இப்படியும் நடக்கிறது

0
72

இப்போது நாடுமுழுவதும் பேசப்படுகின்ற விடயம் என்ன என்பது நீங்கள் அறிந்ததுதான்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து பிரித்தானியாவின் சனல் -4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படம் பற்றியே நாடு முழுவதும் இப்போது பேசப்படுகின்றது.
அந்த ஆவணப்படம் ஓகஸ்ட் மாதம் பதினைந்தாம் திகதி முதலில் ஒளிபரப்பப்படவிருந்தது.
அதில், தெரிவிக்கப்பட்டிருந்த முக்கிய விடயம் ஒன்று தொடர்பாக எழுப்பப்பட்ட முறைப்பாட்டையடுத்து அது ஒளிபரப்பப்படுவது தாமதமாகியபோது அதுபற்றி இந்தப் பத்தியில் எழுதியிருந்தது வாசகர்கள் மறந்திருக்கமாட்டார்கள்.
பிள்ளையான் என்று அறியப்பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிரத்தியேக செயலாளராகவும் ஊடகச் செயலாளராகவும் இருந்த ஆஸாத் மௌலானா வழங்கிய
தகவல்களை ஆதாரமாக வைத்து அந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டிருந்தது.
அது ஒரு சனல் – 4 இன் தயாரிப்பு அல்ல.
அது தனியார் தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் தயாரிப்பு.
சனல் – 4 ஏற்கனவே, பல ஆவணப்படங்களை இலங்கையை மையப்படுத்தி வெளியிட்டிருக்கின்றது.
உதாரணமாக பிரபாகரனின் இளைய புதல்வர் பாலச்சந்திரன் படையினரால் படுகொலை செய்யப்பட்டாரெனக் குற்றஞ்சாட்டி வெளியிடப்பட்ட ஆவணப்படம்
அதில் முக்கியமானது.
அதில் முதலில் பாலச்சந்திரன் உயிருடன் படையினர் வசம் இருக்கின்ற படமும் – அவர் படுகொலை செய்யப்பட்ட பின்னர் எடுத்த படத்தையும் வெளியிட்டு பரபரப்பை எற்படுத்தியது.
அதனை மறுக்க முடியாத நிலை அரசுக்கு ஏற்பட்டிருந்தது.
ஆனால், நேற்று வெளியிடப்பட்ட இந்த ஆவணப்படம் பிள்ளையானின் உதவியாளர் வெளியிட்ட தகவல்களை மட்டுமே ஆதாரமாககொண்டு வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டு தசாப்தமாக பிள்ளையானுடன் இருந்த ஒருவர், அவரின் அத்தனை நடவடிக்கைகளிலும் சம்பந்தப்பட்ட ஒருவர் இப்போது சொல்வது
ஏற்றுக்கொள்ளக்கூடியதா என்பது தெரியவில்லை.
பிள்ளையான் பற்றி அவர் சொல்கின்ற விடயங்கள் ஏற்கனவே நாம் அறிந்தவைதான்.
ஆனால், இந்த ஆவணம் முழுவதும் இலங்கையின் தேசிய புலனாய்வு சேவையின் இயக்குநராக இருக்கும் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயைச் சுற்றியே
கூறப்பட்டுள்ளது.
அவரே முழுக்க முழுக்க இந்த தாக்குதலின் பின்னாலிருந்த ஒருவர் என்பது போலவும் ராஜபக்ஷக்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்காகவே அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஆஸாத் மௌலானா அந்த ஆவணப்படம் முழுவதும் பேசுகிறார்.
இதற்கு முன்னரும் இதுபற்றி எழுதியபோது ஆஸாத் மௌலானா எப்படி பிள்ளையானின் உதவியாளராக வந்தார்.
அவரோடு அவரது நிழல்போல செயல்பட்டார் என்று எழுதியிருந்தேன்.
