இப்படியும் நடக்கிறது

0
141

கடந்த பல வாரங்களாக இந்தப் பத்தியை எழுத விருப்பம் வரவில்லை.
அதற்குக் காரணம் எழுதுவதற்கு விடயங்கள் இல்லை என்பதல்ல.
பலரும் இதுதொடர்பாக தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தனர்.
அண்மையில், வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு பத்திரிகையை வாங்கியதும் இரண்டாம் பக்கத்தை திறந்து பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் அன்றைய பொழுதைத் தொடங்க வேண்டியிருக்கின்றது என்று அங்கலாய்த்துக்கொண்டார்.
கனடாவிலிருந்து நண்பர் ஜெகதீசனோ, ‘ஈழநாடு உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி ஆகமுடியாது’ என்று குறுந் தகவல் அனுப்பியிருந்தார்.
நாட்டில் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கின்றபோது மீண்டும் எழுதவேண்டும் போல இருந்தது.
எங்கே தொடங்குவது? விட்ட இடத்திலிருந்தா அல்லது தற்போதைய நிகழ்வுகளுடனா என்று யோசிக்க வேண்டியிருந்தது.
பழைய விடயங்களை பொருத்தமான வேளைகளில் அவ்வப்போது பார்ப்போம்.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் முதல்தடவையாக இந்தியா செல்லவிருக்கிறார் என்ற தகவல் கிடைத்ததுமே தமிழ் கட்சிகள் எல்லாமே இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதுவதற்கு முண்டியடித்தன.
அந்தக் கடிதம் எழுதும் ஓட்டப் போட்டியில் பல சுவாரஸ்யமான சம்பவங்களும் வழக்கம்போல நடக்கத் தவறவில்லை.
கடந்த வருடம் தமிழ்த் தேசியக் கட்சிகள் (இப்படி எழுதுகின்ற ஒவ்வொரு வேளையிலும் ஒரு கேள்வி மனதில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை – அதுபற்றி தனியாக ஒருநாளில் பேசுவோம்) பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்ததை வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோவின் ஏற்பாட்டில் எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில் அப்போது கூட்டமைப்பின் தலைவராக இருந்த சம்பந்தன் ஐயாவிடம் கையெழுத்தைப் பெறுவதற்காக நீண்டநாள் இழுபறிப்பட்டு கடைசியில் சில திருத்தங்களுடன் அவர் கையெழுத்திட்டார்.
பதின்மூன்றை நடைமுறைப்படுத்தச் சொல்லி இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்பதற்காகவே கடிதம் அனுப்ப முயற்சி எடுக்கப்பட்டது.
ஆனால், பதின்மூன்றை ஏறெடுத்தும் பார்க்க முடியாது என்று அடம்பிடித்த சம்பந்தன் ஐயா, கடைசியில் பதின்மூன்றுக்கு பதிலாக
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை அமுல்படுத்தக் கோருகின்ற கடிதமாக மாற்றியதுடன் அதில் கையொப்பமும் இட்டார்.
இப்போது, ரணில் இந்தியாவுக்கு பயணம் செய்யவிருப்பதால் அது குறித்து மீண்டும் கடிதம் எழுத முயன்றபோது அதில் கையொப்பமிட அவர் மறுத்தது ஏன் என்பது அவருக்கு மாத்திரம் தெரிந்த சங்கதி.
அதுவல்ல நாம் இன்று இங்கே சொல்ல வருவது.
அண்மையில், அமெரிக்க தூதுவர் தமிழ் கட்சிகளின் தலைவர்களை ஒன்றுசேர சந்தித்திருந்தமை வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
அந்தச் சந்திப்பில், இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தமிழரசுக் கட்சி ஏன் கையொப்பம் இடவில்லை என்று கேட்கப்பட்டபோது,
தமிழரசின் சார்பில் அந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட எம்.ஏ.சுமந்திரன், சொன்ன தகவல்தான் மண்டையை குழப்புவதாக இருந்தது.
முன்னர் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை அமுல்படுத்தக்கோரி அனுப்பப்பட்ட கடிதத்தால்தான் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்
கொண்டது என்று கூறியிருக்கிறார்.
அதாவது, அப்படி கடிதம் எழுதுவதற்கு முன்னர் இந்தியா பதின்மூன்றுக்கு மேலான தீர்வுக்கு ஆதரவாக இருந்ததாகவும் அந்தக் கடிதத்தால்தான் இந்தியா இப்போது பதின் மூன்றுக்கு இறங்கி வந்திருக்கின்றது என்கிறார் சுமந்திரன்.
சுமந்திரன் அரசியலுக்கு வந்து பதினான்கு வருடங்கள்தான் ஆகின்றன.
ஆனால், இலங்கை – இந்திய ஒப்பந்தத்துக்குப் பின்னர் மாத்திரமல்ல, நமது ஆயுத இயக்கங்கள் இந்தியாவில் பயிற்சிபெற்ற
காலத்திலிருந்து இந்தியாவுடன் நெருக்கமாக இருந்து வரும் ஒரு தலைவரும் அந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார்.
தமிழீழம்தான் நமது பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்று இளைஞர்கள் ஆயுதப் பயிற்சி எடுத்த காலத்தில்கூட, தனியரசுக்கு சார்பாக இந்தியா
இருந்ததில்லை என்பதை அறிந்தவர் அவர்.
அவர் அமெரிக்கத் தூதுவருக்கு சொன்னாராம்.
இந்தியா பதின்மூன்றுக்கு மேலே எந்தக் கட்டத்திலுமே ஆதரவாக இருந்ததில்லை.
நண்பர் எங்கிருந்து இந்த தகவலை பெற்றார் என்பதை அவர்தான் விளக்கவேண்டும் என்று.
கடைசியாக அனைத்து தமிழர் தரப்பினரையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கொழும்பில் சந்தித்தபோதும்,
‘பதின் மூன்றை முழுமையாக நீங்கள் அடையும்வரை இந்தியா உங்களோடு இருக்கும்’ என்று சொன்னதன் அர்த்தம் அவருக்கு புரிந்திருக்காது என்பதல்ல.
ஆனால், அவர் தமிழ் மக்களின் ஞாபக மறதி மீது அதீத நம்பிக்கை கொண்டவர்.
தமிழ் மக்கள் எதைச்சொன்னாலும் நம்பிவிடுவார்கள் என்ற அவரின் நம்பிக்கை எவ்வளவு காலத்துக்கு இருக்குமோ தெரியவில்லை.

  • ஊர்க்குருவி.