இப்படியும் நடக்கிறது…!

0
165

ஒருவன் பொருள்களை வாங்குவதற்காக பல கடைகளுக்குச் சென்றான்.
பல கடைகளுக்கு சென்றுவந்த பின்னர்தான் கையில் இருந்த குடையை எங்கேயோ வைத்துவிட்டு வந்துவிட்டோம் என்பது நினைவுக்கு வந்தது.
ஆனால், எங்கே குடையை வைத்து விட்டோம் என்பது அவனுக்கு நினைவில் இல்லை.
ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினான்.
கடைசியாக ஒரு கடைக்காரர் அவனின் குடையை அவனிடம் கொடுத்தார்.
யாரோ வாடிக்கையாளர் வைத்துவிட்டுப் போய்விட்டார் என்று எடுத்து கவனமாக வைத்திருந்தார் அவர்.
குடையை வாங்கிக் கொண்டு அவன் சொன்னான்: ‘இந்த ஊரிலேயே நீங்க ஒருத்தர்தான் நேர்மையானவர்.
என் குடையை திருப்பிக் கொடுத்திட்டீங்க.
மற்றவர்கள் எல்லாம் அயோக்கியர்கள்.
நான் குடையைக் கடையில் விட்டிட்டுப்போகவே இல்லை என்று சொன்னார்கள்’, என்றான்.
இதற்கும் இனிச் சொல்லப்போகின்ற சங்கதிக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.
இன்றைய பத்தியை நான் அண்மையில் வாசித்த ஒரு நகைச்சுவையோடு தொடங்குவோம் என்று தந்தேன்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சரவை விஸ்தரிப்பு தொடர்பான செய்திகள் பல மாதங்களாக தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன.
தற்போது இருக்கின்ற அமைச்சர்களுடன் இன்னமும் பன்னிரண்டு புதிய அமைச்சர்களை நியமிக்க அவர் விரும்பியபோதிலும் அந்த பன்னிரண்டு பேரில்
தமது கட்சியைச் சேர்ந்த நால்வராவது குறைந்தது இருக்கவேண்டும் என்று பொதுஜன பெரமுன கண்டிப்பாக – கறாராக கேட்டுவிட்டது மாத்திரமல்ல, அந்த நால்வரும் யார் என்ற பட்டியலையும் ரணிலிடம் கொடுத்து விட்டது.
அந்த நால்வருக்கும் அமைச்சரவையில் இடம் இல்லை என்பதை ரணில் அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டபோதிலும் அவர்களுக்குத்தான் தமது
தரப்பிலிருந்து நியமனம் வழங்கவேண்டும் என்பதில் பெரமுன பிடிவாதமாக இருக்கின்றது.
பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்த்தன, மகிந்தானந்த அளுத்கமகே, சந்திரசேன ஆகிய
அந்த நால்வருக்கும் அமைச்சரவையில் இடம்கொடுப்பதில்லை என்பதில் ஜனாதிபதி ரணில் உறுதியாக இருக்க, அதனாலேயே ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து
கட்சி தாவத் தயாரானவர்கள் மாத்திரமல்ல, ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள ஒரேயோர் எம்.பியான வஜிர அபேவர்த்தனவுக்கும் பதவியை கொடுக்க முடியாமல் கடந்த எட்டு மாதங்களாக காலம் கடத்திக்கொண்டிருக்கிறார் ஜனாதிபதி.
இப்படியே காலம் போய்க்கொண்டிருக்க, அவரோ ஜனாதிபதி தேர்தலுக்குத் தயராகி வருகிறார்.
தன்னோடு இணைய விரும்பிய ஐக்கிய மக்கள் சக்தியினர் அனைவருக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்க முடியாததால், அவர்களை எதிரணியிலிருந்து
வெளியேறி பௌசி செயல்படுவதுபோல அரசுக்கு ஆதரவாக செயல்படுங்கள் என்று ரணில் விடுத்த கோரிக்கையை அவர்கள் ஏற்றுக்கொள்ள சற்று
தயக்கத்துடன் இருப்பது பற்றி முன்னரும் இந்தப் பத்தியில் எழுதியிருந்தேன்.
இப்போது, ரணிலுக்கு சாதகமான நிலை இருப்பதுபோல தேர்தல் அறிவிக்கப்படும் போதும் இருந்தால் மாத்திரமே அவரோடு இணையலாம் என்ற எதிர்பார்ப்பில் அந்த எதிரணி எம்.பிக்கள் காத்திருப்பது பற்றி அப்போது குறிப்பிட்டிருந்தேன்.
அதனால், பொதுஜன பெரமுனவில் உள்ள கோட்டாபய ஆதரவு எம்.பிக்களையும் தனது பக்கம் அரவணைக்க ரணில் காய் நகர்த்தி வருகிறாராம்.
ஒப்பீட்டடிப்படையில் கோட்டாபய ஆதரவு எம்.பிக்களான பேராசிரியர் நாலக கொடஹேவா, பேராசிரியர் சன்ன ஜயசுமண, செஹான் சமரசிங்க, காஞ்சன
விஜயசேகர போன்ற பன்னிரண்டு பேர் ரணிலுடன் இணைவதற்காக கோட்டாபய ஊடாக பேச்சை ஆரம்பித்துள்ளனர்.
அதாவது, பொதுஜன பெரமுன கட்சியினர் ரணிலுடன் இணைவதானாலும் அவர்களை வடிகட்டி எடுப்பதற்கே ரணில் விரும்புகின்றார் என்றும் ஊழல்
குற்றச்சாட்டுக்கு இதுவரை ஆளாகாதவர்களை தேடித்தேடி அவர் பேசிக்கொண்டிருக்கிறார் எனவும் ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நேரத்திலேயே, தமக்கு பதவிகள் கிடைக்கவில்லை என்பதால் அதிருப்தி அடைந்திருக்கும் சில பொதுஜன பெரமுன எம்.பிக்கள் அரசிலிருந்து வெளியேறி எதிரணியில் உட்காரத் தயாராகி வருகின்றனர் என்றும் சிலர் ஐக்கிய மக்கள் சக்தியில் சங்கமமாக தயாராகி வருகின்றனர் எனவும் கூறப்படுவது ரணிலை மேலும்
உற்சாகப்படுத்தியிருக்கிறதாம்.
சஜித் அணியிலிருந்து பலர் ரணில் தரப்புக்குத் தாவிய பின்னர், பெரமுனவின் ஊழல்வாதிகள் அங்கே சென்று சேர்ந்துவிட்டால் தன்னைத் தூய்மையான ஆளாகக் காட்டிக்கொள்ள அது உதவும் என்று கணக்குப் போட்டிருக்கிறாராம் ஜனாதிபதி.
ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ள ஜனாதிபதி ரணில், மேலும் சில நியமனங்களைச் செய்யவிருக்கிறாராம்.
இதிலும், பெரமுனகாரர்களுக்கு இடம் இல்லை என்றால் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.!

  • ஊர்க்குருவி