இப்படியும் நடக்கிறது

0
134

ஒருவர் விறகு வெட்டுவதற்காக ஒரு நாள் தனது பத்து வயது மகனையும் அழைத்துக் கொண்டு காட்டுக்கு சென்றார்.
பையனோ விடாமல் வழியெல்லாம் அவரைக் கேள்விகளால் துளைத்தெடுத்துக் கொண்டே வந்தான்.
அவரும் பொறுமையாகப் பதில் சொல்லிக்கொண்டே வந்தார்.
விறகு வெட்ட ஆரம்பித்தார்.
பையன் அப்போதும் கேள்விகள் கேட்டான்.
அப்போது தகப்பன் சொன்னார்: ‘நாம அப்புறம் பேசிக்கொள்ளலாம்.
நீ நல்ல பையனாம்.
அப்பா வெட்டுற விறகுகளை எல்லாம் எடுத்து அடுக்கி வைப்பியாம்’.
பையனும் மகிழ்ச்சியுடன் தலையசைத்தான்.
அவர் விறகு வெட்ட ஆரம்பித்தார்.
‘அப்பா.. அப்பா..’ என்றான் பையன்.
‘என்னடா?’ கோபத்துடன் கேட்டார்.
‘இந்த ஆறு எங்கே போகுது?’ ‘நம்ம வீட்டுக்குத்தான்’.
பையன் அதற்குப் பிறகு கேள்விகள் கேட்கவில்லை.
மாலை நேரம் ஆனது.
விறகு வெட்டியவர் பையனின் கையைப்பிடித்துக் கொண்டு ‘வா, போகலாம்.
நான் வெட்டிய விறகு எல்லாத்தையும் எங்க அடுக்கி வைச்சிருக்கிறாய்?’ என்று கேட்டார்.
பையன் சொன்னான்: ‘நீங்க வெட்டினதை எல்லாம் ஆற்றிலே போட்டுட்டேன்.
இந்நேரம் அது நம்ம வீட்டுக்குப் போயிருக்கும்..!’ – இதுதான் சொல்வார்கள், குழந்தைகளுடன் பேசும்போது கவனமாக பேசவேண்டும் என்று.
கடந்த இரண்டு நாட்களாக பாராளுமன்றத்தில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக எம்.பிக்கள் பேசிய பேச்சுக்கள் பற்றிய செய்திகளைப்
படித்தபோது மேலேயுள்ள கதைதான் ஞாபகத்திற்கு வந்தது.
இந்த விவாதம் ஏற்பாடு செய்யப்பட்டது, சனல் 4 தொலைக்காட்சி ஆவணப்படம் வெளியிடப்பட்டதால்தான் என்பது தெரிந்ததுதான்.
அதில் முக்கியமாக தெரிவிக்கப்பட்டது கோட்டாபய தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இந்த தாக்குதல் ஏற்பாடு செய்யப்பட்டது என்று.
அதைச் சொன்னவர், பிள்ளையானின் உதவியாளர்.
அவர் சொன்ன முக்கிய தகவல், தற்போதைய தேசிய புலனாய்வு இயக்குநருக்குத்தானே தாக்குதல் தற்கொலைதாரிகளை அறிமுகம் செய்ததாக.
ஆனால் அந்த ஆவணப்படம் வெளிவந்த பின்னரும் அதே புலனாய்வு இயக்குநரே அந்தப் பதவியில் தொடர்கிறார்.
அது பற்றிய எந்த பரபரப்பும் இல்லாமல் விசாரணைக்கான குழு ஒன்றை நியமித்துவிட்டு ஜனாதிபதி ரணில் ‘கூலாக’ வெளிநாடு சென்றுவிட்டார்.
ஆனால் இங்கோ, பாராளுமன்றிலும் வெளியிலும் ஒவ்வொருவரும் தத்தம் விருப்பு வெறுப்புக்களுக்கு அமைவாக பேசிக்கொண்டிருக்கின்றனர்.
அதில் உச்சக்கட்டமாக, இராணுவத் தளபதியாக இருந்து யுத்தத்தை நடத்தி முடித்துவைத்த இன்றைய எம்.பியான சரத்பொன்சேகாவோ, தாக்குதலின்
சூத்திரதாரிகள் மைத்திரியும் கோட்டாபயவும்தான் என்கிறார்.
