நண்பர் ஒருவர் ஒரு காணொலி ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் ஒரு பாட்டுக்கு தமிழ் கட்சி ஒன்றின் தலைவர் ஒருவர் கம்பீரமாக நடந்து வந்துகொண்டிருந்தார். இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக பாராளுமன்றத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதியாக இருந்தவர் அவர். ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய்களை பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவுத்திட்ட நிதியில் பெற்று மக்களுக்கு ‘சேவை’ செய்தவர் அவர்.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆறாயிரத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்று எம்.பி.யாகி இருப்பவர். தன்னைப் புகழ்ந்து இளைஞர்கள் பாடிக்கொண்டிருக்க அதனை ரசித்துக் கொண்டிருக்கிறார். அரசியல் வாதிகள் என்றாலே அதுகும் நீண்டகால அரசியல்வாதிகளுக்கு வெட்கம் இருக்காது தான். நேற்றுக் காலை இன்னுமொரு நண்பர் ஒரு காணொலியை அனுப்பினார்.
அதே தலைவரின் பேட்டி அதில் இடம்பெற்றிருக்கிறது. கிளிக்பண்ணி பார்க்க மனம் தரவில்லை. ஆனாலும் அந்த காணொலிக்கு போடப்பட்ட தலைப்பு உள்ளே இருப்பது என்ன என்பதை பேசியது. ‘வீட்டுடன் இணையத் தயார். தலைவர் காட்டிய வீட்டு சின்னத்திற்கே மக்கள் வாக்களித்துள்ளனர்.’ இதுவே அந்த காணொலிப் பேட்டிக்கு தலைப்பு. வடக்கில் வீட்டுக்கு வாக்களித்தவர்கள் தொண்ணூறு ஆயிரம்பேர். அவர்களின் சங்குக்கு வாக்களித்தவர்கள் நாற்பத்தி மூவாயிரம்பேர்.
ஆனால் திசைகாட்டிக்கு வாக்களித்தவர்கள் ஒரு லட்சத்தி இருபதாயிரம் பேர். இவருக்கு தலைவர், நாம் அறிந்து சிறிசபாரத்தினம் தான். சிலவேளை தமிழ் மக்கள் பெருவாரியாக திசைகாட்டிக்கு வாக்களித்திருப்பது இவரது தலைவர் மேலே இருந்து காட்டியதாலேயோ தெரியவில்லை. அல்லது அவர்களுக்கு வாக்களித்த நாற்பதாயிரம் பேரும் தலைவரின் வழிகாட்டலை ஏற்றுக்கொள்ளவில்லை என்கிறாரோ?