ஒரு பிரச்னை தீவிரமாகப் பேசப்படுவதும் சில நாட்களில், புதிய ஒரு பிரச்னை வந்ததும் அதனைப் பற்றியே பேசுவதும் நமக்குப் பழக்கப்பட்டுவிட்டது.
அவ்வாறு புதிய பிரச்னை வந்ததும் பழைய பிரச்னையை நாம் மறந்தே போய்விடுகின்றோம்.
அதற்காக அந்தப் பிரச்னை முடிந்துவிட்டது என்பதல்ல.
இந்த வகையில் தமக்கு எதிரான பிரசாரங்களை – ஆளும் தரப்பினர் புதிய புதிய பிரச்னைகளை தாமே உருவாக்கி – தமது பிரச்னைகளை மறக்க பண்ணுவதும் நமக்குப் பழகிப்போன ஒன்றுதான்.
இப்போதெல்லாம் நமது பிரச்னை இந்த மத விவகாரம் தான்.
தொல்பொருள் திணைக்களம் எமது தொல்லியல் இடங்களைக் கையகப்படுத்த முனைவதுதான் நமக்கு இப்போது முக்கிய பிரச்னையாகி இருக்கின்றது.
ஆனால், சில மாதங்களுக்கு முன்னர் வடக்கில் மிக முக்கியமாக பேசப்பட்ட விடயம் இங்கு நடக்கும் போதைப் பொருள் பாவனை பற்றியதுதான்.
யாரை பார்த்தாலும் அதைப் பற்றியே பேசிக்கொண்டனர்.
இத்தனை இராணுவ முகாம்கள் இருக்கக்கூடியபோதிலும் எப்படி எங்கள் மண்ணில் போதைப் பொருட்கள் வருகின்றன என்று மக்கள் மாத்திரமல்ல,
நமது அரசியல்வாதிகளும்தான் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தனர்.
இப்போது அது பற்றிய செய்திகளை காணவில்லை.
அவ்வப்போது ஆங்காங்கே சில இடங்களில் கஞ்சாவும் வேறுசில போதைப்பொருட்களும் கைப்பற்றப்படுகின்றன என்ற செய்திகள் வருகின்றனவே தவிர, அதுபற்றிய பரபரப்புகளை காணவில்லை.
ஏன் அது பற்றிய செய்திகளைக் காணோம் என்று தேடியபோதுதான், இப்போதும் வழமைபோல விடயங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன என்பது தெரிய
வந்தது.
அண்மையில், மூன்று கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் வடக்கில் கைது செய்யப்பட்டாரென செய்தி வெளிவந்திருந்தது.
அதனைக் கொண்டுவந்தவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படும்.
நீதிமன்றம் அவருக்கு உரிய தண்டனையை வழங்கும் என்பது தெரிந்தது தான்.
ஆனால், மூன்று கோடி ரூபாய் பெறுமதியான அந்தப்போதப்பொருளை அதனை வைத்திருந்தவரே பணம் கொடுத்து வாங்கினாரா அல்லது அவர் வெறும் அம்பு தானா என்பது தெரியவரப்போவதில்லை.
மூன்று கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருளை வாங்குபவர் அதனை கோடியில் கொடுத்தே வாங்கியிருப்பார்.
அதாவது கோடீஸ்வரர்களால் மாத்திரமே அதனை வாங்கி விற்று பணம் சம்பாதிக்கமுடியும்.
அப்படியெனில், இதுவரை போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டனரென வடக்கில் பெரும்புள்ளிகள் யாரும் கைது செய்யப்பட்டனரென செய்திகள் வெளிவரவில்லை.
கேரள கஞ்சா நாடு முழுவதும் பாவனையில் இருக்கின்றது.
அதைத்தான் உற்பத்தி செய்வதற்கே அரசாங்கம் இப்போது அனுமதி வழங்கியிருக்கின்றதே என்று நீங்கள் கேட்கலாம்.
அது விமர்சனத்திற்குரியது.
ஆனாலும் இன்னமும் உத்தியோகபூர்வமாக உற்பத்தி தொடங்கப்படவில்லை.
ஆனாலும், நாடு முழுவதும் தற்போது பாவனையில் இருக்கும் கேரள கஞ்சா எப்படி நாட்டுக்குள் வந்தது என்பது இரகசியமானதல்ல.
அதன் பெரும்பகுதி வடக்கு கடல் ஊடாகவே வருகின்றது.
புத்தளம் – கற்பிட்டியிலும் அவ்வப்போது சிலர் கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டாலும் பெரும்பாலானவை வட கடலூடாகவே வருகின்றன.
ஆனால், கேரளாவிலிருந்து கடத்தப்படும் இந்தக் கஞ்சா கடத்துபவர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டனரென செய்திகள் வெளிவருவது அதிசயமான ஒன்றாகவே இருக்கின்றது.
ஆனால், இங்கே கொண்டுவரப்படும் கஞ்சாவுக்கான வர்த்தகத்தில் ஈடுபடுகின்றவர்கள் பல கோடி ரூபாய்களில் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர்.
ஆனால், அதனை கடத்துகின்ற – அதாவது ஓர் இடத்திலிருந்து இன்னுமோர் இடத்துக்கு கடத்துகின்ற அம்புகள் கைது செய்யப்படுகின்றனவே தவிர, வில்லுகள் யாரும் இதுவரை கைதுசெய்யப்பட்டதாக இல்லை.
வெறுமனே பதின் மூன்று பற்றியும் சமஷ்டி பற்றியும் கதைத்துக்கொண்டிருப்பது தான் நமது மக்கள் பிரதிநிதிகளின் வேலை அல்ல.
இது போன்ற சமூக விரோத சம்பவங்களை பற்றியும் கவனம் செலுத்தவேண்டும்.!
- ஊர்க்குருவி.