இப்படியும் நடக்கிறது

0
144

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பற்றி பலதடவைகள் இந்தப் பத்தியில் எழுதியிருக்கின்றோம்.
ஒரு விடயத்தை அவர் எப்படியெல்லாம் கையாள்வார் என்பதை அவருக்கு நெருக்கமானவர்கள் பலதடவைகள் கூறியதை இந்த ஊர்க்குருவி நன்கு அறிவார்.
அவர் பிரதமராக இருந்தபோது, அதாவது கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது மகிந்தவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, ரணிலை பிரதமராக நியமித்திருந்தபோது – அப்போது மத்திய வங்கி ஆளுநராக இருந்த கலாநிதி நந்தலால் வீரசிங்கவின் பதவியை நிரந்தரமாக்குவதா அல்லது அவருக்கு பதிலாக புதியவரை நியமிப்பதா என்ற சர்ச்சை ஏற்பட்டது.
அவரை பதவியில் தொடர்ந்து இருக்க அனுமதித்தால் அவர் ஓய்வுபெறும்வரை அவரை பதவியில் இருக்க அனுமதிக்கவேண்டியிருக்கும்.
ஆனால், அவர் அந்தப் பதவியில் தொடர்வது ரணிலுக்கு விருப்பமிருக்கவில்லை.
அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வாழ்ந்துவந்த அவரை வலுக்கட்டாயமாக அழைத்துவந்து அந்தப் பதவியில் அமர்த்தியிருந்த கோட்டாபய, அவரை
நீக்குவதற்கு விரும்பாததால் அவரது பதவி அப்போது நிரந்தரமாக்கப்பட்டது.
அதனால் வேறு வழியின்றி அவரை அந்தப் பதவியில் தொடர அப்போதைய பிரதமரான ரணில் அனுமதிக்க வேண்டியதாயிற்று.
ஆனால், இன்று மத்திய வங்கியின் ஊழியர்களுக்கு வரலாற்றில் இல்லாதவாறு சம்பள அதிகரிப்பை அனுமதித்துவிட்டு, இப்போது அதன் ஆளுநருக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு அலை ஏற்படுவதற்கு ரணிலே சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்று அண்மையில் அவரை நன்கு அறிந்த ஒருவர் தெரிவித்ததுதான்
அந்தச் செய்தியை படித்தபோது ஞாபகம் வந்தது.
அண்மையில் சிறிலங்கா குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான அக்கட்சிக் குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் சந்தித்திருந்தமை பற்றிய செய்திகளை இந்தப் பத்தியில் சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தோம்.
அந்தச் சந்திப்பின்போதும், விரைவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றைக் தான் கூட்டவிருப்பதாகவும், அந்தக் கூட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்தின்
உதவியோடு தற்போது நாட்டில் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டத்தை தொடர்வதா அல்லது, அதனைக் கைவிடுவதா என்பது குறித்து ஆராய்வதற்கு
இருப்பதாக தெரிவித்திருந்தார்.
ஆனால், தற்போது இலங்கைக்கு வந்து, கடன் மறுசீரமைப்பு குறித்து ஆராய்ந்துவரும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் எதிரணி அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்திக்க வைப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார் ஜனாதிபதி.
எதிர்வரும் பதினோராம் திகதி இந்த சந்திப்பு நடக்கவிருக்கின்றது.
சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுடன் எதிர்க் கட்சியினரைச் சந்திக்க வைத்து அவர்களின் சந்தேகங்களை போக்குவது ஜனாதிபதியின் நோக்கமாக இருக்கலாம்.
ஆனால் அதற்காக அவர் தெரிவுசெய்திருக்கும் தலைவர்கள் பட்டியல்தான் இப்போது ரணிலின் உள்நோக்கம் என்ன என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றது.
அந்தச் சந்திப்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசாவும், ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவும்
அழைக்கப்பட்டிருக்கின்றனர்.
பொருத்தமானவர்கள்தான்.
ஆனால்,அவர்களோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் என்று கூறி அவர் அழைப்பு விடுத்திருப்பது தமிழரசு கட்சியின் புதிய தலைவராக தெரிவு
செய்யப்பட்டபோதிலும் தலைமைப் பதவியை பொறுப்பேற்க முடியாமல் சர்ச்சையில் இருக்கும் சிவஞானம் சிறீதரன் அவர்களையே.
இதுகாலவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்றால் அது இரா. சம்பந்தன் அவர்கள் மாத்திரமே.
இன்று கூட்டமைப்பிலிருந்து தமிழ் அரசு கட்சி வெளியேறிவிட்டாலும், அதன் பங்காளிகளாக இருந்தவர்கள் கூட இன்றுவரை சம்பந்தன் மீது மதிப்பும் மரியாதையையும் வைத்தே இருக்கின்றனர்.
அப்படியிருக்கையில் சம்பந்தனுக்கு அழைப்பு விடுக்காமல் சிறீதரனுக்கு அழைப்பு விடுத்திருப்பதன் நோக்கத்தை நாம் இலகுவாகப் புரிந்துகொள்ளலாம்.
ஆனால் அவரின் நோக்கத்தை புரிந்துகொண்டதால், அந்த அழைப்பை நிராகரித்திருக்கிறார் சிறீதரன்.
சம்பந்தன் தனது வயோதிபம் காரணமாக இதுபோன்ற கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாதவராக இருந்தாலும் அழைப்பை அனுப்பும்போது அவருக்கே அனுப்பியிருக்கவேண்டும்.
இதுவரை தமிழ் கட்சிகளுடனான சந்திப்புக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்த சந்தர்ப்பங்களில் எல்லாம் சம்பந்தன் கலந்து கொள்ளாமல் விட்டதில்லை.
இந்தக் கூட்டத்திற்கும் சம்பந்தனுக்கே அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவேண்டும்.
அவர் தன்னால் வரமுடியாத நிலை இருந்தால் அவர் தனது சார்பில் யாரையேனும் அனுப்பியிருக்க முடியும்.
அதைவிடுத்து, சிறீதரனையும் சம்பந்தனையும் மோதவிடுவதற்கு அவர் எடுத்த முயற்சியை சிறீதரன் சாதுரியமாக முறியடித்திருக்கிறார் என்றே தெரிகின்றது.

-ஊர்க்குருவி.