அவர் தனக்கும் பிள்ளையானுக்கும் இடையேயான உறவு பற்றியும் தானே அவரின் நம்பிக்கைக்குரிய ஆளாக இருந்தது பற்றியும் விவரித்திருப்பதால் அவரின் சொல்லுக்கு பெறுமதி சேர்ந்திருக்கிறது.
அதில் அவர் சொல்கின்ற சில விடயங்கள், உதாரணமாக பிள்ளையானின் ஆட்களுக்கு அரசாங்கம் மாதாந்தம் பணம் வழங்கியது போன்றவை உண்மையானவையாகக்கூட இருக்கலாம்.
ஆனால், அவர் இரண்டாயிரத்து பதினெட்டாம் ஆண்டு ஜனவரி மாதம் புத்தளத்தில் வைத்து குண்டுதாக்குதல் பிரதான குற்றவாளியான சஹ்ரானையும்
மற்றும் ஆறு தற்கொலை குண்டுதாரிகளையும் சுரேஷ் சாலேவுக்கு தான் அறிமுகம் செய்து வைத்ததாகவும் கூறியிருக்கிறார்.
ஆனால், இரண்டாயிரத்து பதினாறு டிசெம்பர் முதல் பதினெட்டு டிசெம்பர் வரை அவர் மலேசியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் துணை தூதராக இருந்தார் என்றும் அவர் மலேசியாவில் இருந்ததை மலேசிய அதிகாரிகளுடன் உறுதிப்படுத்திக்கொள்ளலாம் என்றும் சுரேஷ் சாலே தனது தரப்பில் விளக்கம் அளித்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.
ஒருவர் நாட்டிலேயே இல்லாதபோது அவரைச் சந்தித்து தற்கொலை குண்டுதாரிகளை அறிமுகம்செய்து வைத்ததாக ஒருவர் கூறியதை வைத்துக்கொண்டு
இப்படியொரு ஆவணப்படத்தை எப்படி தயாரித்தார்கள் என்பது தெரியவில்லை.
அதுவல்ல நாம் இன்று சொல்லவருவது இந்த படம் வெளிவந்த பின்னர் தெற்கின் ஓர் அரசியல் செயல்பாட்டாளருடன் பேசினேன்.
அந்த ஆவணப்படம் தெற்கில் எந்தவகையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் ஆவல் எனக்கு.
‘ஏற்கனவே சுரேஷ் சாலே பற்றி வண. பிதா றொகான் சில்வா தெரிவித்திருந்த இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டுக்கு எதிராக அவர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.
அதுபற்றி அவர் தெரிவித்த மறுப்பை இப்போது சனல் – 4உம் உறுதிப்படுத்தியிருக்கின்றது.
அதாவது, அவர் நாட்டில் இல்லாதபோது அவரைச் சந்தித்ததாக சொல்வதிலிருந்தே அவர் வேண்டுமென்று பொய் சொல்கிறார் என்பது தெரிந்துவிட்டது.
இதனால் சாலே தன் பக்க நியாயத்தை இன்னும் அழுத்தமாக சொல்வதற்கு அந்த ஆவணப்படம் உதவியிருக்கின்றது.
அதுவல்ல முக்கியமானது, இப்போது அவர்மீது புகார் சொல்பவர் ஒரு முஸ்லிம்.
இதனால் சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் மீண்டும் முஸ்லிம்கள் மீதான வெறுப்பு அதிகரிக்கப்போகின்றது.
அதனை மகிந்த தரப்பும் தமக்கு சாதகமாக திருப்புவதற்கு முயற்சிக்கும்.
இது வீழ்ந்துகிடக்கும் ராஜபக்ஷக்களை மீண்டெழப்பண்ணும்’ என்றார் அவர்.
இதனிடையே பிள்ளையானின் உதவியாளரின் வாக்குமூலத்தை வைத்துக்கொண்டு ராஜபக்ஷக்களை கைது செய்யவேண்டும் என்று நமது கஜேந்திரன் எம்.பி.யும்
கோரிக்கை விடுத்திருக்கிறார்.

  • ஊர்க்குருவி.