மறுபுறத்தில் முன்னாள் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவோ, இராணுவத்தளபதியாக இருந்தபோது இராணுவ தலைமையகத்தையே பாதுகாக்க
முடியாதவர் சரத் பொன்சேகா என்பதோடு மாத்திரமல்லாமல், இராணுவ தலைமையகம் தாக்குதலுக்குள்ளானபோது பொன்சேகாவை ஒரு வாகனத்திலும்
அவரது வயிற்றுப்பாகத்தை மற்றுமொரு வாகனத்திலுமே கொண்டு போகவேண்டிவந்தது என்றும் பாராளுமன்றில் பேசியிருக்கிறார்.
ஆக, குழந்தைப்பிள்ளைகளிடம் ஒரு கதையைச் சொன்னால் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்களோ அதுபோலவே நமது எம்.பிக்கள் – தலைவர்கள் பாராளு
மன்றில் நடந்துகொள்கின்றார்கள்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர், தற்கொலை குண்டுதாரிகள் ஏழு பேரும் எதற்காக தமது உயிர்களை தற்கொடை செய்கின்றோம் என்பது தொடர்பாக அவர்கள் உறுதியெடுத்துக்கொள்வதை வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்தனர்.
அவர்கள் தங்கியிருந்த இடம் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டபோது அந்த வீடியோ முழுமையாக கைப்பற்றப்பட்டிருந்தது.
அதுபற்றி இதுவரை பல்வேறு கோணங்களிலும் இந்தப் பத்தியில் எழுதியாகிவிட்டது.
பாராளுமன்றில் எப்போதும் சரியான வாதங்களை முன்வைக்கின்ற எம்.பிக்களில் நளின் பண்டார முக்கியமானவர்.
ஆனால் அவர் கூட, பிரதான தற்கொலைதாரி சஹ்ரானின் மனைவியின் வாக்குமூலத்தில் இந்தியாவிலிருந்து ஒருவர் அடிக்கடி சஹ்ரானுடன் தொடர்புகொண்டதாக சாட்சியமளித்திருந்ததைக் குறிப்பிட்டு அந்த நபர் பற்றி ஏன் விசாரணை நடத்தப்படவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
ஆனால் இன்று வரை யாரும் ஒரு முக்கியமான விடயத்தை கேள்வி கேட்டதாக தெரியவில்லை.
இந்த தாக்குதல் பற்றிய தகவலை முன்கூட்டியே இந்திய உளவுத்துறை இலங்கைக்கு தெரிவித்திருந்தது.
தாக்குதல் எங்கு நடைபெறும் என்பதைக் கூட துல்லியமாக தெரிவித்திருந்தது.
அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது வேறு சங்கதி.
ஆனால் அத்தகையை துல்லியமான தகவலை கேரளாவில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் தீவிரவாதி ஒருவர் மூலமே இந்தியா பெற்றிருந்ததாகவும் சில தகவல்கள் தெரிவித்திருந்தன.
ஆனால் இன்றுவரை இலங்கைப் புலனாய்வாளர்கள் அந்த இந்தியாவில் கைது செய்யப்பட்டு தடுப்பில் இருக்கும் முஸ்லிம் தீவிரவாதியை விசாரணை செய்யவேண்டும் என்று முயற்சி எடுக்காததை இதுவரை யாரும் கேள்விக்கு உட்படுத்தியதாக தெரியவில்லை.
இந்த இலட்சணத்தில் தொடர்ந்து விசாரணை குழுக்கள் அமைக்கப்படுவதில் எதுவிதபயனும் ஏற்படப்போவதில்லையே.!

  • ஊர்க்குருவி.