இப்படியும் நடக்கிறது

0
125

ஒரு காலத்தில் இந்த ஊர்க்குருவி பல சிறுகதைகளை எழுதியிருக்கின்றது.
அப்படி எழுதிய போது எழுதிய சிறுகதைகளில் ஒன்று ஒருவர் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஒரு கொலையை செய்துவிட்டு நேராக ஒரு கத்தோலிக்க குருவானவரிடம் வந்து பாவமன்னிப்பு பெற்றுச் செல்வதாகவும் ஆனால், அந்த குரு அவர் செய்த கொலையை பற்றி தெரிந்திருந்தபோதிலும் அதனை கடைசிவரை இரகசியமாக வைத்திருக்கவேண்டியது பற்றியும் எழுதியிருந்தது ஞாபகம்.
இப்போது கர்தினால் மல்கம் ரஞ்சித் விடுத்திருக்கின்ற அழைப்பை படித்தபோது இவர் பாவமன்னிப்பு கொடுக்கப்போகிறாரா என்று கேட்காமல் இருக்கமுடியவில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சர்வதேச தரத்தில் விசாரணைகள் செய்யவேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கடைசியாக வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், ‘ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் தங்களுடைய தவறை ஒப்புக்கொண்டால், தான் உட்பட கத்தோலிக்க திருச்சபை அவர்களுக்கான மன்னிப்பை வழங்க தயாராக உள்ளதாக’, தெரிவித்திருக்கிறார்.
அந்த கொடூர தாக்குதலுக்குப் பொறுப்பானவர் தனது பாவத்துக்கு மன்னிப்பு பெறுவதற்காக (பாவமன்னிப்பு) அவரிடம் வந்திருந்தாலும்கூட அவர் அவருக்கு பாவமன்னிப்பு வழங்கியே இருந்திருக்க வேண்டும்.
அப்படி அவர் இவரிடம் பாவமன்னிப்பு பெற வந்திருந்து, பாவமன்னிப்பு வழங்கியிருந்தாலும் அதனை இரகசியமாகவே வைத்திருக்க வேண்டியிருந்திருக்கும்.
அதுவல்ல நாம் இன்று இங்கே சொல்லவருவது, இந்த விவகாரம் தொடர்பாக நேற்றைய ‘ஈழநாடு’ தனது ஆசிரியர் தலையங்கத்தில் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தது, ‘அமெரிக்க பிரஜைகள் கொல்லப்பட்டதன் பின்னணியில், அமெரிக்க உள்ளக உளவுத்துறையான எவ். பி. ஐ. இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.
இதற்கு இலங்கை அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கியிருந்தது.
இதன் தொடர்ச்சியாக – எவ். பி. ஐ. டிசெம்பர் 2020இல் லொஸ்ஏஞ்சல் – மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்தது.
இதன் கீழ் இந்தத்தாக்குதலுக்கு பல்வேறு வழிகளில் உதவியவர்கள் என்னும் அடிப்படையில் மூன்று முஸ்லிம் நபர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்தப்பின்புலத்தில் நோக்கினால் இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஐ. எஸ். ஐ.எஸ்.இனால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என்பதில் இரு வேறு கருத்துகள் இல்லை.’
இப்போது இலங்கையில் சனல் – 4 தொலைக்காட்சியின் ஆவணப்படத்தை முன்னிலைப்படுத்தி முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் ராஜபக்ஷக்கள் மீண்டும் தேர்தலில் வெற்றியடைவதற்காகவே இந்தத் தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டது என்பது பற்றியது.
அப்படியெனில், உண்மையில் அந்த ஐ. எஸ். ஐ. எஸ்.அமைப்புக்கும் ராஜபக்ஷக்களுக்கும் என்ன வகையான தொடர்புகள் இருந்தன என்பது பற்றியே விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறான விசாரணை என்பது இலங்கையில் மாத்திரம் செய்யப்படக்கூடியதல்ல.
அது சர்வதேச அளவில் பல்வேறு தரப்புகளுடனும் நடத்தப்படவேண்டியது.
ஆனால், ஏற்கனவே தனது பிரஜைகள் கொல்லப்பட்டதன் பின்னணியில் அமெரிக்க எவ். பி.ஐ. ஏற்கனவே நடத்திய விசாரணைகளும் இலங்கை நடத்திய விசாரணை போலத்தான் நடத்தப்பட்டது என்கிறோமா? அமெரிக்க எவ். பி. ஐ. என்ற
அமெரிக்காவின் உள்ளக உளவுத்துறையை விட சிறந்த அமைப்பு ஒன்று இனி இந்த சர்வதேச விசாரணைகளில் சம்பந்தப்படவேண்டும் என்று சொல்கின்றோமா? சனல் – 4 ஆவணப்படம் சொல்லிய விடயங்கள் பல.
பிள்ளையான் குழு செய்ததாகக்கூறப்படும் பல வியடங்கள் பற்றி உதாரணமாக லசந்த விக்கிரமதுங்க, ஜோசப் பரராஜசிங்கம் கொலை போன்ற சம்பவங்கள் பற்றிய விடயங்கள் சர்வதேசதரத்தில் விசாரணை செய்யப்பட வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்கமுடியாது.
நாளை பிள்ளையானே வந்து இவை பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
அப்படியெனில், அவை எல்லாவற்றையும் ஆஸாத் மௌலானாதான் செய்திருக்கிறார் என்றும் அவற்றையெல்லாம் செய்யுமாறு ஒரு தலைவர் ( வேறு ஒருவர் பெயரைச் சொல்லி ) இன்னுமோர் ஆவணப்படத்தில் தகவல் தந்தால் எப்படியிருக்கும்? ஆக, முதலில் சர்வதேச விசாரணையாளர்கள் கைது செய்ய வேண்டியது இந்த மௌலானா வைத்தான்.
இத்தனை கொடூரமான சம்பவங்களும் நடந்த போதெல்லாம் அமைதியாக அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கிவிட்டு, இப்போது ‘அப்றூவராக’ மாறிவிடுவதன் மூலம் அவர் தப்பித்துக்கொள்ள ‘சர்வதேச நீதி’ அனுமதிக்கப்போகின்றதா?

  • ஊர்க்குருவி.