இப்படியும் நடக்கிறது

0
99

கலைஞர் கருணாநிதி அப்போது அரசியலுக்கு வந்து சட்டசபையில் எதிர்க்கட்சியில் இருந்த காலம்.
அவர் அடிக்கடி சென்னையிலுள்ள ஆஸ்பத்திரி ஒன்றுக்கு சென்றுவந்து கொண்டிருந்தார்.
அதனை அவரது எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.
‘கருணாநிதி எதற்காக அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு சென்று ஒரு குழந்தை பிரசவித்துள்ள பெண்ணைப் பார்த்து வருகிறார்.
அந்தப் பெண் யார்?’ என்று அவர்கள் கேட்டபோது கலைஞர் சொன்னார், ‘அந்தப் பெண் வேறு யாருமல்ல, என் மகள் கனிமொழியின் தாயார்’ என்று.
கலைஞர் கருணாநிதி முதலில் பத்மாவதி அம்மாளை மணந்தார்.
அவர் நான்கு வருடங்களில் மரணமடைந்ததும் தயாளு அம்மாளை மணந்தார்.
அவரை மணந்து சுமார் பதினெட்டு வருடங்களின் பின்னர் ராசாத்தியை மணந்தார்.
கருணாநிதி இறக்கும்வரை தயாளு அம்மையாரை கருணாநிதியின் மனைவி என்றும் ராசாத்தி அம்மையாரை துணைவி என்றும் பத்திரிகைகள் எழுதிவந்தன.
தயாளு அம்மையாருடன் சென்னை கோபாலபுரத்திலுள்ள இல்லத்தில் வாழ்ந்தாலும் தினமும் காலை ராசாத்தி அம்மாளின் இல்லம் சென்று தேநீர் அருந்திய
பின்னரே அன்றைய தனது கடமைகளை ஆரம்பித்தவர் கருணாநிதி.
அதேபோலத்தான் ஒரு தடவை எம். ஜி. ஆரின் அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இருந்த கண்ணப்பனுக்கு பிரமாண்டமான வகையில் திருமணம் நடைபெற்றது.
அப்போது தமிழக சஞ்சிகையான நக்கீரன், கண்ணப்பனின் மனைவியிடம் சென்று உங்கள் கணவன் நீங்கள் இருக்கும்போதே மற்றுமொரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது, அவர் ‘என் புருசன் என்ன பொண்ணையனா?’ என்று பதில் கேள்வி கேட்டதை
அட்டைப்பட செய்தியாக்கியிருந்தது நக்கீரன்.
அதாவது ஓர் ஆண் இரண்டு பெண்களையோ அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களையோ திருமணம் செய்து குடும்பம் நடத்துவது ஒன்றும் இந்தியாவில் யாரும்
தவறானதாக பார்க்கின்ற விடயமல்ல.
இதுவே இலங்கையில் அதுவும் தமிழர் மத்தியில் எனில் சாத்தியமானதே அல்ல.
ஒன்றிரண்டு விதிவிலக்காக இருந்தாலும், அப்படியிருப்பவர்கள் அரசியலுக்கோ அல்லது பொது வாழ்வுக்கோ வருவது சாத்தியமானது அல்ல.
இதை ஏன் இங்கே குறிப்பிடுகின்றேன் என்று நீங்கள் கேட்கலாம்.
இலங்கை விடயத்தில் இந்தியா ஏனோதானோ என்று நடந்துகொள்வதைப் பார்க்கின்றபோது, கணவன் எத்தனை பெண்களுடன் உறவாடினாலும் பொறுத்துக் கொள்ளும் இந்தியப் பெண்கள்போல இலங்கையை நடத்துகின்றதா என்று கேட்காமல் இருக்கமுடியவில்லை.
இலங்கை என்ற தமது ‘கணவன்’ சீனாவுடன் உறவாடி மணந்தாலும் பாகிஸ்தானுடன் உறவாடி மணந்தாலும் பரவாயில்லை எனக்கும் கணவனாக இருந்தால்
சரி என்று இந்தியா கருதுகின்றதா என்ற சந்தேகம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
இந்தியா எவ்வளவுதான் கேட்டுப் பார்த்தபோதும் கண்டுகொள்ளாமல் சீனாவின் உளவுக்கப்பலான யுவான் ஐந்து கப்பலை இலங்கைக்குள்- அம்பாந்தோட்டையில் தரித்துச்செல்ல அனுமதியளித்தது.
இதேபோல, மீண்டும் இந்தியாவின் விருப்பத்தைக் கவனத்தில் எடுக்காமல் ஷியான் ஆறு என்ற ஆய்வுக் கப்பல் இலங்கை வர அனுமதி வழக்கப்பட்டிருக்கின்றது.
ஆனாலும் இந்தியாவும் சீனாவும் எங்கள் நண்பர்கள் என்கிறார் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி.
இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையே செய்துகொள்ளப்பட்ட ஓர் உடன்படிக்கையின்படி கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது.
கச்சதீவை மீட்கவேண்டும் என்ற கோஷம் இன்று தமிழகத்திலிருந்து பலமாக எழுப்பப்படுவதற்கு காரணம், இந்த ஒப்பந்தத்தில் உள்ளவற்றை இலங்கை கடுமையாக அமுல்படுத்தி வருவதுதான்.
செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் உள்ள ஒவ்வொரு விடயங்களையும் அப்படியே முழுமையாக அமுல்படுத்தி வருகின்றது இலங்கை.
எந்த விட்டுக்கொடுப்புகளும் இல்லாமல்.
ஆனால், இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதில் இலங்கை இன்றுவரை
இந்தியாவுக்கு ‘தண்ணி’ காட்டிவருகின்றது.
உலகின் ஐந்தாவது பெரிய இராணுவத்தை கொண்ட நாடு.
உலகில் அதிக சனத்தொகை கொண்ட நாடு.
உலகப் பொருளாதாரத்தில் போட்டிபோட்டு வளர்ந்துவரும் நாடு என்று பல பெருமைகளை கொண்ட இந்தியாவை இந்தச் ‘சுண்டக்காய்’ நாடான இலங்கை கையாண்டுவரும் விதத்தை பார்க்கும்போது, இந்தியா ஏன் இலங்கையிடம் மட்டும் தோற்றுவருகின்றது என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.

  • ஊர்க்குருவி.