை முடிந்துவிட்டது.
அதேபோலத்தான், வரலாற்று புகழ்பெற்ற – பாடல் பெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் வாயிலில் இருந்த வளைவு சிலரால் இடித்து அழிக்கப்பட்டது.
அதனையும் நீதிமன்றம் மூலம் தீர்க்கலாம் என்று நமது தலைவர்கள் நீதிமன்றில் ஆஜரானார்கள்.
இப்போது நீதிமன்றத்தில் வழக்கு திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு பாதகமாக தீர்ப்பு சொல்லப்பட்டு விசயம் முடித்து வைக்கப்பட்டுவிட்டது.
இப்படியே ஒவ்வொரு விடயங்களும் ‘முடித்து’வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
வெடுக்குநாறிமலை ஆதிசிவனை இப்போது நம்மவர்கள், தலைவர்களும்தான் மறந்தே விட்டார்கள்.
இப்போது நம்மவர்களின் பேசுபொருள் பண்ணை நாக அம்மன் சிலை விவகாரம்.
அதுவும் பழையவை போலவே கடந்து சென்றுவிடும்.
நமது கவனம் புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராகவும் திரும்பியிருக்கின்றது.
ஒவ்வோர் அமைப்பும் கட்சியும் தத்தமது இருப்பை வெளிக்காட்ட ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்திக் கொண்டிருக்க, போதாக்குறைக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் ‘பாசத்துக்கான யாத்திரை’ நாட்டின் பல பாகங்களிலுமிருந்து ஆரம்பமாகியிருக்கின்றது.
அதில் ஒன்று நல்லூரிலிருந்து ஆரம்பமானபோது நமது பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனையும் அங்கே காணமுடிந்தது.
அந்த யாத்திரையில் கலந்துகொண்ட அவர், நாட்டில் உள்ள சகல இனங்களும் வௌ;வேறு எண்ணிக்கையில் காணப்பட்டாலும் அரச அதிகாரங்களை சமநிலையில் கையாளக்கூடிய ஆட்சிமுறையே அவசியம் என வலியுறுத்தினார்.
வடக்கு, கிழக்குக்கு சமஷ்டி கோரி போராடி முடிந்துவிட்டது.
இனி அரச அதிகாரங்களை சமநிலையில் கையாளக்கூடிய ஆட்சிமுறைக்காக போராட தொடங்கியிருக்கிறோமோ? முதலில் அந்த யாத்திரையை ஏற்பாடு செய்யும்
கட்சித் தலைவர் பதின்மூன்றை முழுமையாக அமுல்படுத்துவதற்கே தயாராக இருக்கிறாரா என்று கேட்டு அறிந்துகொள்ளவேண்டும்.
அவர் தனது ஆட்சியில் ஒரு சில அமைச்சுகளை வழங்க சிலவேளை தயாராக இருக்கலாம்.
ஆனால், அது அதிகாரங்களை கையாளக்கூடியதாக இருக்குமா என்பதையும் அவரிடம் கேட்டு அறியவேண்டும்.!

  • ஊர்க்குருவி