இப்படியும் நடக்கிறது

0
157

பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடு குறித்து நேற்று இந்தப் பத்தியில் குறிப்பிட்டிருந்தேன்.
பாதுகாப்பு அமைச்சுக்கு வருடா வருடம் அதிக நிதி ஒதுக்கப்படுவது குறித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் பாராளுமன்றில் உரையாற்றிய
போது அது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.
இது குறித்து நேற்று இந்தப்பத்தியில் குறிப்பிட்டிருந்தேன்.
அதனை படித்துவிட்டு தெற்கின் ஊடகவியலாளர் ஒருவர், ‘அவர் அது குறித்தாவது பேசினார், ஆனால் இன்னுமொரு தலைவர் தமிழில் பேசியபோது ‘மாவீரர் தினத்தை குழப்புவதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் பற்றி தமிழில் உணர்ச்சிபொங்க உரையாற்றினார், ஆனால் அவர் சிங்களத்தில் உரையாற்றிய போது என்ன கூறினார் என்பதை ஓர் ஊடகமும் கண்டு கொள்ளவில்லையே ஏன்?’ என்று கேட்டார்.
அப்போது அந்த தலைவர் கூறியது ஞாபகத்திற்கு வந்தது.
அவர் ஒரு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சித் தலைவர்.
ஆங்கிலத்திலும் நன்றாக பேசக்கூடியவர்.
அவரிடம் முன்னர் ஒருதடவை கேட்டேன், ‘நீங்கள் ஏன் நமது பிரச்சினைகளை ஆங்கிலத்தில் அங்குள்ள சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக பேசுவதில்லை.’ என்று.
அதற்கு அவர் சொன்னார், ‘நாங்கள் பேசத் தொடங்குகின்றபோதே அங்குள்ளவர்கள் எழுந்து சென்றுவிடுகின்றார்கள்.
நாங்கள் பேசுவது தமிழர்களுக்காகத்தானே? அதனால்தான் தமிழில் பேசுகின்றோம்’ என்று, இப்போதெல்லாம் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழில் பேசினால்தான் அது தமிழ் ஊடகங்களில் செய்தியாக வெளிவருகின்றது.
வேறு மொழிகளில் பேசினால் அது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு பெரும்பாலானவை வெளிவருவதில்லை.
அதற்கு காரணம் பல மொழிகளை தெரிந்த ஊடகவியலாளர்களுக்கு இருக்கும் தட்டுப்பாடுதானோ தெரியவில்லை.
அதனால்தான் அன்று பாராளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் நமது எம்.பி ஒருவர் சிங்களத்தில் ஆற்றிய உரையின் சாராம்சம் எதுவும் செய்தியாக வெளிவரவில்லை.
மும்மொழிகளிலும் பேசும் ஆற்றல் உடைய அவர் எப்போது பேசினாலும், தமிழில் பேசுகின்ற விடயங்களை சிங்களத்தில் திரும்ப சொல்வதில்லை.
அதேபோல சிங்களத்தில் பேசுகின்ற விடயங்களையும் தமிழில் பேசுவதில்லை.
அது எதற்காக என்பதை அவர்தான் அறிவார்.
ஆனால் அன்றைய பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் அவர் சிங்களத்தில் பேசியபோது, இராணுவத்தில் உயர் அதிகாரிகள் நல்ல சம்பளத்தைப் பெறுகின்ற அதேவேளை பல வசதிகளையும் பெற்று வருகின்ற போதிலும், சாதாரண படை சிப்பாய்கள் மிகக்குறைந்த சம்பளத்திலேயே பணியாற்றுவதாகவும் அவர்களுக்கான வசதிகள் செய்யப்படவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
பனாகொடை ராணுவமுகாமில் படையினருக்கு படுக்க மெத்தை இல்லை என்ற அவரின் ஆதங்கமும் கவனத்திற்குரியது தான்.
கோட்டாபாய ராஜபக்ஷ முன்னர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தபோது, அவர்களை (படையினரை) மேசன் வேலைக்கும், தச்சு வேலைக்கும், வீதிகளை செப்பனிடும் வேலைகளுக்கும் பயன்படுத்தி அவர்களை வருத்திய போதிலும் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை என்றும்
அவர் படையினருக்காக, அதாவது இராணுவ சிப்பாய்களுக்காக பேசினார்.
அதனை அவர் பேசியபோது சிங்களத்தில் மாத்திரம் இதனைக் குறிப்பிட்டார்.
ஆனால் தமிழில் பேசுகின்ற போது, மாவீரர் தினத்தை குழப்புவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளைக் கண்டித்ததுடன், அதற்காக வீராவேசமாக குரல்கொடுத்தார்.
ஆனால் அதனைக் குழுப்புவதிலும் படையினரும் சம்பந்தப்பட்டிருக்கின்றனர் என்றுதான் தமிழர் தரப்பில் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது.
எந்த படையினருக்கு வசதிகள் செய்யப்படவேண்டும் என்று அவர் கோரினாரோ அதேபடையினர் மீதுதான் இங்கு குற்றச்சாட்டும் வைக்கப்படுகின்றது.
எதுவோ, படையினருக்காக குரல்கொடுப்பது நல்ல விடயம் தான், பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பான விடயத்தில் பேசவேண்டிய விடயம் தான், இதுபோன்ற விடயங்களை இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவோ, அல்லது கடற்படை அதிகாரியாக இருந்த சரத் வீரசேகரவோ பேசாதபோது நமது எம்.பி.
ஒருவர் பேசியது சிங்கள மக்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும்.
இதுபோன்ற அவரது பேச்சுக்கள், அவரை சிங்கள மக்கள் மத்தியிலும் பிரபல்யப்படுத்தும் என்பது அவருக்கு தெரியாததல்லவே.
அதற்காகத்தான் அவர் பேசுகின்றார் என்றால், அவர் எதற்காக சிங்கள மக்கள் மத்தியில் பேசுபொருளாகவேண்டும் என்று நினைக்கின்றார் என்பதற்கு ஆராய்ச்சி தேவையில்லைத்தான்.
இந்த வேளையில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் (தமிழரசில்) போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.பி. ஆகிய, சிங்கள இனத்தவரான பியசேன கண்முன்னே தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.!

  • ஊர்க்குருவி.