எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களுக்கும் ஊடகப் பிரதானிகளுக்கும்
இடையிலான சந்திப்பு ஒன்று நேற்றைய தினம் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் என்ற வகையில் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் இந்த சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் காலை உணவுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஊடகப் பிரதானிகளுடன் கலந்துரையாடுவதற்காக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக கூறப்பட்டிருந்தது.
இன்று எதிரணியாக பாராளுமன்றில் அமர்ந்திருக்கும் பொதுஜன பெரமுனவின் எம்.பிக்கள் சிலரும் அங்கு அமர்ந்திருந்தனர்.
சிறுபான்மைக் கட்சிகள் என்றால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஒருவர்தான் அங்கு பிரசன்னம்.
அதிகம் ஏன் ஐக்கிய மக்கள் சக்தியில் பிரதான பங்காளர்களாக இருக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் மனோ கணேசனோ பழனி திகாம்பரம்கூட இல்லை.
அரசின் இன்றைய ஜனநாயக விரோத செயல்பாடுகளை, புதிய பயங்கரவாத தடைச் சட்டத்திலுள்ள ஆபத்துக்களை எதிர்ப்பதில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருக்கின்றன என்று காட்டுவதற்காக இந்த சந்திப்பு என்று நினைத்துக்கொண்டு அங்கு சென்றிருந்த ஊடகப் பிரதானிகள் நிச்சயம் ஏமாற்றமடைந்திருப்பார்கள்.
‘இருக்கின்ற பயங்கரவாத தடைச் சட்டத்தால் சிறுபான்மை மக்களே பாதிக்கப்படுகின்றார்கள்.
அதனை நீக்கவேண்டும், புதிய சட்டம் இருப்பதைவிட மோசமானது, அதனை எக்காரணம்கொண்டும் அனுமதிக்க முடியாது’ என்று ஹக்கீம் அங்கு தனது கருத்தை பதிவுசெய்த உடனேயே, அடுத்துப் பேசிய ஒரு தலைவர், அப்படி பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கிவிடமுடியாது.
அதுபற்றி கலந்துபேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று எதிர்க்கட்சிகளிடையே இருக்கும் ‘ஒற்றுமையை’ பதிவுசெய்தார்.
மகிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு இரண்டு ஆண்டுகள் முன்னதாகவே
தேர்தலை நடத்தினார்.
அப்போது ராஜபக்ஷ ஆட்சியை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள் எல்லாமே ஓரணியில் திரண்டு- தமக்குள் இருந்த அனைத்து முரண்பாடுகளையும் புறந்தள்ளி மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக்கி வெற்றியும் பெற்றனர்.
ஆனால், ராஜபக்ஷக்களை வீழ்த்துவது ஒன்றையே தமது குறியாகக்கொண்டிருந்த அந்த எதிரணியினருக்கு தொடர்ந்து ஒற்றுமையாக பயணிக்க முடியவில்லை.
அதனாலேயே ராஜபக்ஷக்கள் முன்னரைவிட அதிக பலத்துடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர்.
ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் என்ன நடந்தது என்பது இங்கே மீண்டும் மீண்டும் எழுதித்தான் வாசகர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லையே.
இப்போது, நாட்டை மீட்கக்கூடிய மீட்பராக ரணில் ஆட்சியில் இருந்தாலும் ராஜபக்ஷக்களின் ஆட்சியே தொடர்ந்துகொண்டிருக்கின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் இன்றைய நிலைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே முழுக்க முழுக்கக் காரணம் என்று பலரும் அவர்மீது குற்றம் சுமத்தி
வருகின்றனர்.
அதிலும் உண்மை இல்லாமல் இல்லை.
அவர் தனது கட்சியை வெற்றிகரமாக நடத்துவதில் கவனம் செலுத்துவதைவிட, தனக்கு எதிரான கட்சிகளை பலவீனப்படுத்துவதையே முக்கிய பணியாகக்கருதி
செயல்படுபவர் என்று அரசியல் வட்டாரங்களில் கூறப்படுவதுண்டு.
அந்தக் கூற்று எவ்வளவு தூரம் உண்மையானது என்பதை நேற்றைய எதிர்க் கட்சிகளின் சந்திப்பு உணர்த்தியதையும் ஊடக பிரதானிகள் கண்டுகொண்டிருப்பார்கள்.
- ஊர்க்குருவி