ஒருநாள் ஒரு விவசாயி, தன் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைப் பறித்து மூட்டைக் கட்டி மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு அவற்றை விற்க நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.
அப்போது, வீதியின் ஒரு திருப்பத்தில் வண்டியின் ஒரு சில்லு பள்ளத்தில் போய் விழ, வண்டி சாய்ந்துவிட்டது.
‘கடவுளே! இது என்ன சோதனை? எனக்கு உதவி செய்!’ என்று அவன் மனமுருக வேண்டினான்.
கடவுள் உதவிக்கு வரவில்லை.
இரண்டாம் முறை, மூன்றாம் முறையென பலமுறை கடவுளை உதவிக்கு அழைத்தும், அவர் வரவில்லை. வேறு யாரும் உதவிக்கு வரவில்லை.
கடைசியில், பள்ளத்தில் விழுந்திருந்த வண்டியின் சில்லை தானே தூக்கி வீதியில் நகர்த்தி வைக்க முயற்சி செய்தான்.
என்ன ஆச்சரியம்? தனியாக தன்னால் தூக்க முடியாது என்று அவன் நினைத்திருக்க, எளிதாக சில்லு பள்ளத்திலிருந்து எழுந்து விட்டது.
அப்போதுதான், அவன் தன் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு வழிப்போக்கன் தான் சில்லை தூக்குவதில் உதவி செய்தமை தெரியவந்தது.
அவனை வணங்கிய அவன், ‘மிகவும் நன்றி ஐயா! கடவுள் செய்யாத உதவியை நீங்கள் செய்துவிட்டீர்கள்!’ என்றான்.
‘கடவுளே! உதவி செய்! என்று சொல்லியபடிகையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தால், கடவுள் எப்படி உதவி செய்வார்? நீயே முயற்சி செய்தால்தான், கடவுள் உனக்கு உதவி செய்வார்.
அதற்கு நீதான் அவருக்கு, ஒரு வாய்ப்பு தர வேண்டும்!’ என்று கூறிவிட்டு அந்த ஆள் தன் வழியே நடந்தான்.
புலம்பெயர் நாடுகளிலிருந்து சில அமைப்புக்களின் பிரதிநிதிகளும், தாயகத்திலிருந்து சிலரும் புதுடில்லிக்குச் சென்றிருப்பது நாம் அறிந்ததுதான்.
அதுபற்றி இந்தப் பத்தியிலும் எழுதியிருந்தேன்.
எந்தவித முன்அறிவிப்பும் இன்றி இப்படியொரு குழு புதுடில்லி சென்ற பின்னர்தான் அவர்கள் அங்கு சென்றதே தெரியவந்தது.
அதனால், யார் ஏற்பாட்டில், அவர்கள் சென்றார்கள் என்பது தெரியாமலே இருந்துவந்தது.
அதிலும் பலர் தமிழர் பிரச்னை தொடர்பாக பல்வேறு கருத்துக்களைக் கொண்டவர்கள்.
இனப்பிரச்னைக்கு தீர்வாக இந்தியா தொடர்ந்து பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தையே வலியுறுத்தி வரும் நிலையில், பதின்மூன்றை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்ற கருத்தைக் கொண்டவர்களும் அந்தக் குழுவில் இடம்பெற்றிருப்பது பயனுள்ளதாக அமையப் போவதில்லை என்ற எண்ணத்தை பலம் கொண்டிருந்த போதிலும், அந்தக் குழுவிலிருந்த முன்னாள் முதலமைச்சரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான விக்கினேஸ்வரன், இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்த இந்தியா உதவவேண்டும் என்ற கோரிக்கையை அங்கு சென்றதும் முன்வைத்தது பலருக்கும் நம்பிக்கையைத் தந்தது.
அவர்கள் தமது விஜயத்தின் நோக்கம், இந்திய கொள்கை வகுப்பாளர்களையும் கருத்துருவாக்கிகளையும் சந்தித்து இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் இன்றைய அவலங்களை சொல்வதும், அதன்மூலம் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கச் செய்வதும்தான் அவர்களின் விஜயத்தின் நோக்கம் என்பதை தெரிவித்திருந்தனர்.
அங்கு சென்றுள்ள அந்தக் குழுவினர், தொடர்ந்து பல்வேறு தரப்பினரையும் சந்தித்து இங்குள்ள நிலைமைகளை விளக்கிவருவதாக அவர்களுடன் தொடர்பில் உள்ள ஓர் உள்ளூர் அரசியல்பிரமுகர் தெரிவித்தார்.
வெறுமனே, இந்தியப் பிரதமருக்கு இங்கிருந்து கடிதங்களை அனுப்பிவிட்டு, காத்திருப்பதை விடுத்து இது போன்ற விஜயங்களை மேற்கொண்டு நமது நிலமையை எடுத்துச் சொல்வது நல்லதுதான்.
இந்த விஜயத்தின்போது, அவர்கள் முக்கிய தலைவர்களைச் சந்திக்காவிட்டாலும், அரசாங்கத்தை இயக்குகின்ற ‘சவுத்புளொக்’ பிரமுகர்களைச் சந்தித்தாலே அது தமிழ் மக்களுக்கு பயனுள்ளதாகத்தான் அமையும்.
மேலே சொன்னதுபோல, கடவுளே எனக்கு உதவி செய்… உதவி செய் என்று வேண்டிக்கொண்டு பேசாமல் இருந்தால், கடவுள் வந்து உதவி செய்யயப்போவதில்லை.
நாமும் நம்மாலான முயற்சியை எடுத்தால் தான் கடவுளும் நமக்கு உதவிசெய்ய முன்வருவார் என்பதை, அந்தக் குழுவினர் உணர்ந்து கொண்டிருப்பார்களோ என்னவோ.!
- ஊர்க்குருவி.