இப்படியும் நடக்கிறது

0
122

இறுதி யுத்தத்தில் நடந்த படுகொலைகள், யுத்தக் குற்றங்கள் குறித்து நாங்கள் சர்வதேச விசாரணை வேண்டும் என்று கேட்டபோது ஒட்டுமொத்த நாடும் அதற்கு எதிராகத் திரண்டிருந்தது.
ஒட்டுமொத்த நாடும் என்று நாங்கள் இங்கே சொல்ல வருவது, இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மையின அரசியல் தலைவர்கள் பற்றியது.
அனைத்து சிங்கள அரசியல் தலைவர்களும் சர்வதேச விசாரணை என்பது அரசியலமைப்புக்கு முரணானது என்றும் அதனை அனுமதிக்க முடியாது
எனவும் கூறிக்கொண்டிருந்தார்கள்.
ஆனால், இப்போது அவர்களே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.
அது என்ன நாங்கள் சர்வதேச விசாரணை கோரியபோது அதற்கு அரசியலமைப்பில் இடமில்லை என்ற நீங்களே இப்போது சர்வதேச விசாரணை கோருகின்றீர்கள் என்று நமது தரப்பிலிருந்து இப்போது விடுக்கப்படுகின்ற விமர்சனம் நியாயமானதுதான்.
ஆனால், இப்படியொரு விமர்சனத்தை நாம் முன்வைக்கின்றபோது, அவர்கள் தற்போது கேட்கின்ற சர்வதேச விசாரணையையும் எதிர்காலத்தில் கோராமல் விடவும்
கூடும்.
ஆனால், அவர்கள் கோருகின்ற சர்வதேச விசாரணை என்பது தாக்குதல் நடத்தியவர்கள் யார், அவர்களை இயக்கியவர்கள் யார் என்பதைக் கண்டறிவதற்கான
விசாரணை.
சொல்லப் போனால் அது சர்வதேச உதவியின்றி செய்யவும் முடியாத ஒன்று.
ஏனெனில், அந்த தாக்குதலுக்கு சர்வதேச பயங்கரவாத இயக்கம் ஒன்று உரிமை கோரியிருந்தது.
தாக்குதல் நடத்தியவர்கள் தங்களை அந்த இயக்கத்தின் ஆதரவாளர்களாக அல்லது அந்த இயக்கத்தின் இலட்சியங்களை தொடர்பவர்களாக அறிவித்திருந்த காணொலி பதிவும் பொதுவெளியில் இருக்கின்றது.
இப்போது சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம், இந்த தாக்குதலை- உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தியது கோட்டாபயவை தேர்தலில் வெற்றிபெற செய்வதற்காக என்று சொல்லப்பட்டிருக்கின்றது.
ஆக, கோட்டாபயவுக்கும் முஸ்லிம் பயங்கரவாத இயக்கத்துக்கும் என்ன தொடர்பு இருக்கின்றது? அப்படி தொடர்பு இல்லை என்றால் எதற்காக அந்த ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் இந்தத் தாக்குதலுக்கு உரிமை கோரியது என்பது போன்ற விடயங்களை நாம் விரும்பினாலும் அதாவது இந்த நாடு விரும்பினாலும் தனியாக செய்ய முடியாது.
அதாவது இந்தத் தாக்குதல் பற்றியும் அதன் பின்னணி பற்றியும் அசாத் மௌலானா தெரிவித்த விடயங்களை விசாரணை செய்வதற்கு சர்வதேச விசாரணை கோரப்படுகின்றதே தவிர, சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இதனை விசாரிக்க வேண்டும் என்று இதுவரை யாரும் கோரியதாக தெரியவில்லை.
தமிழ் மக்கள் இறுதி யுத்தத்தில் நடந்த கொடுமைகளை – இனப்படுகொலை பற்றிய விசாரணை கோருவதற்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக
சர்வதேச விசாரணை கோருவதற்கும் அடிப்படையில் உள்ள வேறுபாட்டை நமது சட்ட மேதைகள் உணர்ந்ததாக தெரியவில்லை.
அதுவல்ல இன்று நமக்கு உறுத்துகின்ற விடயம்.
சனல் 4 இந்த விடயத்தை பேசுபொருள் ஆக்கியதிலிருந்து அந்த விடயமே நாட்டில் பேசு பொருளாகியிருந்தது.
இனி அது எத்தனை மாதங்களுக்கு கொண்டுசெல்லப்படும் என்பது தெரியவில்லை.
ஆனால், அந்த விடயம் பேசுபொருளானதிலிருந்து நாட்டின் கவனம் அதில் மட்டுமே இருக்க, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவோ, நாட்டை பொருளாதார நெருக்
கடியிலிருந்து மீட்டெடுக்க தன்னால் என்னென்ன எல்லாம் செய்யமுடியுமோ அதனை எல்லாம் செய்துகொண்டு போய்க் கொண்டே இருக்கின்றார்.
அடுத்த மாத இறுதியில் சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கட்ட கடன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் நிதி விவகார ஆலோசகரும் நிதி அமைச்சின் முன்னாள் செயலாளருமான கலாநிதி சமரதுங்கவுக்கு நெருங்கிய வட்டாரங்களோ, பெரும்பாலும் அடுத்த மாதமே நாடு மீண்டு எழுந்துவிடும் என்று அவர் நம்பிக்கை கொண்டிருப்பதாக தெரிவித்தது.
பல வருடகால யுத்தத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்தவர் என்று சிங்கள மக்கள் மகிந்த ராஜபக்ஷவை இன்றும் யுத்த வெற்றி நாயகனாக கொண்டாடுவதுபோல பொருளாதார நெருக்கடியிலிருந்த நாட்டை- வங்குரோத்து அடைந்திருந்த நாட்டை – ரணில் விக்கிரமசிங்கவே மீட்டெடுத்தார் என்று நம்புகின்ற அல்லது கொண்டாடுகின்ற நிலமை ஒன்று நெருங்கிவருகின்றது என்று நம்பும் ஜனாதிபதி அதுவரை நாட்டை இதுபோன்ற வேறு பிரச்னைகளோடு கொண்டு செல்லவே
விரும்புவார் என்பது தெரிந்ததே.
தாக்குதல் பற்றிய சர்வதேச விசாரணை என்பது ரணில் விக்கிரமசிங்கவை எந்த வகையிலும் பாதிக்கப்போவதில்லை.
சனல் 4 சொல்வது தான் சரியானது என்று விசாரணைகளில் தெரியவந்தாலும் அதனால் ரணிலுக்கு எந்தப்பாதிப்பும் வரப்போவதில்லையே.!

  • ஊர்க்குருவி.